தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/தமிழகத்திற்கு தேவை 'அறிவியல் விளையாட்டு' சானியாவிற்கு பயிற்சி அளித்த ஸ்டாலின் நாகராஜன்

தமிழகத்திற்கு தேவை 'அறிவியல் விளையாட்டு' சானியாவிற்கு பயிற்சி அளித்த ஸ்டாலின் நாகராஜன்

தமிழகத்திற்கு தேவை 'அறிவியல் விளையாட்டு' சானியாவிற்கு பயிற்சி அளித்த ஸ்டாலின் நாகராஜன்


ADDED : ஆக 09, 2026 09:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2026 09:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒலிம்பிக் கனவை நோக்கி தமிழக மாணவர்கள் ஓடிக் கொண்டிருப்பது நல்ல விஷயம். ஆனால் விளையாட்டில் அறிவியல் பூர்வமான தொழில்நுட்ப பயிற்சியும் நுணுக்கமும் இருந்தால் தான் வெற்றி வாகை சூடமுடியும். மேலைநாடுகளில் இதுபோன்ற அறிவியல் விளையாட்டுகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. தமிழகத்திலும் இந்த நடைமுறை வரவேண்டும் என எதிர்பார்க்கிறேன் என்கிறார் முன்னாள் தேசிய தலைமை டென்னிஸ் பயிற்சியாளர் எம்.ஸ்டாலின் நாகராஜன்.

ஆட்டமும் வெற்றியும் அதன்பின் பயிற்சியாளருமான அனுபவங்களை விவரித்தார் ஸ்டாலின் நாகராஜன்...

பள்ளி, கல்லுாரிப்படிப்பு மதுரையில் முடித்தேன். மதுரை காமராஜ் பல்கலையில் டென்னிஸ் வீரராக பயணத்தை தொடங்கினேன். 1984ல் தேசிய விளையாட்டு நிறுவனத்தில் (என்.ஐ.எஸ்.,) டிப்ளமோ பெற்று இந்திய டென்னிஸ் பயிற்சியாளராக நியமனம் ஆனேன். சிதம்பரம் அண்ணாமலை பல்கலையிலும் அடுத்தடுத்து கேரளா, ஆந்திராவில் பயிற்சியாளரானேன். 1998ல் ஆந்திரா சென்ற போது, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு 11 வயது. என்னிடம் பயிற்சி பெற வந்தார். அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு தேசியப் போட்டிகளை நடத்தினார். அதற்கு முன்பாக பஞ்சாப் தேசிய விளையாட்டுக்கு பயிற்சி பெற சானியா மிர்சா வந்து வெண்கலம் வென்றார். அடுத்தடுத்து உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவில் சாதனை படைத்தார். அவரது ஆரம்பகால பயிற்சிக்கு வித்திட்டவன் என்ற முறையில் சானியாவின் வெற்றியில் எனக்கு பெருமிதம்.

அடுத்து வந்த புன்னா விஷால், விஷ்ணுவர்தனுக்கு பயிற்சி அளித்து டேவிஸ் உலகக்கோப்பை ஆடவைத்தேன்.

2020ல் பணிஓய்வு பெற்ற பின் காதுகேளாதோருக்கான (டெப்) ஒலிம்பிக்ஸ் போட்டியில் கவனம் செலுத்தினேன். டெப் ஒலிம்பிக்ஸ் வேறு, பாரா ஒலிம்பிக்ஸ் வேறு. என்னிடம் பயிற்சி பெற்ற சென்னை வீரர் பிரித்வி சேகர், துருக்கியில் நடந்த 2வது உலகக்கோப்பை டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் தங்கம், இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்றார். பிரேசிலில் 2022ல் டெப் ஒலிம்பிக்கில் பிரித்வி ஒற்றையர், இரட்டையர் பிரி வில் வெண்கலம், இரட்டையர் பிரிவில் வெள்ளி வென்றார். இதற்காக பிரதமர் மோடி வீட்டுக்கு வரவழைத்து கவுரவப்படுத்தியது மறக்க முடியாதது. அந்த டெப் வகை போட்டியில் சூட்டிங், டென்னிஸ், பாட்மின்டன் உட்பட 16 பிரிவு களில் பதக்கங்களை பெற்றது, சாதனையாக பார்க்கப்பட்டது.

கிரீஸில் ஜூனியர் சாம்பியன்ஷிப் இரட்டையர் பிரிவில் அரியானா, ஆந்திரா மாணவர்கள் வெள்ளி, ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்றனர்.

