sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

விருந்தினர் பகுதி

/

பரதநாட்டியத்திற்கு 15 வயதில் ஒரு குரு

/

பரதநாட்டியத்திற்கு 15 வயதில் ஒரு குரு

பரதநாட்டியத்திற்கு 15 வயதில் ஒரு குரு

பரதநாட்டியத்திற்கு 15 வயதில் ஒரு குரு

1


UPDATED : ஏப் 20, 2025 09:44 AM

ADDED : ஏப் 20, 2025 04:20 AM

Google News

UPDATED : ஏப் 20, 2025 09:44 AM ADDED : ஏப் 20, 2025 04:20 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாட்டிய கலைமகள்... நாட்டிய சிற்பம்... ஒளிரும் சூரியன்... வீர நாட்டிய வித்தகி... நவரச நாயகி... நாட்டிய கலா விஷாதாரா... இன்ஸ்பயரிங் யங் வுமன்... இவை இவர் பெற்ற பட்டங்களின் பட்டியல்... 2022ல் இந்தியன் புக் ஆப் வேர்ல்டு ரிக்கார்ட், ஆசியா புக் ஆப் வேர்ல்டு ரிக்கார்ட், 2023 கலாம் புக் ஆப் வேர்ல்டு ரிக்கார்ட், 2024ல் விரிக் ஷா புக் ஆப் வேர்ல்டு ரிக்கார்ட், ஐன்ஸ்டீன் வேர்ல்டு ரிக்கார்ட்ஸ் என சாதனை பட்டியலும் நீளுகிறது. இவரது வீட்டின் சுவர் முழுவதும் தொங்கும் படங்களும், அலமாரிகளை அலங்கரிக்கும் விருதுகளும் இச்சாதனைக்கு கட்டியம் கூறுகின்றன. இவ்வளவும் 15 வயதிற்குள் என்றால் பாராட்டாமல் இருக்க முடியுமா. அந்த பாராட்டுக்குரியவர் சிவகங்கை மாவட்டம் புதுவயலைச் சேர்ந்த பரத நாட்டிய கலைஞர் நிகிதா ஹரிணி.

அப்பா சசிக்குமார் ரைஸ்மில் நடத்தி வருகிறார். அம்மா ரேவதி குடும்பத்தலைவி. தங்கை பத்மா வர்ஷினி. புதுவயல் மாண்டீசோரி பள்ளியில் படிப்பை துவக்கிய நிகிதா ஹரிணி காரைக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வை எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறார். இரண்டு வயதில் துவங்கிய இவரது பரதநாட்டிய பயணம் 13 ஆண்டுகளாக தங்கு தடையின்றி தொடர்ந்து கொண்டுள்ளது. அதிலும் ஒருபடி மேலே போய் 15 வயதில் 130 மாணவர்களுக்கு பரதநாட்டியம் கற்று தரும் குருவாகவும் உயர்ந்திருக்கிறார். இவரை விட வயதில் மூத்த மாணவியரும் இதில் அடக்கம்.

இத்தனை வயதில் இவ்வளவும் எப்படி சாத்தியமாயிற்று என்ற கேள்விக்கு நிகிதா ஹரிணி மனம் திறந்ததாவது...

சொந்த ஊர் சாக்கோட்டை என்றாலும் தற்போது புதுவயலில் தான் குடியிருக்கிறோம். அப்பா, அம்மா வழி தாத்தாக்கள் சோமசுந்தரம், விஸ்வநாதன் இல்லை என்றால் இந்தளவுக்கு நான் வந்திருக்க முடியாது. தாத்தா சோமசுந்தரம் தவில் வித்வான். கொள்ளு பாட்டி பரதநாட்டிய கலைஞர். இதனால் எனக்கு இரண்டு வயது இருக்கும் போது சோமசுந்தரம் தாத்தா பரதநாட்டிய பயிற்சி பெற ஏற்பாடு செய்தார்.

காரைக்குடி ரம்யா மாஸ்டர் தான் குரு. அவர் மூலம் தான் பரதத்தில் தஞ்சாவூர் ஸ்டைலில் பயிற்சி பெற்றேன். சிறிய வயதிலேயே பள்ளி, கல்லுாரிகள், கோயில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்தார். அன்று துவங்கியது இந்த பயணம்; இன்னும் செல்ல வேண்டிய துாரம் இருக்கிறது.

பரதத்தில் ஈடுபாடு இருந்தாலும் படிப்பை விட்டு கொடுக்க மாட்டேன். பள்ளி முதல்வர் நந்தலால் ஜாங்கிட், துணை முதல்வர் சுப்பிரமணியன், ஆசிரியைகள் மீனா, ஸ்ரீமதி ஆகியோர் கொடுக்கும் உற்சாகம், ஊக்கத்தால் படிப்பையும், பரதத்தையும் தொடர்ந்து வருகிறேன்.

புதுக்கோட்டை ஆவுடையார் பெரிய கோயில், உலகின் ஆதி சிவன் கோயிலான உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் பரதம் ஆடியதை பெரும்பாக்கியமாக கருதுகிறேன்.

தாத்தா சோமசுந்தரம் இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன் என்னை பரதம் ஆடும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி நான் பரதம் ஆடியதை பார்த்து கொண்டிருந்தவர் சில வினாடிகளில் மறைந்ததை மறக்க முடியாது.

தஞ்சாவூர் ஸ்டைலில் பரதத்தில், நடனமும் நளினமும் முக்கியம். இந்த இரண்டும் என் பரதத்தில் சிறப்பாக இருப்பதால் எங்கள் குழந்தைகளுக்கும் பரதம் கற்று தரும்படி பெற்றோர் என்னிடம் கேட்க அதை தட்ட முடியவில்லை. இப்படி தான் தாத்தா பெயரில் சோமசுந்தரம் நாட்டியாலயா என்ற நடன பள்ளியை துவக்கி பரதகலையை மற்றவர்களுக்கும் கற்று கொடுத்து வருகிறேன். பள்ளி நேரம் தவிர தினமும் மாலை, விடுமுறை நாட்களை இப்பள்ளியில் தான் செலவிடுவேன்.

எதிர்காலத்தில் நன்றாக படித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக ஆர்வம் உள்ளது. இதன் மூலம் மக்களுக்கு சமூக சேவைகளை செய்ய முடியும். அத்துடன் பரதகலையையும் விடாமல் எடுத்து செல்வதன் மூலம் பாரத நாட்டின் பாரம்பரியம், பண்பாட்டையும் பறைசாற்ற முடியும்.

புதுக்கோட்டை முன்னாள் கலெக்டர் கவிதா ராமு ஐ.ஏ.எஸ்., போல நானும் பரதநாட்டிய கலையுடன் கலெக்டராக திகழ அந்த ஆடலரசன் அருள்புரிவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இந்த கலையை என்னை போன்ற இளைய தலைமுறையினரிடம் இன்னும் அதிகளவிற்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கிறது. இவ்வாறு கூறினார்.

இவரை வாழ்த்த 94874 44691






      Dinamalar
      Follow us