ADDED : மே 26, 2024 11:12 AM

ஒவ்வொருவருக்குள் ஒளிந்திருக்கும் திறமையை கண்டு கொள்பவர்கள் தான் வெற்றியாளராக வலம் வருகின்றனர். அந்த வரிசையில் மீன் பிடிக்கும் தொழில் செய்யும் வாலிபர் தனக்கு பிடித்த சிலம்பம், அடிமுறை, குத்து வரிசை, வளரி ஆகிய தமிழர் பாரம்பரிய கலைகளை கற்று தேசிய சாதனை புரிந்து பாராட்டை பெற்றுள்ளார். மீன்பிடி தொழில் போக மீதி நேரத்தில் இலவசமாக மாணவர்களுக்கு சிலம்பக்கலையை கற்றுத்தருகிறார் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த 20 வயதான டி.நகசோன்.
இவர் 2022ல் புது டெல்லியில் பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் நடந்த தேசிய சிலம்ப போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். அதே ஆண்டில் கேரளாவில் யங் ஸ்போர்ட்ஸ் ஆப் இந்தியா சார்பில் நடந்த ஆசிய சிலம்ப போட்டியில் தங்கம் வென்றார்.
2023ல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடந்த மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை சிலம்பம் போட்டியில் பொதுப் பிரிவில் ஒற்றை கம்பு மற்றும் இரட்டை கம்பு போட்டியில் முதல் பரிசு தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
தேசிய மனித நேய உலகளாவிய கூட்டமைப்பு சார்பில் சாதனையாளர் விருதும் பெற்றுள்ளார். தற்போது இரண்டு மாதங்கள் மீன்பிடி தடை காலம் என்பதால் கோடை விடுமுறையில் மாணவர்கள் டி.வி., அலைபேசிக்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காக பாரம்பரிய வீர கலைகளை மாணவர்களுக்கு இலவசமாக கற்றுக் கொடுக்கிறார்.
அவர் கூறியதாவது: சிறு வயது முதல் அப்பாவுடன் கடலுக்கு சென்று மீன் பிடி தொழில் கற்றுக் கொண்டேன். குடும்ப சூழ்நிலை காரணமாக என்னால் படிப்பை தொடர முடியவில்லை. கடற்கரை மணலில் எனது பெரியப்பா, சிலம்பம் விளையாட்டின் அடிப்படையை கற்றுக்கொடுத்தார். அதன் தாக்கத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை முழுமையாக கற்றுக்கொள்ள ஆவல் ஏற்பட்டது. ராமநாதபுரம் மாஸ்டர் மேத்யு இம்மானுவேலிடம் சிலம்பம், அடிமுறை, குத்து வரிசை, வளரி விளையாட்டுகளை கற்றுக்கொண்டேன்.
மன தைரியமும், திடமான நம்பிக்கையும், எந்த சூழ்நிலையிலும் மாணவர்கள் தம்மை தற்காத்துக்கொள்ளவும் இக்கலையை கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக பெண் குழந்தைகள் சிலம்பம் கற்றுக்கொள்ள வேண்டும். என்னிடம் சிலம்பம் பயிற்சி பெறும் மாணவர்களை, தேசிய போட்டிகளில் வெல்ல வைப்பதே எனது லட்சியம் என்றார்.
தொடர்புக்கு: 63745 16234