/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
சரித்திர சாதனை படைத்த கத்தார் ஆருத்ரா சிலம்ப கலைக்கூடம் மாணவ மாணவியர்
/
சரித்திர சாதனை படைத்த கத்தார் ஆருத்ரா சிலம்ப கலைக்கூடம் மாணவ மாணவியர்
சரித்திர சாதனை படைத்த கத்தார் ஆருத்ரா சிலம்ப கலைக்கூடம் மாணவ மாணவியர்
சரித்திர சாதனை படைத்த கத்தார் ஆருத்ரா சிலம்ப கலைக்கூடம் மாணவ மாணவியர்
ஆக 12, 2024

கத்தார் ஆருத்ரா சிலம்ப கலைக்கூடம் மாணவ மாணவியர் சர்வதேச பொது சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டிகளில் 48 பதக்கங்களை அள்ளிக்குவித்து சாதனை படைத்தனர்.
ஆகஸ்ட் முதல் வாரம் பாண்டிச்சேரியில் எம். எம். சி. சிலம்பம் குழுவினரால் முதலாம் சர்வதேச பொது சிலம்ப சாம்பியன்ஷிப் 2024 போட்டி நடைபெற்றது.
சிலம்பச் சாம்பியர்களுக்கான இந்தப் போட்டியில் கலந்து கொள்ள உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து 2000க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர் வீராங்கனைகள் வந்தனர்.
கத்தார் சார்பாக கத்தார் நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக சிலம்ப பயிற்சிக்கூடம் நடத்தி, வீரர் வீராங்கனைகளை உருவாக்கி வரும் 'ஆருத்ரா சிலம்ப கலைக்கூடம்' தனது மாணவர்களை இந்த சர்வதேச போட்டியில் பங்கேற்க அனுப்பி வைத்தது. இந்தப் போட்டியில் கலந்து கொண்ட அந்த வீரச்செல்வங்கள் மிகப்பிரம்மாண்டமான வெற்றியை பெற்றனர். 19 தங்கமும், 13 வெள்ளியும், 16 வெண்கல பரிசுகளும் என மொத்தம் 48 பதக்கங்களைப் பெற்று வெற்றி வாகையை தட்டித்தூக்கினர்.
இது ஆருத்ரா சிலம்ப கலைக்கூடத்தின் சரித்திர சாதனை எனச் சொல்லக் காரணம் என்னவென்றால், கத்தார் சிலம்ப வரலாற்றில் சர்வதேச சிலம்பம் போட்டிகளில், ஒரு போட்டியில் மட்டும் 48 பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வென்ற முதல் சிலம்ப பள்ளி என்ற பெருமையை ஆருத்ரா சிலம்ப கலைக்கூடம் பெற்றுள்ளது என்பது தான். இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய சம்பவம் என கத்தார் வாழ் தமிழ்ச்சமூகம் பாராட்டி வருகிறது.
மாணவர்கள் தங்களது நேரத்தை ஒதுக்கி, பொறுப்புடன் தீவிர மாகவும், நேர்த்தியாகவும் சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு சர்வதேச போட்டியில் மனவுறுதியுடன் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் என பரிசுகள் வென்று கத்தார் வாழ் தமிழருக்கும், தமிழுக்கும் பெருமை சேர்த்துள்ளனர் என்பதனை பேருவகையோடு தெரிவித்துக் கொண்டது, ஆருத்ரா சிலம்ப கலைக்கூடம்.
மேலும், தமிழரின் பாரம்பரிய வீரக் கலை மட்டுமின்றி, போர்க்கலைக்கு எல்லாம் தாய் கலையான சிலம்ப கலையை உலக அரங்கில் தங்களது திறமையால் வெற்றி கொண்டு, உலக நாடுகளை கத்தார் நோக்கி திரும்பி பார்க்க வைத்த பெருமை ஆருத்ரா சிலம்ப கலைக்கூட மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் சேரும்.
வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் உறவுகள் அனைவரும் தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
தமிழரின் சிலம்ப கலையில் தொடர்ந்து பல முக்கிய வெற்றிகளை மீண்டும், மீண்டும் தனதாக்கி கொண்டு, கத்தார் தேசத்தை பெருமைபடுத்தும் மாணவச் செல்வங்களை உள்ளம் மகிழ பாராட்டிய தமிழ் உறவுகள் அனைவருக்கும், மற்றும் ஆருத்ரா சிலம்ப கலைக்கூட மாணவ மாணவிகளை வாழ்த்தி, ஊக்கமளித்து வரும் பிற தமிழ் அமைப்புகளுக்கும் ஆருத்ரா சிலம்ப கலைக்கூடத்தின் நிறுவனர் மற்றும் ஆசான் சரவணன், ஆசான் சீனிவாசன் முருகன் ஆகியோர் அன்பு பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் எஸ். சிவ சங்கர்
Advertisement