/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஷார்ஜாவில் 44வது சர்வதேச புத்தக கண்காட்சி
/
ஷார்ஜாவில் 44வது சர்வதேச புத்தக கண்காட்சி
அக் 11, 2025

ஷார்ஜாவில் 44வது சர்வதேச புத்தக கண்காட்சிஅடுத்த மாதம் 5 ஆம் தேதி தொடங்குகிறது
ஷார்ஜா: ஷார்ஜாவில் 44வது சர்வதேச புத்தக கண்காட்சி அடுத்த மாதம் 5 ஆம் தேதி தொடங்குகிறது. இத்தகவலை ஷார்ஜா புத்தக ஆணையத்தின் தலைவர் அகமது பின் ரக்காட் அல் அமெரி தெரிவித்தார்.அவர் கூறியதாவது :ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் அடுத்த மாதம் நவம்பர் 5 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை 44வது ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி நடக்க இருக்கிறது.இந்த கண்காட்சி 'புத்தகத்துக்கும் உங்களுக்கும் இடையே' (between you and a book) என்ற கருப்பொருளில் நடக்கிறது. ஷார்ஜா ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமியின் ஆதரவுடனும், ஷார்ஜா புத்தக ஆணையத்தின் தலைவர் ஷேக்கா பொதுர் பிந்த் சுல்தான் அல் காசிமியின் வழிகாட்டுதலிலும் இந்த கண்காட்சி நடக்கிறது.இந்த ஆண்டு நடைபெறும் கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், சவுதி அரேபியா, இந்தியா, லெபனான், சிரியா, எகிப்து உள்ளிட்ட 118 நாடுகளைச் சேர்ந்த 2,350 புத்தக நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இந்த ஆண்டில் கிரீஸ் நாடு சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறது. இதன் மூலம் அந்த நாட்டின் கலை, கலாச்சாரம், இலக்கியம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
66 நாடுகளைச் சேர்ந்த 251 விருந்தினர்கள் பங்கேற்கும் 1,200 க்கும் மேற்பட்ட கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பொதுமக்களை மேலும் அதிகம் கவரும் வகையில் கவிதை பார்மசி, பாப் அப் அகாடமி, போட்காஸ்ட் நிலையம் உள்ளிட்ட பல்வேறு புதிய நிகழ்ச்சிகளும் நடத்தப்பட இருக்கிறது.
புத்தக திருவிழாவையொட்டி 15வது புத்தக வெளியீட்டாளர் கருத்தரங்கு அடுத்த மாதம் நவம்பர் 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை நடக்கிறது. மேலும் சார்ஜா சர்வதேச நூலக கருத்தரங்கு அடுத்த மாதம் நவம்பர் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
--ஷார்ஜாவில் இருந்து நமது செய்தியாளர் காஹிலா
Advertisement