/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
“மனித நேயத் திருவிழா-ஹூஸ்டன் பொங்கல் திருவிழா
/
“மனித நேயத் திருவிழா-ஹூஸ்டன் பொங்கல் திருவிழா
பிப் 19, 2025

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற நம்பிக்கைக்கு ஏற்ப கொண்டாடப்படும் திருவிழா பொங்கல் திருவிழா. தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு, தன் சம்பாத்தியம் என சுயநலமாய் இல்லாமல் தன் சக மனிதர்களை சந்தித்துப் பேசி வாழ்த்துக்கூறும் “மனித நேயத் திருவிழாவாக” ஹுஸ்டன் பாரதி கலை மன்றம் பொங்கல் விழாவைக் கொண்டாடியது.
இயற்கை, உழைப்பு, நன்றியுணர்வு ஆகியவற்றைப் போற்றும் பெருவிழாவாக பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.
“தையொரு திங்களும், தரை விளக்கித் தண்ணீர் தெளித்து, கோலமிட்டு, தெருவணிந்து, அழகினுக்கு அலங்கரித்து” என ஆண்டாள் நாச்சியார் பாடியது போல கோல விளக்கும், கொடியும், விதானமும், மாவிலையும், தோரணமும் மங்கல விளக்குகளும், மாக்கோலமிட்ட குடிசையும், புத்தரிசியும், புதுப்பானையுமாய் அரங்க வாயிலை 'டெக்கோர் ஒன்' குழு அலங்கரித்திருந்தனர்.
வருகை தந்தோர் சுற்றத்துடனும், நட்புடனும், உற்றார், உறவினருடன் அருகில் அமைந்திருந்த போட்டோ பூத்தில் புகைப்படங்கள் எடுத்து அகமகிழ்ந்தனர். அரங்கத்தில் பத்திற்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் அமைந்திருந்தன. நுழைவு வாயிலிலேயே, ஆனைமுகன், ஐங்கரன், தங்க விநாயகர் அருளாசி வழங்க, இருபுறமும் கொம்பினில் பூச்சூடி, கழுத்தினில் மணியசைய மாடுகள் வரவேற்பு கூறின.
அருள்மிகு மீனாட்சி கோவில் மண்டபத்தில் குறிப்பிட்ட நல்லநேரத்தில் 2025 ஆம் ஆண்டு செயற்குழு உறுப்பினர்கள் குத்துவிளக்கேற்ற, தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது. 850க்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் அரங்கம் நிறைந்திருந்தது. ஆதரவளித்த MTS நிர்வாகிகளுக்கு அகம் கனிந்த நன்றி.
கலை நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் தனித்துவத்துடன் கண்ணையும், கருத்தையும் கவரும் வண்ணம் அமைந்திருந்தது. பியர்லாண்டின் மேயர் கெவின் கோல் சிறப்பு விருந்தினராக வருகை தந்து மன்றத்தின் சேவைகளைப் பாராட்டிப் பேசி பெருமைப்படுத்தினார். பாரதிகலை மன்றத்தின் முன்னாள் தலைவர், தமிழ்பள்ளிகளின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர்கள், குறிப்பாக மாலா கோபால், மலர் நாராயணன்ஆகியோரைய விழாவில் கௌரவித்தனர்.
2025 ஆம் ஆண்டின்செயற்குழு உறுப்பினர்கள் அனைவரையும் மேடையில் அறிமுகப்படுத்தியது வெகு சிறப்பு. செயற்குழு உறுப்பினர்கள் ( 2025): சிவசுப்ரமணியம் கோபாலகிருஷ்ணன், ரவிசங்கர் பெரியசாமி, நந்து ராதாகிருஷ்ணன், கௌசல்யாதேவி நம்பி, அனிதா குமரன், யாமினி விஜயகுமார், சுவர்ணலதா மகேஷ், சவிதா வித்யாபிரகாஷ், இளங்குழலி மணி, ராஜா அனந்தராமன், ஜீவன் பிரசாத் சேகர்.
பாரதி கலை மன்ற அரும்புகளின் அழகு நடனத்தோடு கலைநிகழ்ச்சிகள் தொடங்கின. அம்மாவைப் பார்த்தபடியே, அபிநயத்து ஆடியது கண்கொள்ளாக்காட்சி ! ஆடை கட்டிவந்த நிலவோஅன்றி மேடையிட்டு ஆடும் எழிலோ?” என வண்ணப் பட்டாடையுடன் ஆடிய பாவையரின் பரத நாட்டியம் வெகு நேர்த்தி! பாரதியாரின்“ தீராத விளையாட்டுப் பிள்ளை” கண்ணனை, நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்திய கோபியர் நடனம் மிக அருமை! சூப்பர் ஸ்டார் ரஜினிக்கான நடனத்தில் ஹெலி காப்டரை நேரில் மேடையில் காட்சிப்படுத்திய விதமும், நேரடியாகப் பறை இசைத்து ஆடிய பறையாட்டமும்,சிலம்பாட்டமும், பொங்கல் நடனமும், குழு நடனமும், கோலாட்டமும் திரையிசைப் பாடலுக்கான நடனங்களும் பலத்த கைதட்டலைப் பெற்றன.
பொங்கல் திருவிழா மேடையில் பாரதி கலை மன்ற தலைவர் அனிதா குமரன் 2025ஆம் ஆண்டு உயர்கல்வி மாணவர்களுக்கான உதவித்தொகை பற்றி அறிவித்தார். புதிய தமிழ் பள்ளிக்கான கோரிக்கையும் இந்த பொன்னான தருணத்தில் முன்வைக்கப்பட்டது.
தன்னார்வ தமிழாசிரியர்களுக்கு, பாரதி கலைமன்றம் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கட்டணத்தில் சலுகை என அறிவிக்கப்பட்டது. இவற்றை பார்வையாளர்கள்ஆரவாரத்தோடு கைதட்டி வரவேற்றனர்.
பாரம்பரியமிக்க 'குமார் உணவகத்தார்' வழங்கிய சிற்றுண்டியும், இரவு விருந்தும் பிரமாதம்! குறிப்பாக தித்திக்கும்பொங்கல் சுவையோ சுவை. எவ்வித வரிசையும், காத்திருப்புமின்றி அனைவருக்கும் வெகு துரிதமாக அறுசுவை உணவுகளை விநியோகித்தது கூடுதல் சிறப்பு !
பங்கேற்ற சிறுவர் சிறுமியருக்கு சிறு பரிசுப்பைகள் வழங்கியது அருமை!
தடம் மாறாமல், தடுமாறாமல், திட்டமிட்டபடி குறையேதுமின்றி, குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி, நிகழ்ச்சிகளை கோலாகலமாக. குறிப்பிட்ட நேரத்திலேயே நிறைவு செய்த பாரதி கலைமன்றத்தினரை அனைவரும் மனதார பாராட்டி மகிழ்ந்தனர் ” தகவல்: சுவர்ணலதா மகேஷ், இலக்கிய இயக்குனர், பாரதி கலைமன்றம்
- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்
Advertisement