/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
சீனாவின் ஷாங்காய் மாநகரில் புத்தாண்டுக் கொண்டாட்டம்
/
சீனாவின் ஷாங்காய் மாநகரில் புத்தாண்டுக் கொண்டாட்டம்
சீனாவின் ஷாங்காய் மாநகரில் புத்தாண்டுக் கொண்டாட்டம்
சீனாவின் ஷாங்காய் மாநகரில் புத்தாண்டுக் கொண்டாட்டம்
ஏப் 16, 2025

சீனாவின் ஷாங்காய் மாநகரில் அமைந்துள்ள ஷாங்காய் சங்கமத்தின் சார்பில் தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது. சீனாவின் வர்த்தகத் தலைநகரான ஷாங்காய் மாநகரில் பெருமளவில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். தாயகம் கடந்து தொலைதூர தேசத்தில் வாழும் அவர்கள் தங்களின் பாரம்பரியப் பண்டிகைகளை மறக்காமல் இருக்கவும் கொண்டாடவும் 2004 ஆண்டு ஏப்ரல் 13 ஆம் நாள் ஷாங்காய் சங்கமம் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் மற்றும் தீபாவளித் திருவிழா முதலான பண்டிகைகள் வெகுவிமரிசையுடன் கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வகையில் இவ்வாண்டு தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டம் ஏப்ரல் 13 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை கிரௌவுன் பிளாசா ஓட்டலில் ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டது. விழாவில் ஷாங்காயில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதரக அதிகாரி ஆதித்ய பிரபுதேசாய் மற்றும் பிரம்ம குமாரிகள் சமாஜத்தின் சகோதரி சப்னா ஆகியோர் கலந்து கொண்டு விழா சிறக்க வாழ்த்தியதோடு நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.
இவ்வாண்டு ஷாங்காய் சங்கமம் 21 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, தமிழக பின்னணிப் பாடகர்கள் அம்ருதா மற்றும் எம்.எல்.ஆர். கார்த்திகேயன் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் பாடிய மெல்லிசை மற்றும் துள்ளலிசைப் பாடல்களைக் கேட்டு ரசிகர்கள் ஆரவாரித்து மகிழ்ந்தனர். முன்னதாக சீனாவின் பரத நாட்டியக் கலைஞர்களான ஜின் ஷான் ஷான் மற்றும் ஜெஸ்ஸிகா வூ ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றமும், சீனாவில் குச்சுப்புடி கற்பித்து வரும் லூலூ குழுவினரின் குச்சுப்புடி நடனமும் பார்வையாளர்களைப் பெரிதும் மகிழ்வித்தது. மேலும், சந்திரா சிவாவின் கூச்செங் பாரம்பரிய இசையாலும் சீனாவில் மருத்துவம் பயிலும் மாணவர்களின் நடனத்தாலும் புத்தாண்டு நிகழ்ச்சி களைகட்டியது.
250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் நிறைவில் அனைவருக்கும் இந்தியன் கிச்சன் உணவகத்தின் ஏற்பாட்டில் தமிழர் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டன. அயல்நாட்டில் தங்களின் புத்தாண்டான சித்திரைத் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்தது வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்ததாக விழாவுக்கு வந்திருந்தவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தமிழ்ப்புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை ஷாங்காய் சங்கமத்தின் பொறுப்பாளர்கள் கோபிநாத், இந்தியன் கிச்சன் சிவா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- தினமலர் வாசகர் டி.சோமசுந்தரம்
Advertisement