/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
சவூதி-இந்திய பண்பாட்டு ஒற்றுமையின் பிரம்மாண்ட கொண்டாட்டம்
/
சவூதி-இந்திய பண்பாட்டு ஒற்றுமையின் பிரம்மாண்ட கொண்டாட்டம்
சவூதி-இந்திய பண்பாட்டு ஒற்றுமையின் பிரம்மாண்ட கொண்டாட்டம்
சவூதி-இந்திய பண்பாட்டு ஒற்றுமையின் பிரம்மாண்ட கொண்டாட்டம்
ஜன 21, 2026

ஜெத்தா: இந்தியர்களுடன் கைகோர்த்து பல சவூதி குடிமக்களும் இணைந்து சுமார் 3,000 பேர், 2026 ஜனவரி 16 (வெள்ளிக்கிழமை) ஜெத்தாவில் நடைபெற்ற சவூதி-இந்தியா விழா, சீசன் 2 நிகழ்வில், நீடித்து வரும் சவூதி-இந்திய நட்பு மற்றும் கூட்டாண்மையை, மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த மனதுடன் கொண்டாடினர்.
இந்நிகழ்வு குட்வில் குளோபல் இனிஷியேட்டிவ் (GGI) அமைப்பின் ஒருங்கிணைப்பில், இந்திய துணைத் தூதரகத்துடன் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வண்ணமயமான விழாவில் இந்திய துணைத் தூதர் ஃபஹத் அகமது கான் சூரி முதன்மை விருந்தினராக சிறப்பித்தார்.
“.5 செ.மீ. காரிடார்” என்ற ஊக்கமூட்டும் கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த மாபெரும் விழா, வளைகுடா பிராந்தியத்தில் இந்தியர்கள் குடியேறிய அரை நூற்றாண்டு வரலாறு — ஒரு காலத்தில் உலகின் இரண்டாவது பெரிய குடியேற்றப்பாதை என்று மையப்படுத்தி இரு நாடுகளுக்கிடையேயான ஆழமான உறவுகளை வலியுறுத்தியது.
150-க்கும் மேற்பட்ட சவூதி மற்றும் இந்திய கலைஞர்கள் மேடையை அலங்கரித்து, தங்கள் மயக்கும் கலை நிகழ்ச்சிகளால் அரங்கத்தை முழுவதும் உயிர்ப்பித்தனர்.
தனது முக்கிய உரையில், துணைத் தூதர் ஃபஹத் அகமது கான் சூரி, இரு மகத்தான நாடுகளுக்கிடையே நிலவும் உன்னதமான பண்பாட்டு பிணைப்பும் நட்பும் கொண்டாடப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இத்தகைய கொண்டாட்டங்கள் இந்தியா-சவூதி அரேபியா கிடையேயான நூற்றாண்டுகள் பழமையான பண்பாட்டு பிணைப்புகளை மேலும் பலப்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.
விழாவை சிறப்பாக வடிவமைத்த குட்வில் கிளோபல் இனிஷியேட்டிவ் (GGI) அமைப்பின் தொலைநோக்கும் அயராத அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.
GGI தலைவர் ஹசன் செருப்பா தலைமையில் நடைபெற்ற தொடக்க அமர்வில், டாக்டர் அஷ்ரஃப் அமீர், டாக்டர் ரீம் அல்-மதானி, டாக்டர் முகம்மது இம்ரான், அகமது அலுங்கல் மற்றும் ரஹீம் பட்டர்கடவன் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர். GGI பொதுச் செயலாளர் இஷாக் பூண்டோலி வரவேற்புரை நிகழ்த்த, பொருளாளர் ஜலீல் கண்ணமங்கலம் நன்றியுரை வழங்கினார்.
சுமார் ஐந்து மணி நேரம் நீடித்த இந்த ஒளி-ஒலி நிகழ்ச்சியில், 150-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை முழுமையாக கவர்ந்தன. அரபு மற்றும் இந்திய பாரம்பரிய நடனங்கள், நாட்டுப்புற கலைகள் இணைந்த இந்த பண்பாட்டு விருந்து, இரு நாடுகளின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டியது .
பாதி சாட் அல்-ஹவ்சாவி தலைமையிலான 'சௌத்துல் மம்லகா' சவூதி நாட்டுப்புற கலைக்குழுவின் நிகழ்ச்சிகள் பெரும் பாராட்டைப் பெற்றன. பஹ்ரி, மிஸ்மாரி, குபைதி, ஜஸானி, குத்வா ஜனூபியா போன்ற சவூதி பாரம்பரிய கலை வடிவங்களில் அவர்கள் வெளிப்படுத்திய ஆற்றல் பார்வையாளர்களை மெய் மறக்கச் செய்தது.
அதேபோல், இந்திய பரதநாட்டியம், குஜராத்தி, பஞ்சாபி, ஒடிசி சம்பல்புரி, கதக் உள்ளிட்ட நடனங்களை வழங்கிய இந்திய இளம் கலைஞர்கள், இந்தியாவின் பண்பாட்டு செழுமையை மனம் கவரும் வகையில் வெளிப்படுத்தினர்.
சிறப்பு அம்சமாக இடம் பெற்ற சவூதி-இந்திய ஃப்யூஷன் நடனம், இந்தியர்களின் அரேபியாவுக்கான ஆரம்பகால குடியேற்றத்தை மையமாக சித்தரித்து, பகிர்ந்த வரலாறும் பண்பாட்டு ஒற்றுமையும் அழகாக வெளிப்படுத்தியது.
சுமார் 150 திறமையான இளைஞர்கள் பல்வேறு பாரம்பரிய மற்றும் ஃப்யூஷன் நடனங்களை மேடையேற்றினர்; இந்நிகழ்ச்சிக்கு GGI மகளிர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரஹ்மத் முஹம்மது அலுங்கல் பெரும்பாலும் நடன அமைப்பு வடிவமைத்தார். குட் ஹோப் ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ் அகாடமி மற்றும் ஃபெனோம் அகாடமி கலைஞர்களும் சிறப்பாக பங்கேற்றனர்.
நினைவில் நிற்கும் இந்த மாலையின் நிறைவாக, துணைத் தூதர் ஃபஹத் கான் சூரி மற்றும் கான்சுல் (P&C) சான்சரி அதிகாரி ஐ.எம். ஹுசைன், ஆதரவாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி, இரு நாடுகளின் ஒற்றுமை,மற்றும் கூட்டுப் பங்களிப்பு என்ற செய்தியை அழுத்தமாக வெளிப்படுத்தினர்.
- ஜெத்தாவிலிருந்து நமது செய்தியாளர் M Siraj
Advertisement

