/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
18 மாநிலங்களுக்கு தாய், பூனையுடன் காரில் பயணம்: அம்மாவுக்கு அழகான நினைவுகளை தரும் தனயன்
/
18 மாநிலங்களுக்கு தாய், பூனையுடன் காரில் பயணம்: அம்மாவுக்கு அழகான நினைவுகளை தரும் தனயன்
18 மாநிலங்களுக்கு தாய், பூனையுடன் காரில் பயணம்: அம்மாவுக்கு அழகான நினைவுகளை தரும் தனயன்
18 மாநிலங்களுக்கு தாய், பூனையுடன் காரில் பயணம்: அம்மாவுக்கு அழகான நினைவுகளை தரும் தனயன்
ADDED : மே 05, 2024 10:46 AM

பெற்றோரை கடைசி காலத்தில் பார்த்துக்கொள்வது மட்டுமின்றி அவர்களின் ஓய்வு காலத்தில் நினைவு கூர்ந்து பார்ப்பதற்கும், பேசுவதற்கும் அழகான நினைவுகளை கொடுப்பதும் நம் கடமை என 60 நாள்களில் 18 மாநிலங்களை தாயுடன் காரில் சென்று பயணித்தார் கிரோகன் ஸ்பாட்.
அவர் அனுபவங்களை நம்முடன் பகிர்கிறார்
என் இயற்பெயர் ராஜ்மோகன். சொந்த ஊர் கும்பகோணம். அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்து பின்னர் டிப்ளமோ முடித்து சென்னையில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்தேன். வேலை செய்து கொண்டே 2019ல் இன்ஜினியரிங் முடித்தேன். பத்து ஆண்டுகளாக பணி செய்த நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறியது. அடுத்து என்ன செய்ய போகிறோம் என்ற யோசனை வரவில்லை.
அப்பா நெசவுத்தொழில் செய்கிறார். எனக்கு திருமணமாகவில்லை. சொந்த வீடு, தேவையான பணம் கையிருப்பு என குடும்ப சூழ்நிலையை கொண்டு வந்ததால் வேலை இழப்பு பற்றி கவலை ஏற்படவில்லை. வேலை நாள்களில் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த விடுமுறை வாய்ப்பு அடுத்து கிடைக்காது.
வீட்டை விட்டு பெரிதாக வெளியே செல்லாத எனது தாய் கஸ்துாரிக்கு அழகான நினைவுகளை கொடுக்க இது தான் சமயம் என நினைத்தேன். பஸ், ரயிலில் பயணம் மேற்கொண்டால் உடல் அசதி ஏற்பட்டு விடும். அதனால் காரில் பயணம் செய்ய திட்டமிட்டேன். காரை படுக்கை வசதி கொண்ட வீடாக மாற்றினேன்.
அம்மாவும் என்னுடன் காரில் பயணம் செய்ய சம்மதித்தார். எங்களுடன் வீட்டில் வளர்க்கும் பூனையையும் அழைத்து கொண்டு பயணத்தை துவங்கினோம். பயணத்திற்கு முன்பு வடமாநிலங்களில் கிடைக்காத மளிகைப்பொருட்கள், சமையல் செய்ய அடுப்பு, பாத்திரங்கள், குளிரை தாங்க ஆடைகள் அனைத்தையும் காரில் சேமித்து வைத்துக்கொண்டோம்.
மாலை 6:00 மணிக்கு மேல் பயணம் செய்யக்கூடாது. நாளை பயணத்தில் எங்கெல்லாம் நிறுத்த வேண்டும் என்பதை முந்தைய நாள் திட்டமிடல், எங்கு தங்க வேண்டும், சி.சி.டி.வி., கேமரா உள்ள இடத்தில் மட்டுமே காரை பார்க்கிங் செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளை எனக்கு நானே வகுத்து கொண்டேன்.
இதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தினால் அவர்களும் தங்களின் பெற்றோருக்கு அழகான நினைவுகளை கொடுப்பதற்கு வழிவகை செய்யும் என்பதற்காக யூடியூப் சேனலில் பதிவிடத்துவங்கினேன். சென்னையில் இருந்து துவங்கி கர்நாடகா, கோவா, மும்பை, குஜராத், ராஜஸ்தான் வழியாக சண்டிகர், ஜம்மு காஷ்மீர் உள்பட 18 மாநிலங்களில் பயணத்தை மேற்கொண்டோம்.
மும்பையில் அம்மாவை ஹெலிகாப்டரில் அழைத்து சென்று மும்பை நகரத்தின் அழகை பார்க்க வைத்தது சந்தோஷமாக இருந்தது. பயணத்தில் நிறைய அழகான விஷயங்கள் அவருக்கு நினைவுகளாக கிடைத்தது.
இந்த பதிவுகளை யூடியூப் சேனில் பார்த்த பலரும் பெற்றோரை அழைத்து கொண்டு பயணம் செய்யத்துவங்கி விட்டோம் என கூற துவங்கியது சந்தோஷத்தை ஏற்படுத்தியது.
வட கிழக்கு மாநிலங்களையும் சுற்றி பார்க்க எண்ணம் உள்ளது. தாய் கஸ்துாரிக்கு 64 வயது. மூட்டு வலிக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். சிகிச்சை முடிந்த பிறகு சூரியன் மறையாத நார்வே நாட்டிற்கும், தனித்துவமான இடங்கள் உள்ள நாடுகளுக்கும் அழைத்து செல்லும் திட்டம் உள்ளது. விரைவில் பயணம் துவங்கும் என்றார்.

