நாங்க 'விர்ச்சுவல்' சிங்கப் பெண்கள்: 'மாஸ்' காட்டும் மங்கையர்
நாங்க 'விர்ச்சுவல்' சிங்கப் பெண்கள்: 'மாஸ்' காட்டும் மங்கையர்
UPDATED : நவ 15, 2026 08:54 AM
ADDED : நவ 14, 2026 04:17 AM
அன்பு என்றால் பூக்களை விட மென்மை உணர்வை வெளிப்படுத்தும் பெண்கள் தான். ஆனால் வம்பு என வந்துவிட்டால் இரும்பை விட வலிமை பெற்றுவிடுவர். பெண்களும், பிரச்னையும் ஒட்டிப்பிறந்தவை. பிரச்னையை சமாளிக்க வேண்டும் என அஞ்சாத நெஞ்சுரத்தோடு கூடிய கூட்டம் தான் இந்த விர்சுவல் சிங்கப் பெண்கள் கிளப்.
மதுரையில் இருந்து செயல்படும் இந்த கிளப் ‛அட்மின்' ரஞ்சிதா தேவி கூறுகையில்...
தமிழக அரசு தொடங்கிய சிங்கப் பெண்கள் படை தான் எங்கள் கிளப் தொடங்க ஆரம்பப் புள்ளியாக இருந்தது. வாட்ஸ்அப், இன்ஸ்டா மூலம் தான் எங்கள் செயல்பாடுகள் இருக்கும். தற்போது வரை பிசினஸ் உமன், தொழில்முனைவோர் என 100 பெண்கள் தற்போது இணைந்துள்ளோம்.
முதல்முறையாக மதுரையில் 'உமன் சேப்டி அவேர்னஸ்'க்காக 'வாக்கத்தான்' நிகழ்ச்சி நடத்தினோம். வாட்ஸ்அப், இன்ஸ்டா மூலம் தான் அழைப்பு விடுத்தோம். அந்த நிகழ்ச்சியில் ஆயிரம் பெண்கள் கூடிவிட்டனர்.
அரசின் சிங்கப் பெண்கள் படையை சேர்ந்த பெண் போலீசார் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். அதில் பங்கேற்ற கல்லுாரி மாணவி, 'ஒரு இளைஞரால் தனக்கு தொந்தரவு இருப்பதாக' மேடையில் கூறினார். அந்த நிகழ்ச்சி முடிவதற்குள் அந்த மாணவிக்கு தீர்வு கிடைக்க செய்தது, சிங்கப் பெண் படை.
எல்லா பெண்களுக்கும் ஏதாவது ஒரு பிரச்னை இருக்கத்தான் செய்யும். வெளியே தெரியாது. பெரும்பாலான பெண்களும் வெளியே சொல்வது கிடையாது. குறிப்பாக கிராமப்புற பெண்கள் எதையுமே மனசுக்குள் போட்டு வைத்துக்கொள்வர். இதனால் தான் 'மதுரை டூ தேனி' என்ற தலைப்பில் கிராமங்களில் பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
'உமன் சேப்டி' மட்டுமில்லாமல் ஆடல், பாடல் போன்ற எண்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சிகள் மூலம் அவர்களுக்கு 'ஒரு பெண்ணாக நாமும் எந்த சூழ்நிலையிலும் சாதிக்க முடியும்' என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளோம். இதுதவிர மரக்கன்றுகள் நடுகிறோம். தீபாவளியை முன்னிட்டு ஏழை பெண்களுக்கு இலவச சேலை வழங்க, உறுப்பினர்களே நிதி ஸ்பான்சர் செய்துள்ளோம். உதவி, நிகழ்ச்சிகளை விருட்சா அறக்கட்டளையுடன் இணைந்து செயல்படுத்துகிறோம்.
சமீபத்தில் வெளியான 'டோரத்தி' சினிமா டீமை சந்தித்து எங்கள் கிளப் சார்பில் பாராட்டை தெரிவித்தோம். இயக்குநர் கார்த்திக்சுப்புராஜ் எங்கள் கிளப் செயல்பாடுகளை கேட்டு பாராட்டினார். எந்த கனெக் ஷன் எங்கள் கிளப்பை இணைத்ததோ அதே கனெக் ஷன் கடைசி வரை நீடித்து, குரூப் பெண்கள் யாருக்கு என்ன பிரச்னை ஏற்படுகிறதோ அதற்கு தீர்வுகாண இந்த விர்சுவல் சிங்கப் பெண் கிளப் செயல்படும் என்கிறார் ரஞ்சிதா தேவி.
பிரச்னை என்றால்இறங்கிடுவோம்ல...
ஆருத்ரா, இளம் தன்னார்வலர்: போலீஸ் ஸ்டேஷன் செல்ல ஆண்களே தங்குவர். ஆனால் இந்த கிளப்பில் இணைந்த பின் போலீஸ் ஸ்டேஷன், எம்.எல்.ஏ., அலுவலகம் என எந்த தயக்கம் இன்றி நாங்கள் சென்று வருகிறோம். எங்களுக்குள் மன தைரியம் ஏற்பட்டுள்ளது. எங்கள் நண்பர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்னை என்றால் எங்கு சென்று யாரை பார்த்தால் தீர்வு கிடைக்கும் என்ற தெளிவு கிடைத்துள்ளது. சேப்டி அண்ட் செக்கியூரிட்டி கிடைத்துள்ளது.
தொடர்புக்கு: 73581 74486

