/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
தமிழர்களை மீட்டெடுத்து தாய்நாடு அனுப்பி வைத்த 'கத்தார் தமிழர் சங்கம்'
/
தமிழர்களை மீட்டெடுத்து தாய்நாடு அனுப்பி வைத்த 'கத்தார் தமிழர் சங்கம்'
தமிழர்களை மீட்டெடுத்து தாய்நாடு அனுப்பி வைத்த 'கத்தார் தமிழர் சங்கம்'
தமிழர்களை மீட்டெடுத்து தாய்நாடு அனுப்பி வைத்த 'கத்தார் தமிழர் சங்கம்'
ஆக 04, 2024

வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக்கூறி அப்பாவி இளைஞர்களிடம் பணம் பறித்துவிட்டு ஏமாற்றிவிடும் முகவர் கூட்டம் தமிழகம் உட்பட இந்தியாவின் பலநகரங்களில் பெருகிவருகிறது.
கடந்த மாதம் வளைகுடா நாடுகளின் மேல் கொண்ட வேலை மோகத்தால் ஏமாற்றுப்பேர்வழிகளின் வலையில் மாட்டிக்கொண்டு சிக்கித் திணறிய தமிழர்களை கத்தார் தமிழர் சங்கம் மீட்டு, பாதுகாப்பாக தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைத்தது.
சென்ற மாதம் தென் தமிழக திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து 18 இளைஞர்கள் வெளிநாட்டு வேலைக்காக முகவர் ஒருவரின் தவறான வழிகாட்டுதலில் கத்தார் வந்தனர். எப்படியும் ஒரு வேலை வாங்கி விடவேண்டும் என்கிற நெடுநாள் கனவில் தவறான முகவரை விசாரிக்காமல் அணுக அவரும் ஆசைகாட்டி பெரும்பணம் பறித்துக் கொண்டு அனுப்பி வைத்துள்ளார்.
கனவுகளோடு கத்தாரில் கால்பதித்த 18 பேருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. ஒப்பந்தப்படி பணியும் வழங்கப்படவில்லை. அடிப்படை தேவையான உணவு, தண்ணீர், சரியான தங்குமிடமும் தராததால் பெரும் அவதியில் தவித்த நிலையில் நல்வாய்ப்பாக கத்தாரில் வாழும் நண்பர் ஒருவரின் மூலமாக கத்தார் தமிழ் அமைப்பான கத்தார் தமிழர் சங்கத்தை அணுகி முறையிட்டனர்.
இதை அறிந்தவுடன் கத்தார் தமிழர் சங்க தலைவர் மற்றும் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் விரைந்து சென்றனர். ஏமாற்றப்பட்ட 18 நபர்களின் தினசரி உணவிற்கான ஏற்பாடுகளை செய்து தந்தனர். மேலும், கத்தார் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு அவர்களுடைய கோரிக்கையை தெரியப்படுத்தினர்.
மேலும் வேலை வாங்கித் தருவதாக அழைத்து வந்த முகவரை தூதரக உதவியுடன் அணுகி அயல்நாட்டு விசா செல்லுபடி காலம் உள்ள ஆறு பேருக்கு உடனடியாக விமான பயணச்சீட்டை எடுத்துக் கொடுத்து அவர்களை பத்திரமாக இந்திய நாட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
எஞ்சிய 12 பேருக்கும் தமிழக அரசின் அமைப்பான என்.ஆர்.டி எனும் அயலக தமிழர் நல அமைப்பு வாயிலாக விமானப் பயணச்சீட்டை பெற்றுத்தந்து கடந்த புதன் கிழமை 31.07.2024 அன்று இந்தியாவிற்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்கப் பட்டனர்.
இவர்கள் அனைவரும் கத்தார் வருவதற்கு முன்பு இடைப்பட்ட காலம், நேபாளத்தில் தங்க வைக்கப்பட்டு அதன் பிறகு கத்தருக்கு A1 விசா மூலமாக அழைத்து வரப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில், பயணச்சீட்டு கொடுத்து உதவிய என்.ஆர்.டி., மற்றும் துரிதமாக ஒப்புதல் தந்த கத்தார் அரசு, ஒப்புதல் வாங்கித்தர உதவிபுரிந்த கத்தருக்கான இந்திய தூதரகம் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான உணவை இலவசமாக கொடுத்து உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டது, கத்தார் தமிழர் சங்கம்.
இந்த சம்பவம் ஒரு பாடம், இதன் மூலம் அனைவரும் விழிப்புணர்வு கொள்ள வேண்டும் என்று கத்தார் தமிழர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
கத்தாரில் வேலை செய்ய பணி நியமன ஒப்பந்தம் கிடைத்தவர்கள் அந்த நிறுவனத்தின் உண்மைத் தன்மையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு கத்தார் தமிழர் சங்கத்தின் இணையத்தின் வழியாகவும் (qatartamizharsangam.org/contact-us/), என்.ஆர்.டி இணையத்தின் வழியாகவும் (https://https://nrtamils.tn.gov.in/en), மின்னஞ்சல் (qtsqatar@gmail.com), WhatsApp எண் +974 33521857 மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று கத்தார் தமிழர் சங்கம் அறிவுறுத்தியது.
- நமது செய்தியாளர் எஸ். சிவ சங்கர்
Advertisement