/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூரில் தைப் பூசப் பெரு விழா கோலாகலம்
/
சிங்கப்பூரில் தைப் பூசப் பெரு விழா கோலாகலம்
பிப் 12, 2025

“ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா....வீர வேல் முருகனுக்கு அரோகரா “ எனும் முழக்கம் விண்ணதிர ஆயிரக் கணக்கானோர் பால் காவடி - பன்னீர்க் காவடி, புஷ்பக் காவடி, அலகுக் காவடி, ரதக் காவடி எடுத்து பக்தி மயமாக ஆடி வர அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயம் அமைந்துள்ள குளக்கரைச் சாலையே குலுங்கியது.
தைப் பூசத்திற்கு முதல் நாளான புனர் பூச நாளன்றுதான் அண்ணன் விநாயகப் பெருமானும் இளவல் முருகனும் ஆண்டுக்கு ஒருமுறை இணைந்திருப்பர். சகோதரரைச் சந்திப்பதற்காக வெள்ளி ரதத்தில் குளக்கரைச் சாலையிலிருந்து லைன் சித்தி விநாயகர் ஆலயத்திற்குச் சென்றடைந்தார். செல்லுமுன் சவுத் பிரிட்ஜ் சாலையியிலுள்ள அன்னை மகா மாரியம்மனிடம் ஆசி பெற்றுச் சென்றார். 10 ஆம் தேதி முழுவதும் லைன் சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேஷ அபிஷேகங்கள், ஆராதனைகள், அறுசுவை அன்னதானம் நடைபெற்ற வண்ணமிருந்தன. இரவு மீண்டும் தமது இருப்பிடமான தெண்டாயுதபாணி ஆலயத்திற்குத் திரும்பி வந்து அருள்பாலித்தார்.
10 தேதி இரவு 11.30 மணிக்கு சிராங்கூன் சாலையியிலுள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து தலைமை அர்ச்சகர் வாசுதேவ பட்டாச்சார்யார் பால் குடம் வழங்க தண்டாயுதபாணி ஆலயத் தலைமைப் பண்டாரம் சிரமேற்றாங்கி நான்கரை கிலோ மீட்டர் தொலைவு பக்தர்கள் புடை சூழ பாத யாத்திரையாக வந்து தண்டாயுதபாணி ஆலயம் வந்து வேலுக்குப் பாலபிஷேகம் செய்தார். நகரத்தார் புலம் பெயர்ந்து வந்தபோது வேலை மட்டுமே தங்களோடு எடுத்து வந்தனர். தண்டாயுதபாணி ஆலயத்தில் வேலுக்கே அபிஷேகம் நடைபெறும்.
இவ்வாண்டு 15,477 பால்குடம், 307 பால் காவடி, 14 தொட்டில் காவடி, 302 அலகுக் காவடிகளை பக்தப் பெருமக்கள் எடுத்து வந்து சமர்ப்பித்தமை கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.
மதியம் மகேஸ்வர பூஜை நடைபெற்றுப் பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. வழக்கமாக வருகை புரிந்து வழிபடும் சட்டம், உள்துறை அமைச்சர் கா.சண்முகம் அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்திலும் பின்னர் தண்டாயுதபாணி ஆலயத்திலும் வழிபாடு நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் உரையாடும்போது இன்னும் சற்று அதிக வசதிகள் செய்து தரவேண்டுமென்ற தமது விருப்பத்தைத் தெரிவித்ததோடு ஆலய நிர்வாகத்தினரோடும் கலந்துரையாடினார்.
வழிநெடுக பல்வேறு அமைப்புக்களும் நிறுவனங்களும் பக்தர்களுக்குச் சிற்றுண்டி மற்றும் நீராகங்கள் வழங்கினர். ஆங்காங்கே காவடியாளர்களை உற்சாகப்படுத்த மேள தாளங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. போக்கு வரத்துக்கு எவ்வித இடையூறுமின்றி காவடி ஊர்வலங்கள் நடைபெற்றமை சிங்கப்பூருக்கே உள்ள தனிப் பெருமை.
மாலையில் தெண்டாயுதபாணி ஆலயத்தில் சர்வ அலங்காரநாயகராக முருகப் பெருமான் ஆலய ஓதுவார்மூர்த்தி வைத்தியநாத தேசிகர் திருமுறை ஓத தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இப்பகுதியே விழாக் கோலம் பூண்டிருந்தது.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement