/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
"சபாநாயகர் சாம்பு" ( நாடக விமர்சனம்)
/
"சபாநாயகர் சாம்பு" ( நாடக விமர்சனம்)

கடின உழைப்பு மிகுந்த வாரநாட்கள் மற்றும் பணிகள் நிறைந்த வார இறுதிக்குப் பிறகு, நமக்குத் தேவையானது நம்மைப் புத்துணர்ச்சியடையச் செய்ய ஒரு நல்ல நகைச்சுவை நிகழ்வு. தமிழ் ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் 2.0 (TSC 2.0)-ன் நிறுவனத் தயாரிப்பாளரான எனது தோழி லக்மி பவா இயக்கிய “சபாநாயகர் சாம்பு” என்ற அற்புதமான நகைச்சுவை மிக்க மேடை நாடகத்தைப் பார்ப்பதை விட சிறந்த வழி இருக்க முடியுமா என்ன?
தமிழ் ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் எனத்துவங்கப்பட்ட அமைப்பு, ஹூஸ்டனின் புகழ்பெற்ற நாடக ஆசிரியரும், நடிகரும், கவின்கலைத் துறையின் வல்லுநருமான மறைந்த அனந்தா ஐயரால் 1977 ஆம் ஆண்டில் நாடகம் மற்றும் கலைகள் மூலம் தமிழ்க் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்டது. மேடை நாடகத்துடனான அவரது தொடர்பு என்பது, அவரது மாணவப் பருவத்தில் ஐக்கிய அமெச்சூர் கலைஞர்கள் குழுவின் ஒய்.ஜி பார்த்தசாரதிபோன்ற தமிழ் நாடக ஜாம்பவான்களுடன் நடித்தபோது. சென்னையில் தொடங்கியது.
கடந்த 47 ஆண்டுகளில், இந்த அமைப்பு, பல சிந்தனைகளைத் தூண்டும் சமூக நாடகங்களை வெற்றிகரமாக அரங்கேற்றியுள்ளது, அவற்றில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தீபாவளி பண்டிகை குறித்த இரண்டு நாடகங்கள் அமைப்பின் வரலாற்றில்பெரிதும் குறிப்பிடத்தக்கவை. அந்நாடகங்களை எழுதி இயக்கிவர் பலரால் அன்புடன் அழைக்கப்படும் அனந்தா மாமா. அவர், பிரபலமான தொலைக்காட்சித் தொடரான முதுபெரும் எழுத்தாளர் சாவியின் கதையில் உருவான“வாஷிங்டனில் திருமணம்” எனும்தொடர் ஒன்றையும் தயாரித்திருந்தார், இது முதன்மையாக ஹூஸ்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள பிற நகரங்களில் படமாக்கப்பட்டு சென்னையில் உள்ள தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டது. இத்தொடர் சிறந்த விமர்சனங்களைப் பெற்றதுடன்1996-ல் சிறந்த தொலைக்காட்சித் தொடருக்கான விருதையும் வென்றிருந்தது.
2023 ஜனவரியில் அனந்தா இயற்கை எய்துவதற்கு முன்பு, அவர் ”சபாநாயகர் சாம்பு” எனும் தலைப்பில் சாம்பு மற்றும் அவரது குடும்பத்தைப் பற்றிய ஒரு கதையை எழுதிக் கொண்டிருந்தார், அதுவேஅவரது கடைசி நாடக் கதையாக அமைந்திருந்தது. அவரது மறைவுக்குப் பின்னர் அதனை மேடை அரங்கேற்றம் செய்ய முழுமுயற்சி எடுத்த அவரது மகள் லக்மிக்கும், திரைக்கதையை நிறைவு செய்து, கதைக்கு உயிர் கொடுக்கும் மகத்தான பணியை மேற்கொண்ட அனந்தா மாமாவின் நெருங்கிய நண்பர்களான கரு.மாணிக்கவாசகம் மற்றும் நட்ராஜ் கிருஷ்ணன் ஆகியோருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.
முழுப்படைப்பின் குறிப்பிடத்தக்க அம்சம் எதுவெனில், அனந்தா மாமாவின் இணையர் பத்மா ஐயர், சாம்புவின் மனைவி அலமுவாக மிக அழகாக நடித்து, மறைந்த தனது கணவருக்குப் பொருத்தமான அஞ்சலியைச் செலுத்தி நாடகத்திற்கு விறுவிறுப்பைச் சேர்த்திருந்ததே.
