ADDED : மார் 16, 2025 12:06 PM

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் வி.சரஸ்வதி. 1984 முதல் சுற்றுச்சூழலை வளமாக்குதல், நீர்நிலைகளை பாதுகாத்து பசுமைப்படுத்தும் பணி, கிராமப்புற வளர்ச்சி, ஏழை மாணவர்களுக்கு உதவி செய்வது என, திருமணம் செய்து கொள்ளாமல் தன்னை முழுமையாக சமூக சேவையில் அர்ப்பணித்து உள்ளார்.
இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டுள்ளார். பயன்பாடில்லாமல் அசுத்தமாகியுள்ள கோயில் தீர்த்தங்களை மீட்டெடுக்கும் பணியையும் செய்து வருகிறார். தற்போது விவேகானந்தா கேந்திராவின் பசுமை ராமேஸ்வரம் திட்டத்தின் ஒருங்கிணைப்பளராக பணிபுரிகிறார்.
இந்தியா மட்டுமின்றி வெளி நாட்டிலும் நீர்நிலை பாதுகாப்பு, மூலிகைச் செடி வளர்ப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் பணிபுரியும் போது கழிவு நீர் மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்தியதால் 2015ல் ெஹண்ட் அண்டு ெஹண்ட் திட்டத்தில் விருது பெற்றுள்ளார்.
2019ல் கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் சிறந்த சமூக சேவைக்கான விருது பெற்றுள்ளார். 2020, 2021ல் ராமநாதபுரம் மாவட்ட சுதந்திர தின விழாவில் விருது பெற்றுள்ளார். 5 லட்சம் விதைப்பந்துகள் தயாரிக்க உதவி செய்து மதுரை அமிர்தா மடத்தில் விருது பெற்றுள்ளார். தொடர்ந்து கிராமப்புற ஏழை மாணவர்கள், பெண்களின் வளர்ச்சிக்கு உதவி செய்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் நீர்நிலை பாதுகாத்தல் குழுவில் உறுப்பினராக உள்ளார்.
அமைதியாக இத்தனை சாதனைகளையும் செய்து வரும் சரஸ்வதி கூறியதாவது:
பாரதியார் கவிதைகள், விவேகானந்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு அவர்களது பொன் மொழிகளை பின்பற்றி வாழ்ந்து வருகிறேன். நம் நாட்டுக்கும், மக்களுக்கும் முடிந்தவரை உதவிகளை செய்ய வேண்டும் என சமூக சேவைப்பணியில் உள்ளேன். ராமேஸ்வரத்தில் சத்திரங்கள், தீர்த்த குளங்களை கண்டறிந்து சுத்தம் செய்துள்ளோம். அவை தொடர்பான செய்திகள் நிறைய தினமலர் நாளிதழில் வெளி வந்து எங்கள் செயலை மேலும் ஊக்கப்படுத்தி வருகிறது.
எல்லா பெண்களுக்கும் சமூக சேவை செய்ய வாய்ப்புகள் கிடைக்குமா என்றால் அது குறைவு தான். பெண்கள் பெரிய அளவில் சாதிக்க வேண்டாம், ராமர் இலங்கைக்கு பாலம் கட்டும் போது உதவிய சிறிய அணில் போல நம்மால் முடிந்த சமூக சேவையை செய்ய வேண்டும்.
வீட்டிலும், வீதிகளிலும் மரக்கன்றுகள் வளர்க்க வேண்டும். நமக்கு மட்டுமின்றி வரும் தலைமுறைக்கு பயன்படும் நீர்நிலைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து தாய்மார்கள் தங்கள் பிள்ளைக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றார்.