/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
தாய்லாந்தில் பௌர்ணமி ஒளி வெள்ளத்தில் ஆருத்ரா தரிசனம்
/
தாய்லாந்தில் பௌர்ணமி ஒளி வெள்ளத்தில் ஆருத்ரா தரிசனம்
தாய்லாந்தில் பௌர்ணமி ஒளி வெள்ளத்தில் ஆருத்ரா தரிசனம்
தாய்லாந்தில் பௌர்ணமி ஒளி வெள்ளத்தில் ஆருத்ரா தரிசனம்
ஜன 15, 2025

நாடெங்கும், அரசியல்வாதிகளும், பெண்கள் இயக்கங்களும் பெரிதாக முழக்கமிடும், ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம் என்பது இன்றும் ஏட்டிளவிலும், உதட்டளவிலும் மட்டுமே உள்ளது, ஏனென்றால் நடைமுறையில், இன்னும் 50:50 என்ற அளவை எங்குமே எட்டியதாக, ஒன்றிரண்டை தவிர, பெரிதாக எடுத்துக்காட்டுகள் ஏதுமில்லை.
ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்து சாஸ்திரங்களில், மார்கழி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திர நாளில், அன்னை பார்வதி, பகவான் சிவபெருமானால், சகதர்ம சாரிணியாக ஏற்றுக் கொள்ளப் பட்டு, ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம் என்பதை பிரதிபலிக்கும் வகையில், 50% ஆணும் 50% பெண்ணும் கலந்த அர்த்தநாரீஸ்வரர் ஆக மக்களுக்கு அருள் பாலிப்பதாக கூறப்பட்டுள்ளது. அதனால்தான் சிதம்பரம் நடராஜர், வலப்பக்கம் சிவமும், இடப்பக்கம் சக்தியுமாக, சிவசக்தியின் அம்சமாக வீற்று இருப்பதாக ஐதீகம்.
இருந்தாலும்கூட, அர்த்தநாரீஸ்வரர் ஆலயங்கள் மிக அரிதாகவே சில இடங்களில் மட்டுமே அமையப் பட்டுள்ளதால், பரவலாக உள்ள அனைத்து சிவாலயங்களிலும் இந்த ஆருத்ரா தரிசன நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுகின்றன. அந்த வகையில், தாய்லாந்து பேங்காக் ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்திலும், பௌர்ணமி பூஜைகளுடன், வேள்விகள் செய்யப்பட்டு, வேதங்கள் இசைக்க, நடராஜர் கோலத்தில் அம்மனுடன் வீற்றிருந்த சிவபெருமானுக்கு 18 வகையான அபிஷேகங்களுடன், 108 சங்காபிஷேகம் செய்யப்பட்டு, உற்சவர் சிலைகள் ஊர்வலம் வந்து பக்தர்களுக்காக காட்சி கொடுத்தனர்.
ஊர்வலத்தின் முதல் சுற்றில், அம்பாளும் சுவாமியும் நேருக்கு நேராக இருந்து மூன்று முறை மாலை மாற்ற, பக்தர்கள் உற்சவர் சிலைகளை கைகளில் ஏந்தி ஊஞ்சலாக ஆட்ட, சிதம்பர நிகழ்ச்சிகளை தாய்லாந்து சிலோமில் கொண்டு வந்து நிறுத்தியது போல் இருந்தது.
மேலும் பல்வேறு பகுதிகளிலும் இருந்து, ஆருத்ரா தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் இரவு 11.30 மணிக்கு நிகழ்ச்சி முடியும் வரை இருந்து, சிறப்பு பிரசாதமான களியையும், உண்டு களித்தது கூடுதல் சிறப்பாக இருந்தது.
- நமது செய்தியாளர் சரவணன் அழகப்பன்
Advertisement