தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/உண்டியலில் 'பூக்கிறது' எதிர்காலம்!

உண்டியலில் 'பூக்கிறது' எதிர்காலம்!

உண்டியலில் 'பூக்கிறது' எதிர்காலம்!


ADDED : ஜூலை 26, 2026 08:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2026 08:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வரவுக்கு மீறிய செலவு ஆபத்து; வரவுக்குள் இருக்கும் சேமிப்புதான் ஆயுள் முழுக்க பாதுகாப்பு.

இந்த ஒரு வரியே பொருளாதாரத்தின் அடிப்படை. ஆனால், அதனை புத்தகங்களில் மட்டும் படிக்காமல், வாழ்க்கையில் நடைமுறையாக கற்றுக் கொடுக்கிறது திருப்பூர் மாநகராட்சி 32-வது வார்டில் செயல்படும் புது ராம கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி.

மூன்று ஆண்டுகளாக, 'சிறுதுளி பெருவெள்ளம்' என்ற மையக் கருத்தோடு பள்ளியில் அமைதியான ஒரு புரட்சி நடந்து வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 330 மாணவ, மாணவியருக்கும் சிறு சேமிப்பு உண்டியல்கள் வழங்கப்பட்டு, தினமும் கிடைக்கும் சில்லறைகளை அதில் சேமிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.

இதன் பலன் ஆசிரியர்களையே வியக்க வைத்துள்ளது. கடந்த கல்வியாண்டில், 5-ம் வகுப்பு மாணவி ஒருவர் 8,157 ரூபாய் சேமித்து பள்ளியிலேயே முதலிடம் பிடித்துள்ளார். இது ஒரு மாணவியின் சாதனை மட்டுமல்ல; சிறுவயதில் விதைக்கப்படும் நல்ல பழக்கத்தின் வலிமைக்கு கிடைத்த அங்கீகாரம்.

பள்ளி ஆண்டு விழாவுக்கு முன், ஒவ்வொரு மாணவரின் உண்டியலும் பெற்றோர் முன்னிலையில் திறக்கப்பட்டு, சேமித்த முழுத் தொகையும் மாணவர்களிடமே ஒப்படைக்கப்படுகிறது. அத்துடன் ஒவ்வொரு வகுப்பிலும் அதிக தொகை சேமித்த முதல் மூன்று மாணவர்களுக்கு மேடையில் பரிசுகள் வழங்கப்படுகிறது.

தலைமை ஆசிரியர் மோகன் கூறுகையில், ''சேமிப்புப் பழக்கம் மட்டுமல்ல, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் மனப்பான்மையையும் இந்தத் திட்டம் உருவாக்கியுள்ளது. 'அடுத்த ஆண்டு நான் இன்னும் அதிகம் சேமிப்பேன்' என்று மாணவர்கள் உற்சாகமாக போட்டியிடுகின்றனர். பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பு வழங்குகின்றனர்,'' என்றார்.

இந்த ஆண்டும் 330 மாணவர்களுக்கும் புதிய உண்டியல்கள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு பிப். மாதம் அவற்றை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வர மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக தொகை சேமிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு விழாவில், 'சிறந்த சேமிப்பாளர் விருது' வழங்கப்பட உள்ளது.

இந்த முயற்சிக்கு பின்னால் அமைதியாக நிற்கும் மனிதர் தனியார் நிறுவன ஊழியர் ஞானவேல். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, 3,500 ரூபாய் மதிப்பிலான 330 உண்டியல்களை தனது சொந்த செலவில் வழங்கி வருகிறார். இன்று உண்டியலில் விழும் ஒரு ரூபாய், நாளை ஒரு மாணவனின் கனவுக்கு துணையாகலாம். இன்று தவிர்க்கப்படும் ஒரு தேவையற்ற செலவு, நாளை கல்விக்கான ஆதாரமாக மாறலாம்.

'சிறுதுளி பெருவெள்ளம்' என்பது பழமொழி மட்டுமல்ல; அந்தப் பழமொழியை வாழ்வியல் பாடமாக மாற்றியிருக்கிறது இந்த அரசு பள்ளி. இதுபோன்ற முயற்சிகள் ஒவ்வொரு பள்ளியிலும் மலர்ந்தால், சேமிப்பு நிறைந்த சமுதாயமும், பொறுப்பான தலைமுறையும் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us