/
உலக தமிழர்
/
ஆப்பிரிக்கா
/
செய்திகள்
/
மொம்பாசா தமிழ் சங்கம் சார்பில் குழந்தைகள் தின விழா
/
மொம்பாசா தமிழ் சங்கம் சார்பில் குழந்தைகள் தின விழா
மொம்பாசா தமிழ் சங்கம் சார்பில் குழந்தைகள் தின விழா
மொம்பாசா தமிழ் சங்கம் சார்பில் குழந்தைகள் தின விழா
நவ 17, 2025

மொம்பாசா தமிழ் சங்கம் தனது 14வது குழந்தைகள் தின விழாவை நேற்று 16.11.2025 அன்று விசா ஒஷ்வல் அரங்கில் மிகுந்த சீரும், சிறப்புடனும் கொண்டாடியது. விழாவில், இந்தியாவின் துணைத் தூதர் ராமாகாந்த் குமார், மேலும் பல இந்திய அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியின் மகத்துவத்தை உயர்த்தினர். விழாவின் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்த ரூபெஷ்குமார் மற்றும் ஆகாஷ்குமார், தங்கள் சிறப்பான தொகுப்புகளால் அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.
தலைவர் சுப்ரமணியன், அன்புடன் அனைவரையும் வரவேற்று, கென்யாவின் தேசிய கீதம், மற்றும் தமிழ் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தமிழ் சங்கக் குழந்தைகள், வண்ண உடை அலங்காரம், திருக்குறள், குர்ஆன் வாசிப்பு, பாடல், வயலின், நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களின் மனங்களை கவர்ந்தனர்.
மேலும், மொம்பாசாவில் உள்ள பிற இந்திய சங்கங்களின் குழந்தைகளும் உற்சாகமாக பங்கேற்று விழாவை இன்னும் சிறப்பாக மாற்றினார்கள். இந்நாளின் சிறப்பு அம்சமாக, பாரதி மற்றும் மெர்சி தம்பதிகளின் மகள் ரியா ஹன்ஸிணி, மொம்பாசாவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் பங்கேற்று சிறப்பான வெற்றியை பெற்றார். தனது புத்திசாலித்தனமும், மனத் திடமும், திறமைக்கும் அழகான வெளிப்பாடாக இந்த சாதனை அமைந்தது.
இந்தியாவின் தேசியப் பாடல்களில் ஒன்றான 'வந்தே மாதரம்' பாடலின் 150 ஆம் ஆண்டு நிறைவை குறிக்கும் விதமாக, தமிழ்சங்க உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகள், மூவர்ண கொடிகளை கையிலேந்தி உணர்வுப்பூர்வமாக பாடினர். அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று தாய்த்திருநாட்டிற்கு மரியாதை செலுத்தினர்.
அனைத்து நிகழ்ச்சிகளையும் கவிதா சந்திரசேகர், பிரியா கவுரிசங்கர், சாந்தி சுப்ரமணியன், தீபா குமரகுரு, மற்றும் மொம்பாசா தமிழ் சங்கத்தின் கலாச்சார அணி இணைந்து மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து, இந்த விழாவை ஒரு சிறந்த மைல் கல்லாக மாற்றினர். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் செயலாளர் கௌரிசங்கர் நன்றியுரை வழங்கினார்.
மேலும், ஷாகுல் ஹமீத், ஸ்ரீநிவாசன், வரதராஜன், பரமேஸ்வரன், கிருபா, சந்திரசேகரன், குமரகுரு, சந்தோஷ், விக்னேஷ், ராம்குமார், வினோத் உள்ளிட்ட அனைவரும் ஓய்வற்ற குழுபணியின் மூலம் இந்த குழந்தைகள் தின விழாவை சிறப்பாக அமைத்தனர். விழாவின் நிறைவில், அனைத்து வருகையாளர்களுக்கும் சுவைமிகுந்த இந்திய உணவு பரிமாறப்பட்டு, நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
இதனால், இந்த ஆண்டு குழந்தைகள் தின விழா, அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்ட, மற்ற நிகழ்ச்சிகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த ஒரு மறக்கமுடியாத கொண்டாட்டமாக அமைந்தது.
- மொம்பாசாவிலிருந்து தினமலர் வாசகி தீபா குமரகுரு
Advertisement