நாடகத்தின் கருவாக தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகரான சாம்பு (ஸ்ரீதர் சீனிவாசன்) பற்றி கதை நகர்கிறது.அவர் தனது அரசியல் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் சமூகத்தால் மிகவும் மதிக்கப்படுகிறார். சாம்புவின் மனைவி அலமு (பத்மா ஐயர்), வீட்டின் அதிகாரம் படைத்த நபராக, சமூகத்தில் நன்கு அறியப்பட்ட பொதுப்பணி மிகுந்த பெண்மணியாக உள்ளூர் மாதர் சங்கத்தின் தலைவியாக இருப்பவர். இத்தம்பதிக்கு கங்கா (மாலா கோபால்) மற்றும் காவேரி (ஹேமா நரேன்) என்ற இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் கங்கா, அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இளம் தொழிலதிபர். இளைய மகள் காவேரிக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகளுடன் அதே ஊரில் வசித்து வருகிறார். மேலும் சாம்புவின் வயதான ஆனால் மிடுக்கான தாய், விஜி அம்மாள் (விஜயலட்சுமி சிவகுமார்)குடும்பத்துடன் வசிக்கிறார்.
கங்கா, சாம்புவால் நிறுவப்பட்ட அலமு கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மற்றும் அலமு ரியாலிட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். கட்டுமானத் (ரியல் எஸ்டேட்) தொழிலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதில் உறுதியாக உள்ள கங்கா திருமணத்தில் ஆர்வம் காட்டாதது பெற்றோரை கவலையடையச் செய்கிறது. இந்தியாவில் ஓய்வு பெற்ற பலரைப் போலவே, சாம்பு தனது மனைவியுடன் காசிக்கு யாத்திரை செல்ல விரும்புகிறார், ஆனால் கங்காவுக்கு திருமணம் முடிக்கும் வரை அலமு அவருடன் யாத்திரை செல்லத் தயங்குகிறார். பல முயற்சிகள் எடுத்தபோதிலும், சாம்பு அவர்தம் புனித யாத்திரைக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் பின்னடைவை எதிர்கொள்கிறார், அதேநேரத்தில் கங்காவும்தமது வணிகத்தில் நிறைய சவால்களை எதிர்கொள்வதுடன் அதில் முன்னோக்கிச் செலுத்துவதற்கான சிந்திக்கும் யோசனைகளில் பெரிதும் தடுமாடுகிறார்.
சாம்புவும் அலமுவும் புனித யாத்திரை செல்வார்களா, கங்கா தன் தொழிலில் எதிர்கொள்ளும் தடைகளையும் சதிகளையும் சமாளிக்க முடியுமா? அவளுக்குப் பொருத்தமான ஒருவரைக் கண்டுபிடிப்பதில் அவளுடைய பெற்றோர் வெற்றி பெறுவார்களா? என கதையில் பற்பல திருப்பங்களும் எதிர்பார்ப்புகளும் இருந்தன. இறுதியில், சாம்புவும் அலமுவும் காசிக்கு தங்கள் யாத்திரையை வெற்றிகரமாக முடிப்பதுடன், கங்கா தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றி, அவரும் அவரது குடும்பத்தினரும் இந்தியாவில் வாழ்ந்த காலத்தில் அவர்களது பக்கத்து வீட்டுக்காரராக இருந்தஹூஸ்டன், டெக்சஸில் வசிக்கும்பரத் (டாக்டர் டி.கோபால்) என்றஇளைஞரிடம் தனக்கு ஏற்ற இணையைக் கண்டறிவதாக மிகவும் மகிழ்ச்சியான முடிவாக அமைந்திருந்தது.
பெரும்பாலும் தமிழ்நாட்டின் ஒரு சாதாரண வீட்டின் பின்னணியில் அமைக்கப்பட்ட கதைக்களம், சபாநாயகரின் வீட்டிலும், நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் அலுவலகத்திலும் நடக்கும் அன்றாட நடவடிக்கைகளை மையமாகக் கொண்டது. நகைச்சுவை மிகுந்த உரையாடல்களுடன் கூடிய கதைக் கட்டுமானம், ஒரு காட்சியிலிருந்து இன்னொரு காட்சிக்கு தடையின்றி நகர்கிறது மற்றும் கலாச்சார மாற்றங்கள் மற்றும் பாலின சமத்துவம், பெண்கள் உரிமைகள் மற்றும் அரசியலின் அவலங்கள் போன்ற சமூகப் பிரச்சினைகளை உள்ளடக்கியது.
