/
உலக தமிழர்
/
ஆப்பிரிக்கா
/
செய்திகள்
/
நைஜீரியாவில் பங்குனி உத்திரம் சிறப்பு வழிபாடு
/
நைஜீரியாவில் பங்குனி உத்திரம் சிறப்பு வழிபாடு
ஏப் 11, 2023
லேகோஸ், நைஜீரியா: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு லேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடத்தி வழிபாடு செய்யப்பட்டது. முதலில் சத்ரு சம்ஹார பூஜை பங்குனி உத்திரத்திற்கு முதல் நாள், 4.5.23 அன்று சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை செய்யப்பட்டது. ஆறுமுகனான முருகனுக்கு ஆறு விதமான பழங்கள், மலர்கள், கலந்த சாதங்கள், இனிப்பு வகைகள் படைக்கப்பட்டு ஆறுமுறை சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை செய்யப்பட்டது.
இந்த விசேஷ பூஜையின் பலன்களாக நம் ஒருவருக்குள் இருக்கும் காம, க்ரோத லோப, மோக, மதம், மாத்சர்யம் ஆகிய ஆறு வகையான தீய குணங்களை களைந்தெடுக்க முருகப்பெருமானிடம் பிரார்த்தனை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பௌர்ணமியான பங்குனி உத்திரத்தன்று ஒருவரை முழுமை அடையச் செய்யும் ஞானத்தை வேண்டி முருகனுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து முருகனுக்கு சமர்ப்பித்தனர். பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், இளநீர், சுவர்ணம் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு பின் ராஜ அலங்காரத்தில் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு இனிதே நிறைவடைந்தது.
கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் வாழை இலையில் சிறப்பு விருந்தும் அளிக்கப்பட்டது. முருகனுக்கு உகந்த அனைத்து வழிபாடும் செவ்வனே செய்திருந்த கோவில் நிர்வாகத்திற்கு லேகோஸ் வாழ் தமிழ் மக்கள் நன்றி தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் ஸ்ரீவித்யா ஆனந்தன்
Advertisement