/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
கத்தார் நாட்டில் கலாச்சாரத் திருவிழா - 'பாரத் உத்சவ்'
/
கத்தார் நாட்டில் கலாச்சாரத் திருவிழா - 'பாரத் உத்சவ்'
கத்தார் நாட்டில் கலாச்சாரத் திருவிழா - 'பாரத் உத்சவ்'
கத்தார் நாட்டில் கலாச்சாரத் திருவிழா - 'பாரத் உத்சவ்'
அக் 29, 2024

கத்தார் நேஷனல் கன்வென்ஷன் சென்டரில் உள்ள அல் மய்யாஸா ஹாலில் நடைபெற்ற பாரத் உத்சவ் என்ற மாபெரும் நிகழ்வின் மூலம் இந்திய கலாச்சார மையம் (ICC) இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை உயிர்ப்பித்தது கிராமியக் கலை உலகத்துக்கு உற்சாகம் ஊட்டியது.
இந்த நிகழ்வில் கத்தார் அரசின் சார்பில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும் பதினெட்டு நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள், இந்தியத் தூதர், தூதரக அதிகாரிகள், உயர்மட்ட அமைப்பின் தலைவர்கள், கத்தாரில் இயங்கி வரும் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கான சமூக அமைப்புகளின் தலைவர்கள், கத்தார் வாழ் இந்தியர்களின் வெவ்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்று, பாரத நாட்டின் பல மொழிகள், மரபுகள் மற்றும் கலை அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில், வேற்றுமையில் இந்தியாவின் ஒற்றுமையை இந்த கலைவிழா படம்பிடித்துக் காட்டியது.
விழாவின் முதன்மை விருந்தினரும் கத்தாருக்கான இந்தியத் தூதர் விபுல், தனது சிறப்புரையில், இந்திய கலாச்சாரத்தின் வளத்தை துடிப்பாக காட்சிப் படுத்துவதில் ஐசிசி நிர்வாகக் குழு மற்றும் இந்திய சமூகம் தனது கடின உழைப்பை தொடர்ந்து வழங்கி வருவதைக் குறிப்பிட்டுப் பாராட்டினார். இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே நீடித்துவரும் பரஸ்பரப் பிணைப்பு, பகிர்ந்து கொள்ளப்பட்ட மதிப்பு மற்றும் கௌரவ சம்பவங்கள் ஏராளமானவை என எடுத்துரைத்து, இதன் அடிப்படையில் தான் கடந்த ஐம்பது வருடங்களாக இருநாடுகளுக்குமிடையே புரிந்துணர்வு அமோகமாக இருந்து வருகிறது என்றார்.
இந்த 'பாரத் உத்சவ்' நிகழ்வின் நினைவாக, இந்தியா- கத்தார் உறவுகளை வலுப்படுத்துவதில் கலாச்சாரத்துக்கு உரிய முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் சிறப்பு நினைவுப் பரிசையும் அவர் வெளியிட்டார். இந்தியத் தூதரகத்தின் முதன்மைச் செயலாளரான டாக்டர் வைபவ் தண்டலே இந்தக் கலாச்சார நிகழ்வுக்கான திட்டமிடுதல், வழிகாட்டுதல் மேலும் முழு ஆதரவையும் வழங்கி மகத்தான வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
ஐசிசி தலைவர் ஏ.பி.மணிகண்டன், தனது வரவேற்புரையில், இதுபோன்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கலாச்சாரப் பெருவிழாவை தான் முன்னின்று நடத்தும் வாய்ப்பு அமைந்ததை எண்ணிப் பெருமிதம் கொள்வதாகக் கூறினார். கத்தாரில் உள்ள இந்திய பள்ளிகள், சமூக அமைப்புகள் மற்றும் கலாச்சார சங்கங்களின் குழுக்களை ஒன்றிணைத்து 44 பரிமாணத்தில் கலைநிகழ்ச்சிகள் அரங்க மேடையில் நடத்தப்பட்டு பார்வையாளர்களை மகிழ்வுறச்செய்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வை தங்குதடையின்றி தெளிந்த நீரோடை போல செயல்படுத்தியமைக்கு அடிப்படையாக இருந்தது ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரான பி. என். பாபுராஜனின் உந்துசக்தியும் மற்றும் அவரது குழுவினரின் கடின உழைப்பு. கலாச்சார செயலாளர் நந்தினி அப்பாகோனி மற்றும் சாந்தனு தேஷ்பாண்டே ஆகியோர் கலைவிழாவை திட்டமிட்டு செம்மையாகச் செயல்படுத்தினர்.
மாலை நிகழ்ச்சிகளை அன்ஷு ஜெயின் வெகு நேர்த்தியாகத் தொகுத்து வழங்கினார். ஐசிசி பொதுச் செயலாளர் மோகன்குமார் விழாவுக்கு வந்திருந்த பெருந்தகைகளையும், இந்திய மக்களையும் வரவேற்புரை வாயிலாக அகம் குளிர வைத்தார். அனைவரையும் வரவேற்று ஆங்கிலத்தில் பேசிய மோகன்குமார் திடுமென தமிழில் பேசி, பாரதியின் 'முப்பது கோடி முகமுடையாள்..உயிர் மொய்ம்புற வொன்றுடையாள்...' கவிதை வரிகளை மேற்கோள் காட்டி, உடனே அதனை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து அந்த மாலை நேரத்து நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த சாராம்சத்தை நச்சென்று நாலு வரிகளில் உணர்த்தியதும் அரங்கமே ஆரவாரத்தில் அதிர்ந்து, ஆர்ப்பரித்தது. துணைத் தலைவர் சுப்ரமணிய ஹெப்பகேலு நகைச்சுவையோடு தனது நன்றியுரையை அற்புதமாக வழங்கினார்.
பாரத் உத்சவ் கலைவிழாவில் கிராமியக் கலைவடிவங்களை காட்சிப்படுத்துவதே பிரதான குறிக்கோள் என்பதால் தமிழகத்தின் நாட்டுப்புறக் கலைகளும் அரங்கேறியது.
விழாவின் தமிழ்த்துளிகள்:
கத்தார் தமிழர் சங்கத்தின் தலைவர் மணிபாரதி, கலாச்சார செயலாளர் கார்த்திக் ஆகியோரின் முன்னெடுப்பில் 'வீ.டூ. நடனக்குழு' வெங்கட்பிரபு படைப்பில், ஆசான் சரவணனின் ஆரூத்ரா சிலம்பக்கலைக்கூடம் சேர்ந்து அரங்கேற்றிய தமிழக நாட்டுப்புறக் கலைநடனத்தில் போர்க்கலை, ஜல்லிக்கட்டு, விவசாயம், பரிவேட்டை ஆகியவைகளை கண்கவர்விதமாக வழங்கப்பட்டது.
நடன ஆசான் முத்துலஷ்மியின் வடிவமைப்பில், கலைச்செல்வர் விஜய் ஆனந்தின் தலைமையில் ஃபன் டே குழுவினர் வழங்கிய முளைப்பாரி, கரகம், ஒயிலாட்டம் ஆகியவைகளை கலந்துகட்டிய பிரத்யேக கிராமிய நடனம் தமிழகத்தின் தென்மாவட்டத்தில் நடக்கும் கிராமத்து திருவிழாவையும், அதன் மண்மணத்தையும் கத்தாருக்கு வரவழைத்தது போலவே இருந்தது, பார்வையாளர்களை மெய்மறந்து ரசித்து ஆட்டம் போடவும் வைத்தது.
கடைசியாக அரங்கில் வந்தாடிய நோர்வா கத்தார் குழுவினர் அலப்பறை கிளப்பினார்கள் என்றே சொல்லவேண்டும், கிராமிய துள்ளலிசை, நகர குத்தாட்டம், நளினமான மெல்லிசை ஆட்டம் என்று மேடையில் பல்சுவை நாட்டிய விருந்து படைத்து மக்களை மகிழ்வித்தனர்.
இந்த நிகழ்வானது இந்தியாவின் பல்வேறு நாட்டுப்புறக் கலைவடிவங்களை மற்றும் மாநிலங்களின் சுற்றுலா சிறப்பம்சங்களை மேடையேற்றியது. பார்வையாளர்களுக்கு பாரத நாட்டின் வளமான கலாச்சாரம், பாரம்பரியம், வீரம் மற்றும் கலாச்சார வேறுபாட்டிலும் மகத்தான மனிதநேயம் கொண்ட ஒற்றுமை ஆகியவைகளின் உண்மையான புரிதலை வழங்கியது.
கத்தாரில் வாழும் சுமார் எட்டு லட்சம் இந்தியர்களை அடையாளப்படுத்தும் இதுபோன்ற ஐசிசியின் மாபெரும் நிகழ்ச்சிகளில் இந்திய சமூகத்தின் பல்வேறு சமூக-கலாச்சார அமைப்புகளின் தன்னார்வம், ஒத்துழைப்பு, பங்கேற்பு மற்றும் ஈடுபாடு நிறைந்த அர்ப்பணிப்பு ஆகியவை முக்கியக் காரணிகளாக காணப்படுகிறது. கத்தாரில் இது போன்ற நிகழ்வுகளில் ஒட்டுமொத்த இந்திய சமூகமும் ஒன்றுகூடி கொண்டாடி மகிழ்வது குறிப்பிடத்தக்கது.
- நமது செய்தியாளர் S. சிவ சங்கர்
Advertisement