/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூர் ஆலயங்களில் அன்னாபிஷேக கோலாகலம்
/
சிங்கப்பூர் ஆலயங்களில் அன்னாபிஷேக கோலாகலம்
நவ 17, 2024

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசித் திங்கள் பூரண நிலவின்போது அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். இந்நிகழ்வில் சிவ லிங்கத்தை முழுவதுமாக அன்னத்தினால் மூடி அலங்கரித்து வழிபாடு நடத்தப்படும்.
சாம வேதத்தில் “ அஹமன்னம் ...அஹமன்னம் ...அஹமன்னமதோ “ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவாக இருப்பதாக ஐதீகம். அன்னம்தான் உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. உலக வாழ்க்கைக்கு அன்னமே பிரதானம், அச்சாணி. அன்னம் பிரம்ம, விஷ்ணு, சிவ சொரூபம். அன்னை பார்வதியும் அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் அன்னபூரணியாகக் காட்சி தருகிறார்.
அந்த இறைவன் அருவுருவாகக் காட்சி தரும் லிங்க மூர்த்திக்கு அன்னம் சாற்றி வழிபடும் நாளே ஐப்பசி பௌர்ணமி நாள், அன்னாபிஷேக நாள். ஐப்பசி பௌர்ணமி என்பது சந்திரனின் சாபம் முழுமையாக நீங்கிய நாள் மட்டுமன்று சிவபெருமானுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் முழுமையாக நீங்கிய நாளுமாகும். சிவபெருமான் பிச்சாடனராக வந்தபோது உலகிற்கே படியளக்கும் ஈசனுக்கு அன்னை அன்னபூரணி அன்னமிட்டுப் படியளந்த நாளும் இதுவாகும். இந்த ஐப்பசிப் பூரண நிலவன்று சிவபெருமானை அன்னாபிஷேகக் கோலத்தில் தரிசித்தால் சொர்க்கம் கிட்டும் எனச் சொல்லப்படுகிறது.
சிவபெருமானுடன் அன்னபூரணியையும் வணங்க வேண்டும். “ ஓம் அன்ன பூர்ணே- சதா பூர்ணே ஷங்கர பிராண வல்லபே - ஞான வைராக்கிய சித்யார்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி “ என்ற ஸ்லோகத்தை மனமுருகப் பிரார்த்தித்தால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்
இத்தகு அற்புத நாளை சிங்கப்பூர் ஆலயங்கள் விசேஷமாகக் கொண்டாடின. வரலாற்றுத் தொன்மைச் சிறப்பு மிக்க கேலாங் கிழக்கு சிவன் ஆலயத்தில் சிவபெருமான் ஸாகம்பரி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். அன்னாபிஷேக அலங்காரம் மெய் சிலிர்க்க வைத்தது. ஆலயம் நிரம்பி வழிந்த பக்தப் பெருமக்கள் ' ஓம் நமச்சிவாய.... பரமேஸ்வராய ... தென்னாடுடைய சிவனே போற்றி ... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ' என முழங்கியது விண்ணை எட்டியது. ஆலய நிர்வாகம் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement