/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூர் ஆலயத்தில் தீபாவளி கோலாகலம்
/
சிங்கப்பூர் ஆலயத்தில் தீபாவளி கோலாகலம்
அக் 21, 2025

சிங்கப்பூர் பிரபல வைணவத் தலமான சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் தீப ஒளித் திருநாள், ஈரேழு பதினான்கு புவனத்தையும் ரட்சித்து அருளும் ஸ்ரீமந் நாராயணனின் திருவருளால் கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீ ராமச் சந்திரமூர்த்தி பூலங்கி சேவையில் எழுந்தருளிக் காட்சியளித்தமை மெய்சிலிர்க்க வைத்தது. மேனி முழுவதும் பூக்களால் ஆன ஆடை எனும் குறிப்பு முத்தமிழ்க் காப்பியமாம் சிலப்பதிகாரத்திலும் பேசப்படுகிறது.
பூலோக ஸ்வர்க்கம் எனக் கருதப்படும் திருமலை திருப்பதியிலும் இச்சேவை பிரபலமானது. இதைப் பின்பற்றியே அனைத்து சேவைகளும் இவ்வாலயத்தில் பின்பற்றப்படுவதால் தீப ஒளித் திருநாளில் பூலங்கி சேவை மேற்கொள்ளப்பட்டது. திருமஞ்சனத்தின் போது ஸ்ரீ சூக்தம், புருஷ சூக்தம், நாராயண சூக்தம் ஆகிய மந்திரங்கள் ஜெபிக்கப்படுவது கண்கொள்ளாக் காட்சியாக மிளிரும்.
மண்டபம் நிறைந்து வழிந்த பக்தர்களிடை தலைமை அர்ச்சகர் வைகானஸ யஷோ பூஷணம் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார்யார் தீபாவளி மகிமையையும் பூலங்கி சேவையின் தாத்பர்யத்தையும் விளக்கினார். பெருந் திரளான பக்தர்கட்கு அருட் பிரசாதத்துடன் அறுசுவை அன்னப் பிரசாதமும் வழங்கி ஆலய நிர்வாகம் பாராட்டினைப் பெற்றது.
- சிங்கப்பூரிலிருந்து நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement