ADDED : செப் 26, 2026 02:10 PM

மலையாள எழுத்தாளர் சுபாஷ் சந்திரன் எழுதிய, ‘மனிதனுக்கு ஒரு முன்னுரை’ என்ற மலையாள நாவலை, நிர்மால்யா தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்த நாவல் குறித்து அரசினர் தொழிற்பயிற்சி நிலை முன்னாள் முதல்வர் அன்பழகன் மூர்த்தி, தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
சுபாஷ் சந்திரனின் இந்த நாவல், மலையாள இலக்கியத்தில் ஒரு முக்கியமான இலக்கிய படைப்பாகும். கேரளத்தில் உள்ள ஒரு கிராமத்தின் பின்னணியில், அய்யாட்டும்பிள்ளி குடும்பத்தின் மூன்று தலைமுறை வாழ்க்கையை இந்த நாவல் விவரிக்கிறது. ஒரு நூற்றாண்டு கால சமூக, அரசியல் மாற்றங்களின் உன்னதமான குறியீடுகள் இதில் உள்ளன.
இது கடவுள் தந்த நிலம் என்ற தொன்ம கதைக்கு, மாறாக எளிய மக்களின் வியர்வையால் உருவான நிலம் என்பதை, இந்த நாவல் பிரகடனம் செய்கிறது.
வாழ்வின் மிக ஆழமான தத்துவங்கள், பாடுகள், ஏன் மரணத்தின் சோகங்கள் கூட அசாத்தியமான நகைச்சுவையுடன் நாவலில் சொல்லப்படுகிறது.
அய்யாட்டும்பிள்ளி குடும்பத்தின் மூதாதையரான நாரபிள்ளையின் மூர்க்கத்தனம், நிலப்பிரபுத்துவ தோரணை மற்றும் வாயில் வரும் தகாத வார்த்தைகள் அந்த கால சாதிய அதிகார வன்முறையின், நேரடி பிரதிபலிப்பாக இந்த பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது.
வாழ்நாள் முழுவதும் ஒட்டுமொத்த கிராமத்தையும் ஆட்டிப்படைத்த நாரபிள்ளை தன் இறுதிக்காலத்தில் படுக்கையில் வீழ்ந்து, எல்லாராலும் கைவிடப்பட்டு அநாதையாக அனுபவிக்கும் தனிமை மிகக் கொடூரமானது.
ஊரில் வேலை இல்லாமல் சுற்றும், புரணி பேசும் குணம் படைத்த விசித்திரமான கதாபாத்திரமான பாணப்புறம்பு நாணு, ஊரின் கட்டுக்கதைகளை பரப்புபவனின் உரையாடல், நாவலின் மிக முக்கியமான நகைச்சுவையாக மாறுகிறது.
நாவல் வெறும் தத்துவம் பேசாமல், 20-ம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் குழந்தைகளுக்கு வந்த கக்குவான் இருமல், சொறி, சிரங்கு, வயிற்றுப் பூச்சி போன்ற பிரச்னைகளையும் கக்குவான் இருமலின் மரண பயத்தையும் எதார்த்தமாகப் பதிவு செய்கிறது.
அய்யாட்டும்பிள்ளி வீட்டிற்கு வேலைக்கு வரும் பெண்களின் குணாதிசயங்கள், அரட்டைகள் மூலம் அந்தக் குடும்பத்தின் அந்தரங்கங்களையும், சாதிய அடுக்கிற்கு அவர்கள் காட்டும் மறைமுக எதிர்ப்புகளையும் நுணுக்கமாக பதிவு செய்து இருக்கிறார் நுாலாசிரியர்.
நாவலில் வரும் கருணாகரன், நம்பூதிரிப்பாடு போன்ற கேரள முதலமைச்சர்களைப் பற்றிய உரையாடல்கள், கேரளத்தின் நிஜ அரசியல் வரலாற்றையும், காலத்தையும் நமக்கு உணர்த்துகிறது.
ஆரம்பகால கம்யூனிசத்தின் துாய்மையான லட்சியவாதம், காலப்போக்கில் அதிகாரத்திற்கு வந்தவுடன் எப்படி சாதாரண அரசியல் சதுரங்கமாக, சமரசங்களாக மாறியது என்பது இந்த நாவலில், கூர்மையாக நையாண்டி செய்யப்படுகிறது.
அசல் மலையாள வார்த்தைகளின் நயத்தையும், நகைச்சுவையையும் எந்தச் சேதாரமும் இல்லாமல், அசலான தமிழ் நாவலை போல், மொழிபெயர்த்து இருக்கிறார் நிர்மால்யா. இது போன்ற மலையாள படைப்புகள் தமிழுக்கு வந்தால் தமிழ் இலக்கியம் வளம் பெறும்.
