/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
கத்தாரில் 'வேட்டையன்' - திருவிழாவாக களைகட்டிய ரஜினி ரசிகர் மன்றத்தின் சிறப்புக் காட்சி.
/
கத்தாரில் 'வேட்டையன்' - திருவிழாவாக களைகட்டிய ரஜினி ரசிகர் மன்றத்தின் சிறப்புக் காட்சி.
கத்தாரில் 'வேட்டையன்' - திருவிழாவாக களைகட்டிய ரஜினி ரசிகர் மன்றத்தின் சிறப்புக் காட்சி.
கத்தாரில் 'வேட்டையன்' - திருவிழாவாக களைகட்டிய ரஜினி ரசிகர் மன்றத்தின் சிறப்புக் காட்சி.
அக் 14, 2024

உலகெங்கும் கடந்த அக்டோபர் 10ம் தேதி வியாழக்கிழமை சூப்பர் ஸ்டார் ரஜினியின் 170வது திரைப்படமான வேட்டையன் வெளியாகி தமிழ் மக்களின் அமோக ஆதரவோடு சக்கைப்போடு போட்டு வருகிறது. கத்தார் நாட்டிலும் வேட்டையன் திரைப்படம் வெளியாகி அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. கத்தார் ரஜினி மன்றம் தமிழ் மக்களுக்காக பிரத்யேக சிறப்பு ரசிகர் காட்சியை ஏற்பாடு செய்து அதை ஒரு பண்டிகை விழா போலவே அரங்கேற்றி ஆச்சரியப் படுத்தியது.
தலைநகர் தோஹாவில் அமைந்துள்ள முஷ்ரிஃப் பகுதியின் நோவோ கலேரியா திரையரங்கில் 10ம் தேதி வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு கத்தார் ரஜினி மன்றம் சிறப்புக்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது. விதவிதமான ரஜினியின் பதாகைகள் திரையரங்க வளாகத்தை அலங்கரிக்க, விழாக்கோலம் பூண்டிருந்தது நோவோ கலேரியா. தமிழ் மக்கள் குடும்ப குடும்பமாக வந்திருந்து மகிழ்ந்தது ஒருபுறம் என்றால் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் 'வேட்டையன்' பட ரஜினியின் புகைப்படம் அச்சடித்த கொசுவச் சட்டையை (டி-சர்ட்) அணிந்து பெரும்படையாக காட்சியளித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அரங்க நுழைவாயிலில் நின்ற ரஜினி மன்ற நிர்வாகிகள், தமிழ்மக்கள் அனைவரையும் முகம் மலர வரவேற்று அவர்களின் அகம் குளிர இனிப்பு வழங்கி உள்ளே அனுப்பி வைத்தனர். முதலில் ரஜினியின் 50வது திரைப்படச் சாதனை வரலாற்றுச் சாதனையை கொண்டாடும் விதமாக அவருடைய வேட்டையன் புகைப்படம் மற்றும் பெயரோடு வடிவமைக்கப்பட்ட கேக் வெட்டப்பட்டு அதை அங்கு கூடியிருந்த சிறுவர் சிறுமிகள் உண்டு மகிழ்ந்தனர்.
அதைத்தொடர்ந்து 50 வருட சாதனையாளர் ரஜினியை போற்றிப் பெருமை செய்யும் வகையில் கருத்தாழமும், கலகலப்பும், ஸ்டைலும் நிறைந்த 10 நிமிட காணொலி திரையிடப்பட்டது. காணொலியில் அவர் கடந்து வந்த பாதை, கடுமையான உழைப்பு, காலத்துக்கும் நிலைக்கும் சாதனைகள், வெற்றிகள் என்று பல்வேறு அம்சங்கள் காட்சியாக வந்ததால் அதைக் கண்டு ஆரவாரமும், ஆர்ப்பரிப்பும், உணர்ச்சி வயப்பட்டு கண் கலங்குவதுமாக ரசிகர்கள் பேரானந்த நிலையில் கொண்டாடி கரகோஷம் எழுப்பி மகிழ்ந்தனர்.
பிறகு வேட்டையன் திரைப்படம் ஆரம்பமானதும் ரசிகர்கள் இருக்கையில் இருப்புகொள்ளாமல் பாடல் மற்றும் மாஸான சண்டைக் காட்சிகளில் திரைக்கு முன்பாக திரண்டு ஆடிப்பாடி விசிலடித்து கொண்டாடியதை பார்த்தபோது தமிழகத்தின் திரையரங்கின் உள்ளே இருப்பது போன்றதொரு நேர்மறை அலை நிரம்பித் ததும்பியதை உணரமுடிந்தது.
திரைப்படம் நிறைவுற்று ரஜினி ரசிகர்களும் பொதுமக்களும் வெளியே வரும்போது மன்ற நிர்வாகிகளான கார்த்திக், குரு, முத்து, சிவசங்கர், பால்ராஜ், உமா ஷங்கர், வெங்கட் ஆகியோர் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு ரஜினியின் வேட்டையன் புகைப்படம் கொண்ட 2025ம் ஆண்டுக்கான வண்ண காலண்டரை ஒவ்வொருவருக்கும் நன்றிப் பரிசாக வழங்கினர்.
அப்போது, 'அக்டோபர்ல நியூ இயர் காலண்டர் தராங்க... எதுக்கும்மா?' என்று ஒரு சிறுமி வியப்புடன் கேட்க, அதற்கு சிறுமியின் அம்மா, 'ரஜினி ரசிகர்களுக்கு ரஜினி படம் ரிலீசாகும் நாள்தான் பண்டிகை நாள். இப்போ புதுவருடபிறப்பு நாளும் அந்த லிஸ்ட்ல சேர்ந்திருச்சு. அதனாலதான் 2025 காலண்டரை இப்போதே தராங்க' என்று பதில் சொன்னது, அரங்கத்தின் வெளியே அனைவரையும் புன்னகைக்க வைத்தது, மேலும் கத்தார் ரஜினி மன்ற நிர்வாகிகளின் மனதும் மகிழ்ச்சியால் இனிப்பாக நிறைந்தது.
- நமது செய்தியாளர் சிவ சங்கர். S
Advertisement