இந்நாடகத்தின்நடிகர்களாக, சாம்பு குடும்ப சமையல்காரி சாவித்திரியும் (மீரா ஸ்ரீகாந்த்) ஒரு குடும்ப உறுப்பினர், அனிதா மாமி (அனிதா குமரன்)பக்கத்து வீட்டுக்காரத் தொந்தரவாளர்; ஒரு குடும்ப நண்பர் மற்றும் ஆலோசகர் TikTok நடராஜன் (நட்ராஜ் கிருஷ்ணன்); நிதி திரட்டும் நடவடிக்கைகளுக்கு உதவும் மற்றொரு குடும்ப நண்பரின் மகனானடி.ஆர்.டிராவல்ஸ் உரிமையாளர் ராமநாதன் (கரு மாணிக்கவாசகம்),சாம்பு-கங்காவின் வணிகத் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுவதற்காக அவர்களை லஞ்சத்தில் ஈடுபடுத்த முயலும்சகலமும் அறிந்த தொழிலதிபரும்கேஆர் பில்டர்ஸின் உரிமையாளருமானகனகராஜ் (டி.ஜி. சிவசுப்ரமணியம்); சாம்புவின் யாத்திரைக்கான முன்பணத் தொகையை மோசடி செய்ய முயற்சிக்கும்பல்வீர் சிங் (வெங்கடா சுப்ரமணியன்); அலமுவைச் சந்திக்க நேர்கையில் கங்காவின் எதிர்காலத்தைக் கணிக்கும் துறவிஆனந்தா ஸ்வாமிகள் (டாக்டர் வடுகநாதன்); மேலும் அலுவலக உதவியாளர் (கே.எஸ்.ஆர். சித்தார்த்); மேலாளர் மித்ரன் (மகேஷ் ஐயர்); திட்ட மேலாளர் ராம்குமார் (விவேக் சாந்தாராம்); வருங்கால வீடு வாங்கும் வாடிக்கையாளர் கேசவன் (நரேன் கோகுல்); விஜிலென்ஸ் அதிகாரி (பிரசன்னா சந்தானகிருஷ்ணன்) மற்றும் போலீஸ் கான்ஸ்டபிள் (பி.டி. சதீஷ்குமார்) என அனைவரும் மேடையில் சிறப்பாகப் பரிமளிக்கின்றனர்.
அனந்தா எப்போதும் தனது கடந்தகால தயாரிப்புகளில் செய்ததைப் போலவே, இந்நாடகத்திலும் நாடகக்கதாசிரியர்கள் கலையின் மற்ற அம்சங்களை புத்திசாலித்தனமாக அறிமுகப்படுத்துகிறார்கள். நிகழ்ச்சிகளில் இரண்டு இளம் கலைஞர்கள் ரியா பவா மற்றும் ஸ்ரீவித்வதா ஆகியோரின் பரதநாட்டிய நடனமும் அடங்கும், அந்நடனத்தின் ஆசிரியை வேறு யாருமல்ல மூத்த நடிகை திவ்யா உன்னி மற்றும் ஸ்ரீபாதம் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் &கலாச்சார கல்வியின் நிறுவனர்.மேலும் ஒரு மென்பொருள் நிபுணர் பாஸ்கியின் ஸ்டாண்டப் காமெடி மற்றும் ஒரு பேச்சாளர் பார்த்திபனின் தமிழ்ச் சொற்பொழிவு.
கதை முன்னேறும்போது உண்மையும் புனைக்கதையும் இணைகையில் நிகழ்வுகள்சற்றே மெதுவாக நகர நேர்ந்தாலும் ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்ற வகையில் தொடர்புடையதாகவும் மற்றும் இதயப்பூர்வமான, நகைச்சுவைமிகுந்த மற்றும் சிந்தனையைத் தூண்டும் உரையாடல்களின் சரியான கலவையைக் கொண்டுள்ளது. நடிகர்கள், அவர்களின் கண்கவர்ந்த மற்றும் நேர்த்தியான ஆடைகளுடன் தங்களது பாத்திரங்களில் சிறப்பாகப் பங்களித்து முழு நேரமும் நம்மை மகிழ்விக்கிறார்கள். மேடை அமைப்புகள் பார்வையாளர்களை இந்தியாவிற்கும் அவர்களது வீடுகளுக்கும் கொண்டு செல்கின்றன என்றால் அது மிகையல்ல.
