/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூரின் இசை உலகில் ஒரு தனித்துவம் - RE-INKARNATION இசைக்குழு
/
சிங்கப்பூரின் இசை உலகில் ஒரு தனித்துவம் - RE-INKARNATION இசைக்குழு
சிங்கப்பூரின் இசை உலகில் ஒரு தனித்துவம் - RE-INKARNATION இசைக்குழு
சிங்கப்பூரின் இசை உலகில் ஒரு தனித்துவம் - RE-INKARNATION இசைக்குழு
மார் 07, 2026

சிங்கப்பூரின் இசை உலகில் ஒரு தனித்துவம் - “RE-INKARNATION” இசைக்குழு
இசை என்பது மொழி, நாடு, மதம் என்பவற்றைக் கடந்து மனிதர்களின் மனங்களை ஒன்றிணைக்கும் சக்தியாகும். உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்கள் தங்கள் பண்பாட்டையும் கலைத்திறனையும் இசையின் வழியாக வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் “RE-INKARNATION” இசைக்குழு, தமிழ் இசை உலகில் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி வருகிறது.
இந்த இசைக்குழுவை நிறுவியவர் கௌசிக் (Kaushik). இசையின் மீது கொண்ட ஆழ்ந்த ஆர்வத்தையும் கலைக்கான அர்ப்பணிப்பையும் கொண்டு, பல திறமையான இளைஞர்களை ஒன்றிணைத்து இக்குழுவை உருவாக்கியுள்ளார். இசை என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல; அது மனிதர்களை இணைக்கும் ஒரு பண்பாட்டுப் பாலம் என்ற எண்ணத்துடன் அவர் இந்த இசைக்குழுவை முன்னெடுத்து வருகிறார்.
“RE-INKARNATION” என்ற பெயரே இக்குழுவின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. காலத்தால் மறைந்து போகும் இனிய தமிழ்ப் பாடல்களுக்கு புதிய உயிர் அளித்து, நவீன இசை வடிவங்களுடன் மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இவர்களின் குறிக்கோள். தமிழ்த் திரைப்படப் பாடல்கள், மெலடி இசைகள் மற்றும் மேடை இசை நிகழ்ச்சிகளைப் புதுமையாக வழங்கி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளனர்.“RE-INKARNATION” இசைக்குழுவின் முக்கிய சிறப்பம்சம், பல்வேறு இசைப் பாணிகளையும் கலாச்சாரங்களையும் ஒன்றிணைத்து புதிய ஓர் இசை அனுபவத்தை உருவாக்குவதில் உள்ளது. சிங்கப்பூர் என்பது பல பண்பாடுகள் இணைந்து வாழும் நாடாக இருப்பதால், அந்த பல்வகை அடையாளத்தை இசையின் மூலம் வெளிப்படுத்தும் முயற்சியாக இந்த இசை வடிவம் உருவாகியுள்ளது. பல இனங்களைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் மற்றும் பல்வேறு இசைக்கருவிகள் இணைந்து உருவாக்கும் இவ்விசை, சிங்கப்பூரின் பன்முக பண்பாட்டுத் தன்மையை பிரதிபலிக்கிறது.
தமிழ் மொழி விழா - 2026 இசை நிகழ்ச்சி
சிங்கப்பூரில் நடைபெறும் தமிழ் மொழி விழா - 2026 நிகழ்வின் ஒரு பகுதியாக RE-INKARNATION இசைக்குழு ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சி HEPDA, NEXTAIR, Akshara Kreations மற்றும் தமிழ் மொழிக் கழகம் ஆகிய அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெற உள்ளது. தமிழ் மொழி, இசை, கலாச்சாரம் மற்றும் சமூகத்தின் அடையாளமாக இந்த நிகழ்ச்சி அமையவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஒரு புதிய முயற்சியாக “பாட்டு பாட வா” என்ற அங்கமும் இடம்பெற உள்ளது. இதில் பார்வையாளர்களும் இசைக்கலைஞர்களுடன் இணைந்து பாடும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இசையிலும் தமிழிலும் ஆர்வமுள்ள அனைவருக்கும் இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.
இந்நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பூட்டும் வகையில், அமெரிக்காவிலிருந்து சிறப்புக் கலைஞராக கணேஷ் வெங்கட்ராமன் கலந்து கொள்ள உள்ளார். தமிழ் இசை ரசிகர்களுக்கு பரிச்சயமான இவர், புகழ்பெற்ற “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியில் பங்கேற்றவர். அவரது குரலின் இனிமையும் மேடை ஆற்றலும் பல இசை ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. அமெரிக்காவில் வசித்து வந்தாலும், தமிழ் இசையை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். சிங்கப்பூரைச் சேர்ந்த கலைஞர்கள்: தர்ஷ்ணா, லாவண்யா, வெங்கடேஷ், அலீம், ராகா, நந்திதா, தனுஷ் , அக்ஷரா மற்றும் சென்னையைச் சேர்ந்த ஷேக், சுமன் மற்றும் நிகேஷ் இதில் பங்கேற்பார்கள்.
இந்நிகழ்ச்சியில், மறைந்த தமிழ் இசை மேதைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர்களின் புகழ்பெற்ற பாடல்களும் இடம்பெற உள்ளன. காலத்தால் அழியாத மகாகவி பாரதியார் பாடல்கள் முதல் சமீபத்திய திரைப்பட வெற்றிப் பாடல்கள் வரை, சுமார் இரண்டு மணி நேர இசை விருந்தாக இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதற்காகச் சென்னையிலிருந்து மூன்று புதிய இசைக்கலைஞர்களும் இந்த நிகழ்ச்சியில் இணைகின்றனர். இதன் மூலம் இந்தியாவும் சிங்கப்பூரும் இணையும் ஒரு இசை மேடை உருவாகிறது.மேலும் இந்த நிகழ்ச்சியில்•பண்டிகை கால சந்தை கடைகள்•சுவையான உணவுக் கடைகள்•அதிர்ஷ்ட குலுக்கல் பரிசுகள்
போன்ற பல சிறப்பு நிகழ்வுகளும் இடம்பெற உள்ளன.முன்னதாக சிங்கப்பூரிலும் இந்தியாவிலும் நடைபெற்ற இவர்களின் ஆறு இசை நிகழ்ச்சிகளும் முழு அரங்குடன் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன. ரசிகர்களின் ஆதரவுடன் தொடர்ந்து வளர்ந்து வரும் RE-INKARNATION இசைக்குழு, இம்முறை மேலும் பெரிய இசை விருந்தை வழங்கத் தயாராக உள்ளது.
ஏப்ரல் 18 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சி, குடும்பத்துடன் கலந்து கொண்டு இனிய மாலை நேரத்தைக் கழிக்க ரசிகர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
தமிழ் இசையின் இனிமையையும் இளம் கலைஞர்களின் படைப்பாற்றலையும் இணைத்து உலகம் முழுவதும் தமிழ் இசையின் ஒலியை பரப்பும் முயற்சியாக RE-INKARNATION இசைக்குழு தனது பயணத்தை தொடர்கிறது. கடல் கடந்து வாழ்ந்தாலும், இசையின் இனிமையால் தமது மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை “அக்கரைச் சீமை அழகினில்” மெருகேற்றி உலகுக்கு எடுத்துச் செல்கின்ற கௌசிக் மற்றும் அவரது இசைக்குழு சிங்கப்பூரைத் தாண்டி உலகம் முழுவதும் வானவில் போல மிளிரட்டும்.
- நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்
Advertisement

