ADDED : செப் 01, 2024 11:12 AM

மண்வாசனை மாறாத பாரம்பரிய கிராமிய நிகழ்ச்சிகளுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. அந்த வகையில் கிராமத்து இளைஞர்களுக்கு ராமாயண காவியத்தை மையமாக வைத்து அதை பாடல்களில் பாடி இலவசமாக ஒயிலாட்டம் கற்றுத்தருகிறார் ராமநாதபுரம் மாவட்டம் நயினாமரைக்கான் கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன்.
அம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவத்தில் தொடர்ந்து பத்து நாட்களும் இரவு நேரங்களில் ஆடப்படும் ஒயிலாட்டம் கலை நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
முளைப்பாரி மற்றும் அம்மன் கோயிலை சுற்றி ஆடக்கூடிய கும்மியாட்டத்திலும் பல்வேறு வகைகள் உள்ளன. கைகளைத் தட்டி இடுப்பை சுழற்றி அங்குமிங்கும் ஆடும் 'தானார் கண்ணே! தானே கண்ணே' பாடலுக்கு பெண்கள் முழு ஈடுபாட்டுடன் அர்ப்பணித்து ஆடுவது வழக்கம்.
சிறுவர்கள் முதல் இளைஞர்கள், வயதானவர்கள் வரை ஒயிலாட்டம் ஆடுவது கிராமத்தில் கைவந்த கலை. இதற்காக முறையாக பயிற்சி எடுத்துக் கொள்ளும் போது அது சிறப்பு பெறுகிறது.
நாற்பதாண்டுகளாக கிராமப்புற இளைஞர்களுக்கு ஒயிலாட்டம் பயிற்றுவித்து கிராமத்து அம்மன் கோயில் முளைப்பாரி உற்ஸவங்களில் ஆடி வரும் 'வஸ்தாபி' ராதாகிருஷ்ணன் கூறியதாவது: ஒயிலாட்டத்திற்கு பிரதானமாக கையில் சிறிய கைக்குட்டை வைத்து ஆட வேண்டும். ஒவ்வொரு பாடலுக்கு இடையேயும் 17 வகையான ஸ்டெப்புகளை ஆட வேண்டும். பாடல் முழுமை பெறும் போது விசில் அடித்து முடிக்க வேண்டும்.
பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என இலங்கையில் போர் முடித்து வெற்றி வாகை சூடி ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் வரை ராமாயண பாடல்கள் பாடுகிறோம். பாடல்களைப் பாடும் போது அதற்கேற்ப தபேலா, மிருதங்கம், ஜால்ரா உள்ளிட்ட இசைக்கருவிகள் வாசிக்கப்படுகின்றன. ஒயிலாட்டம் உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்வு அளிக்கக்கூடிய நடனம். உச்சி முதல் பாதம் வரை அனைத்து உறுப்புகளுக்கும் நல்ல பயிற்சி அளிக்கிறது.
கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு விழாக்காலங்களில் இலவசமாக பயிற்சி அளிக்கிறோம். என்னதான் நவீன நடனங்கள் வந்தாலும், கிராமிய மணம் வீசும் இவ்வகையான நடனங்களுக்கு எப்போதுமே வரவேற்பு உள்ளது என்றார்.