உதவி இயக்குநர் ஸ்ரீவித்யா ஸ்ரீதரின் உதவியுடன், தனது மறைந்த தந்தையின் பாதங்கள் தொட்டுநாடகத்தின் இயக்குநராக அறிமுகமானதால், அனந்தா மாமா, மிகவும் திறமையான தனது மகள் லக்மியின் மீது பெருமிதம் கொண்டிருப்பார் என்றே நான் நம்புகிறேன்.
இதுபோன்ற எந்தவொரு தயாரிப்பையும் போலவே, திரைக்குப் பின்னால் இருந்த குழுவினர், மேடை அமைப்புகள், காட்சிப் பொருட்கள், விளக்குகள், ஆடைகள் மற்றும் விளம்பரம் ஆகியவற்றில் பொறுப்பாளர்களின் கடினமான உழைப்புகள் தெளிவாக வெளிப்பட்டன,தமிழ் ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் நிர்வாகி பத்மினி ரங்கநாதன்; தொழில்நுட்ப வல்லுநர்கள்பார்த்தா மற்றும் ஜோ; நாடக முழுமைக்குமானஒருங்கிணைப்பு மற்றும் விளம்பர வெளியீடுகளுக்குப் பொறுப்பான ஸ்ரீகாந்த் வேணுகோபாலன்; நிழற்படங்கள் மற்றும் காணொளிப் பொறுப்பாளர் முரளி சந்தானம்; நாடகமேடை மேலாளர்நந்து ராதாகிருஷ்ணன்; ஒப்பனை அறை உதவி ராதா ஸ்டன், மற்றும் சுமதி ஸ்ரீனி, யாமினி விஜயகுமார் மற்றும் அனிதா சந்திரசேகர் ஆகியோர் நாடகத்தை திறம்பட அரங்கேற்றுவதில் முக்கிய பங்கு வகித்தனர்.
நிகழ்ச்சித் தொடக்கப் பாடல் பாடியமஹா கிருஷ்ணன், மேடை நகைச்சுவை நிகழ்த்திய பாஸ்கி,, தமிழ்ச் சொற்பொழிவாற்றிய பேச்சாளர் பார்த்திபன், இடையிசை இசையை வழங்கியஜனா மற்றும் கணேஷ் ராஜாமணி, இரவு உணவு வழங்கிய இந்தியன் சம்மர் உணவகத்தின் இராஜன் இராதாகிருஷ்ணன் அனைவருக்கும் TSC 2.0 நன்றி தெரிவிக்கிறது;
சமூகம் மற்றும் இந்தியக் கலைகளுக்கு ஆற்றிய சேவை மற்றும் பங்களிப்பிற்காக தமிழ் மேடைப் படைப்புகள் மூலம் அனந்தா இரண்டு சிறப்பு சமூகப் பேராளர்களுக்கு மரியாதை செய்து கௌரவிப்பது வழக்கம். அதே வழக்கப்படி TSC 2.0வும் அதனைப் பின்பற்றி இரண்டு கலைஞர்களை கௌரவித்தது. இந்த ஆண்டு கௌரவிக்கப்பட்டவர்களில் ஒருவரான இராஜன் இராதாகிருஷ்ணன், பன்முகத் திறன் கொண்ட தொழிலதிபராக, உணவகக் கலையின் தீவிரப் புரவலராக,வள்ளலாக, ஹூஸ்டன் சமூகத்தில் நன்கு அறியப்பட்ட நபராக விளங்குபவர். மற்றொரு கௌரவர் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடனக் கலைஞர், நடன இயக்குனரான இந்திய சினிமாத் துறையின் மூத்த நடிகை மற்றும் ஹூஸ்டன் ஸ்ரீபாதம் கலை மற்றும் கலாச்சாரக் கல்வியின் நிறுவனர் திவ்யா உன்னி ஆவார்.
TSC 2.0தமது எதிர்காலப் படைப்புகளில் பெரியவர் அமரர் அனந்தா அய்யரின் பாரம்பரியத்தை செயல்படுத்த வாழ்த்துகள்.
- தினமலர் வாசகி அனிதா சாமுவேல்
Advertisement