/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
கதாகாலட்சேபத்தின் முகவரி விசாகா ஹரி
/
கதாகாலட்சேபத்தின் முகவரி விசாகா ஹரி
ADDED : செப் 01, 2024 11:13 AM

அமெரிக்கா, ஐரோப்பியா, அரபு நாடுகளுக்கு மத்தியில் இந்தியா தலைநிமிர்ந்து, தனித்துவம் மிக்கதாக விளங்குவதற்கு நமது கலை, கலாசாரம், பண்பாடு முக்கிய காரணம். பல கலைகள் இந்தியாவின் பெருமையை பறைசாற்றிக் கொண்டு உள்ளன. அதில் ஹரிகதா அல்லது கதாகீர்த்தனன் என்ற பழமைவாய்ந்த கதாகாலட்சேபக் கலையை அழிந்து விடாமல் சில கலைஞர்கள் காப்பாற்றி வருகின்றனர். அப்படி இக்கலையை 25 ஆண்டுகளாக இந்தியா மட்டுமின்றி சர்வதேச நாடுகளிலும் கொண்டு சேர்த்து வருகிறார் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த விசாகா ஹரி.
இவர் மட்டுமின்றி கணவர் ஹரிஜி, மகன் ராஜகோபாலன்ஹரி, மாமானார் கிருஷ்ணபிரேமிசுவாமிகள் என குடும்பமே ஹரிகதா கதாகாலட்சேபத்தில் பெயர் பெற்றவர்கள்.
தஞ்சாவூரில் பிறந்தாலும் விசாகாஹரி வளர்ந்தது, படித்தது சென்னையில். ஹரிஜியுடன் திருமணம் முடிந்து ஸ்ரீரங்கத்தில் செட்டிலானார். படிக்கும் காலத்திலேயே பல சாதனைகளை புரிந்துள்ள விசாகா ஹரி பிளஸ் 2 வணிகவியல் பாடத்தில் மாநில ரேங்க், பட்டய கணக்காளர் (சி.ஏ.,) பவுண்டேஷன் தேர்வில் அகில இந்திய அளவில் 25வது இடம், சி.ஏ., இன்டர்மீடியேட்டில் அகில இந்திய அளவில் 30வது ரேங்க், சி.ஏ., பைனல் தேர்வில் அகில இந்திய அளவில் 3வது ரேங்க் பெற்றுள்ளார்.
சிறு வயதில் இசை ஆர்வத்தால் படித்து கொண்டே கர்நாடக சங்கீதமும் கற்றார். சங்கீத வித்வான் லால்குடி ஜெயராமன் இவரது குரு. இளம் வயதிலேயே கர்நாடக சங்கீத கச்சேரிகளை நடத்தி வந்தார். கதாகாலட்சேப கலையில் சிறந்து விளங்கிய ஹரிஜியை திருமணம் செய்த பிறகு கணவரையே குருவாக ஏற்று அக்கலையையும் கற்றார். முதலில் கணவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்ததுடன் பிறகு தனியாக கதாகாலட்சேபத்தை 25 ஆண்டுகளாக செய்து வருகிறார்.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் டில்லி, கொல்கட்டா, மும்பை என இவரது நிகழ்ச்சி நடக்காத முக்கிய இடங்களே இல்லை. ஸ்ரீரங்கத்தில் விஜய்ஸ்ரீ ஸ்கூல் ஆப் ஹரிகதா என்ற பாடசாலையை துவக்கி கதாகாலட்சேப கலையை பயிற்றுவித்தும் வருகிறார்.
இவரது கலைச்சேவையை பாராட்டி சென்னை கார்த்திக் பைன் ஆர்ட்ஸ், பாரதிய வித்யா பவன் உள்ளிட்ட அமைப்புகள் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியுள்ளன. தமிழக அரசு 2012ல் கலைமாமணி பட்டம் வழங்கியது. மும்பை சண்முகானந்தா சபா தேசிய ஆளுமை விருது வழங்கியதுடன், இந்தியாவின் சிறந்த 7 திறமையான பெண் கலைஞர்களில் இவரையும் தேர்வு செய்தது. பெங்களூரு ராம் லலித்கலா மந்த்ரா - சங்கீத வேதாந்தா துர்ரீனா, சென்னை பாரத் கலாச்சார் - விஸ்வகலா பாரதி, அகில பாரத சாது சங்கம்- தியாகராஜா பிரதிவாணி, மத்திய அரசு - யுவ புரஸ்கர், ஸ்ரீ கிருஷ்ண கான சபா - ஹரிகதா சூடர்மணி என எண்ணற்ற விருதுகள் இவரது கலைச்சேவையை பறைசாற்றுகின்றன.
தற்போது தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலை விசிட்டிங் பேராசிரியராகவும், மத்திய அரசு சுவட்ச் பாரத் திட்ட திருச்சி துாதுவராகவும் உள்ளார். புற்றுநோயாளிகள், சிறப்பு குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு மற்றும் சண்முகானந்தா சபாவில் ராமர் கோயில் கட்ட கலைநிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டி வழங்கியுள்ளார். இவரது கலைச்சேவைக்காக சமீபத்தில் மதுரை தமிழ் இசை சங்கம் பொற்கிழி வழங்கி கவுரவித்தது.
மதுரை வந்த விசாகா ஹரி கூறியதாவது: இசை குடும்பம் என்பதால் இசை மீது எப்போதுமே ஈர்ப்பு உண்டு. தமிழில் பாடினாலும் மக்களுக்கு சில நேரங்களில் புரிவதில்லை. கதைகளையும் சேர்த்து பாட்டாக தந்த பட்சத்தில் எளிதாக அவர்களை சென்றடைந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக கதை கேட்பர். ராமாயணம், பாகவதம், ஆழ்வார்கள், நாயன்மார்கள், தேச தலைவர்கள் கதைகளை பாடல்களுடன் தருவதால் மக்கள் விரும்பி ரசிக்கின்றனர்.
ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு கதை, பின்னணி உண்டு. அதை இக்கலை மூலம் மக்களுக்கு கொண்டு செல்ல மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தால் அவற்றின் பெருமைகளை எல்லோரும் அறிய முடியும். ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், பல்லவ பேரரசர்கள் என மன்னர்கள், காவிரி, வைகை என நதிகள், ஒவ்வொரு நகரங்கள் என எல்லாவற்றுக்குமே கதை உண்டு. அவற்றையும் கதாகாலட்சேபம் மூலம் மக்களிடம் சேர்ப்பது தான் ஆசை என்றார்.