விளையாட்டு விஞ்ஞானி 2025 ஜப்பான் டோக்கியோவில் நடந்த டெப் ஒலிம்பிக்கில் 20 பதக்கம் வாங்கினோம். பிரேசில், டோக்கியோ போட்டிகளின் போது விளையாட்டு விஞ்ஞானியாக செயல்பட்டேன். விளையாட்டு வீரனுக்கு கவுன்சிலிங் தேவை.

பயிற்சியாளராக மட்டுமின்றி விளையாட்டு உளவியல், சத்துஇயல், பிசியாலஜி, மருத்துவம், பயிற்சி நுணுக்கம் என அனைத்து விஷயங்களிலும் வீரர், வீராங்கனைகளுக்கு கவுன்சிலிங் தருகிறேன். அதுவே பதக்கம் வெல்ல பயன்பட்டது.

அந்தக்காலத்தில் விளையாட்டில் 6 முதல் 8 மணி நேரம் பயிற்சி தான் கடின உழைப்பாக பேசப்பட்டது. விளையாட்டில் ஈடுபட்ட மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது 'ஸ்மார்ட் வொர்க்' என்ற பெயரில் தரமான ஒரு மணி நேர பயிற்சியே போதுமென்றாகி விட்டது. இப்போதைய வீரர்கள் டாக்டர், இன்ஜினியர்களாக படிப்பு, விளையாட்டிலும் சிறந்து விளங்க 'ஸ்போர்ட்ஸ் சயின்ஸ்' உதவுகிறது.

என்.ஐ.எஸ். கோச்சிங் படித்தவர்களுக்கு தான் 'ஸ்போர்ட்ஸ் சயின்ஸ்' பற்றிய புரிதல் இருக்கும். உடற்கல்வி ஆசிரியர்கள் எந்த விளையாட்டை தேர்ந்தெடுக்கின்றனரோ அதில் ஆராய்ச்சிப்படிப்பு வரை மேற்கொள்ள வேண்டும். டென்னிஸ் துறையில் 15 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து 'ஸ்போர்ட்ஸ் சயின்சில்' பி.எச்டி., பட்டம் பெற்ற ஒருவன் நானே. எல்லா விளையாட்டுகளிலும் சேர்த்து 20 பேர் தான் இந்தியாவில் பி.எச்டி., முடித்துள்ளனர். நிறைய அறிவியல் விஞ்ஞானிகள் உருவானால் கடின உழைப்பு அல்லாத தரமான விளையாட்டு நுணுக்கத்துடன் பயிற்சி அளித்து வெற்றி பெற வைக்க முடியும்.

டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் 40 வயதிலும் விளையாட காரணம் 'ஸ்மார்ட் வொர்க்' தான். அப்போது தான் காயங்களை தவிர்த்து நீண்ட காலத்திற்கு விளையாட முடியும்.

பள்ளிகளில் 'ஸ்போர்ட்ஸ் சயின்ஸ்' கொண்டு வந்தால் மாணவர்கள் அடிக்கடி காயம் படுவதை தவிர்த்து தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க வைக்க முடியும். உடற்கல்வி ஆசிரியர்களை தமிழக அரசே 'என்.ஐ.எஸ்.,' பயிற்சி பெற வைத்தால் ஒலிம்பிக் பதக்கம் வெல்ல முடியும். உடற்கல்வி ஆசிரியர்கள் தனியாக செலவு செய்வது கஷ்டம்.

மத்திய அரசு சார்பில் மாநில பயிற்சி மையங்கள் (எஸ்.டி.சி.,) உள்ளன. 10 வயதில் மாவட்ட அளவில் பதக்கம் வென்றவர்களை இங்கே பயிற்சிக்கு அனுப்பலாம். 10 முதல் 25 வயது வரை உணவு, உடை, உபகரணம், பயிற்சி, வேலைவாய்ப்பு வரை தருகிறது. சர்வதேசப் போட்டிகளில் தங்கம் வென்றால் மத்திய அரசு ரூ.ஒரு கோடி வரை தருகிறது. எனவே விளையாட்டை தொழிலாக பிள்ளைகள் தேர்ந்தெடுக்க பெற்றோர் அனுமதிக்க வேண்டும். அதன் மூலம் அலைபேசியில் மூழ்கி வாழ்க்கையை தொலைக்கும் பிள்ளைகளை மாற்றமுடியும் என்றார்.

இவரிடம் பேச 88928 73799.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us