/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
தைவான் தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் விழா
/
தைவான் தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் விழா
ஜன 22, 2026

தைவான் தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் விழா
தைவான் தமிழ்ச்சங்கத்தின் 2026ஆம் ஆண்டுக்கான பொங்கல் விழா, தைபே நகரில் உள்ள செங் யுங் ஃபா பவுண்டேசன் உள்ளரங்கில் நடைபெற்றது.
தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர் யூசி, இந்திய தைபே அசோசியேசனின் துணைப் பொது இயக்குநர் விநாயக் சவான், விஸ்ட்ரான் ஐடி சேவை நிறுவனத்தின் துணைத் தலைவர் கார்த்திகேயன் மாதவன், தைவான் தமிழ்ச்சங்க துணைத்தலைவர் ரமேஷ் பரமசிவம், ஆகியோர் இணைந்து குத்துவிளக்கேற்றி தமிழரின் பாரம்பரியத்துக்கும் பண்பாட்டுக்கும் மரியாதை செலுத்தினர்.
கலாச்சார நிகழ்ச்சிகள்:
தமிழ்ச்சங்கத்தின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் இவ்வாண்டும் சிறப்பாக நடைபெற்றன. பரதநாட்டியமும் ஒடிசி நடனமும் மேடையை அலங்கரித்தன; தொடர்ந்து குழந்தைகளின் இனிமையான நடனங்கள் பார்வையாளர்களை கவர்ந்தன. இதனுடன் ஸ்பானிஷ் ஃபிளமிங்கோ நடனமும் பாடல் நிகழ்ச்சிகளும் இடம்பெற்று விழாவுக்கு சர்வதேச பன்முகத் தன்மையை சேர்த்தன. சிறுவர்களின் பாரம்பரிய ஆடை அணிவகுப்பும் அனைவரின் பாராட்டைப் பெற்றது.
சிறுவர் ஓவியக் கண்காட்சி:
வருடந்தோறும் நடைபெறும் சிறுவர் ஓவியக் கண்காட்சி இந்த ஆண்டும் காணொளி வடிவில் திரையிடப்பட்டது. இதில் பங்கேற்ற 22 சிறுவர்களுக்கும் பாராட்டுச் சின்னங்களும் பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டு அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.
பன்முக கலாச்சார பார்வையாளர்கள்:
இந்த ஆண்டின் விழாவை இன்னும் பிரத்தியேகமாக்கியது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விருந்தினர்கள் அளித்த பங்கேற்பும் பங்களிப்பும். அவர்கள் பார்வையாளர்களாக மட்டுமல்லாது, கலைஞர்களாகவும் மேடையை சிறப்பித்தனர். இத்தகைய பன்முகத் தன்மை, தைவான் தமிழ்ச்சங்கம் இந்தியா-தைவான் கலாச்சார பாலமாக விளங்குவதற்கான உறுதியான சான்றாய் திகழ்கிறது. தொகுப்பாளர்களாக கிரன் கேசவன், அருண், ரெனி அஜாய் ஆகியோர் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளின் இனிமையைப் பரிமாறும் பாலங்களாக இருந்து நிகழ்வை நடத்தினர்.
அறுசுவை விருந்து - நிறைவு நிகழ்ச்சி:
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாரம்பரிய அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் சு.பொன்முகுந்தன் மற்றும் பொருளாளர் தங்கராசு அரிச்சந்திரன் ஆகியோர் விழா ஒருங்கிணைப்பை மேற்கொண்டனர். நிறைவாக சங்க பொருளாளர் ராஜமோகன் நன்றி உரை வழங்க, நாட்டுப்பண்ணின் இனிமை முழங்க விழா நிறைவடைந்தது
- தைவானில் இருந்து நமது செய்தியாளர் ரமேஷ் பரமசிவம்
Advertisement

