/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
விழாக்களை விவரிக்கும் எம்பிராய்டரி பிளவுஸ்கள்
/
விழாக்களை விவரிக்கும் எம்பிராய்டரி பிளவுஸ்கள்
ADDED : மே 26, 2024 11:25 AM

கொண்டாட்ட மனநிலையை அனுபவிப்பதில் பெண்களுக்கு நிகர் பெண்கள் தான். விழாக்காலம், விசேஷம் தொடங்குவதற்கு மாதக்கணக்கில் அவகாசம் இருந்தாலும் சேலை, சுரிதாருக்கு பொருத்தமாக நகைகள் முதல் காலணி வரை ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியுடன் செலவிட்டு பிடித்தமானதை தேர்ந்தெடுப்பதில் பெண்களுக்கு ஆர்வம் அதிகம்.
இப்போதெல்லாம் பெண்கள் அணியும் எம்பிராய்டரி பிளவுஸ் மூலமே அது என்ன மாதிரியான விழா என தெரிந்து கொள்ளலாம் என்கிறார் மதுரையைச் சேர்ந்த ஆரி எம்பிராய்டரி நிபுணர் அம்பிகா. வண்ண நுால், பாசிமணி, முத்துக்கள் கோர்த்து உருவாக்கப்படும் ஜாக்கெட் குறித்து அவர் கூறியது:
பட்டப்படிப்பு முடித்தாலும் திருமணம் முடிந்து குழந்தைப்பேறு, வீட்டைப் பார்த்துக் கொள்வது என குடும்பத்தலைவியாக மாறினேன். கொரோனா தொற்று காலத்தில் எதையும் கற்றுக் கொள்ளாமல் வீணாக இருப்பதாக தோன்றியது. இணையதளங்களை தேடி சேலை, பிளவுஸில் ஆரி எம்பிராய்டரி செய்வதை கற்றுக் கொண்டேன்.
சேலை, சுரிதார், பிளவுஸ் துணியில் விரும்பிய டிசைனை படமாக வரைந்து எம்பிராய்டரி மெஷினில் எளிதாக தைத்து விடலாம். கைத்தையலில் (ஆரி) எம்பிராய்டரி வரைவது பேரழகு. ஒவ்வொரு டிசைனையும் பார்த்து பார்த்து ஜாக்கெட் துணியில் ஊசியால் குத்தி உருவாக்க வேண்டும். டிசைனுக்கு ஏற்ப கைப்பகுதியில் மட்டும் 500 முதல் 5000 தையல்களை கையால் இடவேண்டும்.
சமீபகாலமாக எம்பிராய்டரி பிளவுஸ்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. சில நேரங்களில் சேலையை விட பிளவுஸ் விலை 2 அல்லது 3 மடங்கு அதிகமாக இருக்கும். அதன் வேலைப்பாடில் மயங்கி அணிந்து கொள்கின்றனர்.
பெண்கள் அணியும் தாலி டிசைனுக்கேற்ப கையில் எம்பிராய்டரி செய்யச் சொல்கின்றனர். மணமக்கள் பெயரையும் கைவேலைப்பாட்டில் வரைகிறோம். முதுகுபக்கத்தில் மணமக்கள் உருவத்தை வரைகிறோம்.
முதுகிலும், கைப்பகுதியில் வலைப்பின்னல் (நெட் கிளாத்) டிசைனை விரும்புகின்றனர். வலையால் தைத்த முழுக்கை பிளவுஸ் உடன் சேலை அணிவது கம்பீரத்தை வெளிப்படுத்துகிறது. கைப்பகுதியில் பாசிமணி, குஞ்சங்கள் சரம் போல தொங்குவதை விரும்புகின்றனர்.
பிளவுஸ்களை பட்டுச்சேலை போல பாதுகாக்க வேண்டும். விசேஷங்களுக்கு சென்று வந்தவுடன் நிழலில் வியர்வை வெளியேற காயவிட வேண்டும். மறுநாள் தண்ணீரில் ஷாம்பூ கலந்து லேசாக நனைத்து இன்னொரு தண்ணீரில் அலசி நிழலில் காயவிட வேண்டும். சேலையின் பிளவுஸ் துணியை பிரித்து டிசைன் உருவாக்குவதை விட ஜாஸ்மின் துணியில் எம்பிராய்டரி செய்தால் ஆண்டுக்கணக்கில் புதிது போலிருக்கும். பிளவுஸ் கனமாக இருப்பதால் அயர்ன் செய்ய வேண்டியதில்லை.
திருமணம், சடங்கு விழாக்களைத் தாண்டி வளைகாப்புக்கும் அம்மா குழந்தையுடன், குழந்தையின் பாதம் போன்ற உருவங்களை வரையச் சொல்கின்றனர். பெண்களின் ரசிகமனம் எங்களுக்கு புத்துணர்வைத் தருகிறது என்றார்.
இவரிடம் பேச: 99441 85505.