/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
தாய்லாந்தும் தமிழகமும் ஒரு சேரக் கொண்டாடும் திருக்கார்த்திகை
/
தாய்லாந்தும் தமிழகமும் ஒரு சேரக் கொண்டாடும் திருக்கார்த்திகை
தாய்லாந்தும் தமிழகமும் ஒரு சேரக் கொண்டாடும் திருக்கார்த்திகை
தாய்லாந்தும் தமிழகமும் ஒரு சேரக் கொண்டாடும் திருக்கார்த்திகை
டிச 17, 2024

தீபாவளிக்கு ஏற்றப்பட்ட தீபங்கள், மக்களின் வளமான வாழ்க்கைக்கு பிரகாசமாக முன்மொழிய, தொடர்ந்து வழி மொழிய வருவதே கார்த்திகை மகா தீபம் என்று சொன்னால், மாற்றுக் கருத்து ஏதுமில்லை. மாதந்தோறும் கார்த்திகை வந்தாலும், கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை சிறப்பாக கொண்டாடப் படுவதால், திருக்கார்த்திகை, பெரிய கார்த்திகை என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு, இல்லங்கள், ஆலயங்கள் என அனைத்து இடங்களும் ஜெக ஜோதியாய், மகாதீபம் மின்னும் நாளாக கொண்டாடப்படுகிறது.
இங்கு தாய்லாந்திலும், நமது கார்த்திகை என்பது மருவி க்ரத்தோங் ஆகி, லாய் க்ரத்தோங் என்ற பெயரில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தாய்லாந்து மக்கள் வாழை மட்டை மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத பொருட்களை கொண்டு விளக்குகளாக உருவாக்கி, அவர்களுடைய விருப்பங்களை, பிரார்த்தனைகளாக இறைவனிடம் வேண்டி, அதை நீர் நிலைகளில், மிதக்க விடுகிறார்கள்.
அவ்வாறு செய்யும் போது, அவர்களுடைய பிரார்த்தனைகளுக்கு பலன் கிடைப்பதால், பல ஆண்டுகளாக இந்த நிகழ்வை, தாய்லாந்து மக்கள் உணர்வுப்பூர்வமாக கொண்டாடும் ஒரு விழாவாக, கார்த்திகை திருவிழாவை கொண்டாடி வருகிறார்கள். இது நமது இந்தியா மற்றும் தாய்லாந்துக்கான கலாச்சார தொடர்பை, ஊர்ஜிதப்படுத்தும் ஒரு விழாவாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருக்கார்த்திகையை முன்னிட்டு பேங்காக் ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்திலும், ஆலயத்தின் மேல் பகுதியில் மாட விளக்குகள் ஏற்றப்பட்டு, பக்தர்களும் ஐந்து முக விளக்குகளை, முருகன் மற்றும் சிவன் சன்னதியில் ஏற்ற, சிறப்பு வேள்விகள் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு, இரவு 9 மணிக்கு சொக்கப்பான் கொளுத்தப்பட்டது. தமிழகத்தில் புகழ்பெற்ற பெரிய கோவில்களில் நடைபெறுவது போல், ஆகம விதிகளைப் பின்பற்றி இங்கு அனைத்து பூஜைகளும் நடைபெறுவது கூடுதல் சிறப்பாக இருந்தது.
உள்ளுர் தாய் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு, நிகழ்ச்சி இறுதி வரை இருந்து, சொக்கப்பான் கொளுத்திய கரித்தூள், இல்லத்து பூஜைக்கு எடுத்துச் சென்றது, அவர்களுக்கு கார்த்திகை தீபத்தின் மேல் உள்ள நம்பிக்கையை பிரதிபலிப்பதாக இருந்தது.
- நமது செய்தியாளர் சரவணன் அழகப்பன்
Advertisement