/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
ஆஹா... அங்கோர்வாட்: 'நாடுசுற்றி' நிரஞ்சனாவின் பயண அனுபவங்கள்
/
ஆஹா... அங்கோர்வாட்: 'நாடுசுற்றி' நிரஞ்சனாவின் பயண அனுபவங்கள்
ஆஹா... அங்கோர்வாட்: 'நாடுசுற்றி' நிரஞ்சனாவின் பயண அனுபவங்கள்
ஆஹா... அங்கோர்வாட்: 'நாடுசுற்றி' நிரஞ்சனாவின் பயண அனுபவங்கள்
ADDED : பிப் 18, 2024 03:10 PM

நேரடி கள அனுபவங்கள் நம் சிந்தனையை விரிவாக்கும். புத்தகங்களில் நாடுகள், அவற்றின் கலாசாரம், பண்பாடு தொடர்பாக படிக்கும் பல விஷயங்களை நேரடியாக பார்த்தால் எப்படி இருக்கும் என்ற தீரா தாகத்துடன் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்பட்ட நாடுகளை சுற்றி வந்து ஆவணப்படுத்தி வருகிறார், மதுரை எழுத்தாளர், தன்னம்பிக்கை பேச்சாளர் என பன்முக தன்மை கொண்ட நிரஞ்சனா.
இவர் இதுவரை 15க்கும் மேற்பட்ட நாடுகளை சுற்றி, கடைசியாக கம்போடியா சென்று திரும்பிய நிலையில் அதன் அனுபவங்கள் குறித்து தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அதிசயத்த தருணங்கள்...
கம்போடியா என்றாலே நம் நினைவுக்கு வருவது அங்கோர்வாட் கோயிலின் அதிசயம் தான். பனை மரங்களின் வரிசை, தாமரைப் பூக்கள் நிறைந்த குளம், இரண்டு கிலோமீட்டர் துாரம் அகண்ட அகழி, பசுமையான காடுகள் நடுவே 400 ஏக்கரில் அம்சமாக அமைந்துள்ள அங்கோர் வாட் கோயிலின் கம்பீரம் காணக்கிடைக்காதது.
12ம் நூற்றாண்டில் 2ம் சூரியவர்மனால் கட்டப்பட்டு, கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும், உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாகவும் இக்கோயில் திகழ்கிறது. சமீபத்தில் உலகத்தின் 8வது அதிசயமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
'அங்கோர்வாட்' என்பது கெமர் மொழி. 'கோயில் நகரம்' என பொருள். 'அங்கூர்' என்பது நகரம். 'வாட்' என்பது கோயில். ஆரம்பத்தில் விஷ்ணு திருத்தலமாக திகழ்ந்து 15ம் நுாற்றாண்டிலிருந்து புத்த கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. நாட்டின் வளமான கலாசார பாரம்பரிய சின்னமாக இக்கோயில் அந்நாட்டின் தேசிய கொடியில் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு.
கெமர் - இந்தியர் கலாசார உறவு
இங்குள்ள கல்வெட்டுகள் 5ம் நுாற்றாண்டை சேர்ந்தவை மட்டுமல்ல அவை சமஸ்கிருதத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அங்கோர் வாட்டின் தள அமைப்பு மற்றும் அடையாளங்கள் 'கெமர்' மக்களின் கட்டிடக்கலையை எடுத்துக்காட்டுவதோடு நம் இதிகாச புராணங்களில் குறிப்பிட்டுள்ள அண்டவியல் சித்தாந்தத்தின் படியும் அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள அரசர்களின் பெயர்கள் ராஜேந்திரவர்மன், ஜெயவர்மன், நரேந்திரவர்மன் என நம் இந்திய பெயர்களை தழுவியே உள்ளது. நாம் தமிழ் புத்தாண்டு கொண்டாடும் போது தான் கம்போடியாவில் 'சங்க்ராந்தா' என்று 'கைமர்' புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.
அதிசய கட்டிடக்கலை
இக்கோயில், மேரு மலையின் அமைப்பினை பிரதிபலிக்கும் வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. மேரு மலையில் காணப்படும் ஐந்து சிகரங்களைப் போன்று ஐந்து கோபுரங்கள் தாமரை மொட்டை போன்று அமைக்கப்பட்டுள்ளது. மேரு மலையைச்சுற்றி இருக்கும் மலைகள் மற்றும் கடலினை குறிக்கும் விதமாக அதன் சுற்று பிரகாரம் மற்றும் அகழி அமைக்கப்பட்டுள்ளது.
வியக்க வைக்கும் 'பேஸ் ரிலீப்'
அங்கோர்வாட்டின் வெளிப்புற பிரகாரத்தில் 2,000 அடி நீளமும், 6.5 அடி உயரமும் கொண்டதாக ('பேஸ் ரிலீப்' (bas-relief)) உள்ளது. அவை 8 பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு பாகங்கள் என்ற அளவில் ராம - ராவண யுத்தம், குருஷேத்திரப் போர், கிருஷ்ணரின் அசுர வதம், தேவ - அசுரப் போர், பாற்கடலைக் கடையும் நிகழ்வு, சொர்க்க - நரக லோக வருணனை சித்திரிக்கப்பட்டுள்ளன.
பிரமாண்ட 'பேஸ் ரிலீப்' நான்கு யுகங்களாகிய கிருத, திரேத, துவாபர கலியுக நிகழ்வுகளை பிரதிபலிக்கும் விதமாக ஒவ்வொரு பக்கத்திலும் தத்ரூபமாக அமைக்கப்பட்டதை பார்வையிடும் ஒவ்வொருவரையும் அந்தந்த யுகத்திற்கே அழைத்து செல்லும் உணர்வு ஏற்படுகிறது.
ராமாயண காவியம்
வால்மீகி ராமாயணம் பல நாடுகளிலும் அந்தந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு போற்றப்படுவதை போல் கம்போடியாவிலும் 'ராமகீர்த்தி' என போற்றப்படுகிறது. ராமகீர்த்தி என்றால் ராமரைப் போற்றும் நுால் என்று பொருள். கம்போடியாவில் கெமர் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில் ராமாயணக் காட்சிகளை சிற்பங்களாக காண முடிகிறது.
இவ்வாறு நம் நாட்டின் தொடர்புடைய பண்பாடு, கலாசார, புராண கதைகளின் நீட்சியை தமக்குள்ளே கொண்டுள்ள கம்போடியாவில், அங்கிருந்த நாட்கள் தாய்நாட்டின் மடியில் தவழ்ந்த உணர்வு போன்றே இருந்தது, என்கிறார் இரட்டிப்பு மகிழ்ச்சியாக.