/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
மலாயாப் பல்கலைக்கழகத்தில் சிங்கப்பூர்ச் சிறுகதை
/
மலாயாப் பல்கலைக்கழகத்தில் சிங்கப்பூர்ச் சிறுகதை
டிச 16, 2024

மலேசியாவில் தாய்த் தமிழும் தமிழ்ச் சமுதாயமும் தொடர்ந்து செழிக்க மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை கடந்த 65-ஆண்டுகளாக பல அறப்பணிகளை மேற்கொண்டு வருகின்றது. அவ்வகையில் 38-ஆவது பேரவைச் சிறுகதை எழுதும் போட்டியினை மலேசியாவில் வாழும் எழுத்தாளர்கள் மற்றும் மாணவர்களுக்கும், அனைத்துலகப் பிரிவில் பிற நாட்டு எழுத்தாளர்களுக்கும் நடத்தியது.
தமிழின் பாரம்பரியம், கலாச்சாரத்தைத் தாங்கியுள்ள இவ்வாண்டிற்கான போட்டியில் வெற்றி பெற்ற சிறந்த கதைகள் 38-ஆவது பேரவைக் கதைகள் எனும் தலைப்பில் புத்தகமாக அச்சிட்டு நூல் வெளியீட்டு விழா மற்றும் வெற்றியாளர்களுக்குப் பரிசளிப்பு நிகழ்ச்சி டிசம்பர் 14 அன்று மலாயாப் பல்கலைக்கழகத்தின் அங்சனா அரங்கத்தில் நடைபெற்றது. அனைத்துலகப் பிரிவில் மூன்று சிறந்த சிறுகதைகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு சிறுகதைக்கும் தலா வெற்றி சான்றிதழ், கேடயம், ஆயிரம் மலேசிய வெள்ளிகள் பரிசளிக்கப்பட்டது.
அதில் சிங்கப்பூர் எழுத்தாளர் மில்லத் அகமது எழுதிய செம்பெருமீன் என்ற சிறுகதை சிறந்த கதையாக தெரிவு செய்யப்பட்டு ஆயிரம் வெள்ளி பரிசு பெற்றது. அவருக்கான பரிசு மற்றும் விருதை மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை ஆலோசகர் முனைவர் சிவபாலன் கோவிந்தசாமி வழங்கி பாராட்டினார். கதைகளை ஆய்வுசெய்து பேசிய மலாயாப் பல்கலைக்கழக மொழியில் துறையின் முதுநிலை விரிவுரையாளர் முனைவர் செல்வஜோதி இராமலிங்கம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உலக ஒற்றுமை போன்ற முக்கிய கருத்துக்களை வலியுறுத்தும் சிறுகதை செம்பெருமீன். அறிவியல் கற்பனையையும் உலக பிரச்சனைகளையும் சிறப்பாக இணைக்கிறது. அறிவியல் தகவல்களை எளிமையாக விளக்குவதும், விறுவிறுப்பான சம்பவ நகர்வும், நம்பகமான தொழில்நுட்ப விவரங்களும், தூயவன், நான்சி பாத்திரப் படைப்பும் கதையின் பலங்களாக அமைகின்றன. எனினும், எதிர்பாராத கதை முடிவு, அவசரமான காட்சி முடிப்புகள், துணைப் பாத்திரங்களின் குறைவான பங்களிப்பு, ஆகியவை கதையின் பலவீனங்களாக உள்ளன. இருப்பினும், பூமியின் எதிர்காலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் புதிய சிந்தனை அறிவியல் கற்பனைக் கதையாக இது அமைந்துள்ளது என்று பாராட்டிப் பேசினார்.
எழுத்தாளர் மில்லத் அகமது, தான் எழுதிய, தொகுத்து நூல்களை பல்கலைக்கழகத் தமிழ் நூலகத்திற்கு வழங்கினார். அதனை தமிழ்ப் பேரவையின் துணைத் தலைவர் லோகனபிரியா சிவகுமார் பெற்றுக்கொண்டார்.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement