sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

அமெரிக்கா

/

செய்திகள்

/

அரிசோனா முருகனுக்கு அரோகரா

/

அரிசோனா முருகனுக்கு அரோகரா

அரிசோனா முருகனுக்கு அரோகரா

அரிசோனா முருகனுக்கு அரோகரா


பிப் 04, 2026

Google News

பிப் 04, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

“அரிசோனா முருகனுக்கு அரோகரா! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வீரவேல் முருகனுக்கு அரோகரா!” என்று அடியவர் எழுப்பிய முழக்கம் விண்ணைப் பிளந்தது. வழக்கமாகக் குளிர் நடுக்கும் அந்தத் தைப்பூசத் திருநாளில், காவடி சுமந்து வருவோர்; அவர்பின் பால்குடம் ஏந்திவரும்பக்தர்கள்; இவர்களைக் காணவந்த கதிரவன் தன் ஒளிக்கரங்களால் இதமான வெப்பத்துடன் அவர்களைத் தழுவிக் குளிரைப் போக்கினான்.


ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருநாள் விமரிசையாக அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் கொண்டாடப்படும். இந்த ஆண்டும் அப்படித் திருநாளைக் கொண்டாடுவதற்காக, பல செயற்குழு ஆர்வலர்கள், அர்ச்சகர்களைக் கூட்டி நிகழ்ச்சிநிரலையும், பொறுப்புகளையும், திருநாள் ஒருங்கிணைப்பாளர் கரு தேனப்பன் பகிர்ந்தளித்தார்


முருகனையும், மற்ற கடவுளர்களையும் அலங்கரிக்கத் தமிழ்நாட்டிலிருந்து பலவண்ண மாலைகள் தருவிக்கப்பட்டன. ஐயன் சன்னதிக்கு மெருகூட்ட மலர்கள் பொருத்தப்பட்ட, வண்ணம் தீட்டிய பலகைகள் ஆர்வலர்களால் தயாரிக்கப்பட்டுக் கோவிலுக்குக் கொணரப்பட்டன.


காலையில் ஆனைமுகன் அனுமதியுடன், மேடையில் அலங்கரிக்கப்பட்ட முருகன், வள்ளி, தெய்வானை உற்சவர்கள் முன்பு அடுக்கப்பட்டிருந்த காவடிகள், குடங்களுக்குப்ஆலய அர்ச்சகர்கள் ஜெயந்தீஸ்வரன் பட்டர், முரளிகிருஷ்ண கந்தூரி, ஆனந்த் சர்மா, வரப்பிரகாஷ் கொசூரி ஆகியோர் பூசைசெய்துதிருநாளைத் தொடங்கி வைத்தனர்.


ஐம்பது காவடிகளுக்குப் பதிவுசெய்த அடியவர்கள், அர்ச்சகரால் காப்புக் கட்டிக்கொண்டு காவடிக்கு முன் அமர்ந்து, திருநீறு, சந்தனம், குங்குமம் அணிந்து. காவடிக்கான இரண்டு கலசங்களில் முறையே, 'முருகா, முருகா,' என ஓதி, திருநீறையும், பஞ்சாமிர்தத்தையும் இட்டு, மங்களமான மஞ்சள் துணியில் கலசத்தின் வாயைக் கட்டிக் காவடியில் பிணைத்தனர். இதற்கு சமய ஆர்வலர் உடனிருந்து உதவினர். சிறுவருக்குச்சிறுகாவடிகள்வழங்கப்பட்டன. இச்சமயம், முருகன் மேல் துதிப்பாடல்களை அமிர்தா சேகர், பாலாஜியின் வயலின், வருண் சங்கரின் மிருதங்கத்துடன் இனிமையாகப் பாடினார்.


முருகனின் திருநாமங்களை ஓதிக்கொண்டு காவடியைச் சுமந்து அடியவர்கள் கோவிலை ஆறுமுறை வலம் வந்தனர்.


இதற்கிடையில் நூற்று ஐம்பத்தெட்டு அடியவர்களும் காவடி அன்பர்களைப் போலக் காப்புக் கட்டிக்கொண்டு, முருகன் நாமத்தினை ஓதி, கலசங்களில் பால் நிரப்பி, தேங்காயை வைத்து, மஞ்சள் துணி கட்டி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.


ஊர்வலம் யாகசாலைக் கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த அறுபடை வீடு ஆறுமுகனின் திருவுருவப்படங்களை வணங்கி, ஆரவாரத்துடன் கோவிலுக்குள் நுழைந்தது.


இருபதுக்கும் மேற்பட்ட சமய, அன்னதான ஆரவலர்கள், அடியவர் கொணர்ந்த காவடிகளை வாங்கித் திருநீறையும், பஞ்சாமிர்தத்தையும் தனிப் பாத்திரங்களில் அபிஷேகத்திற்காக நிரப்பினர். பால் கலசங்கள், முருகன் மூலவர் சன்னதி முன்பு அமைக்கப்பட்ட நீள்மேடையில் தேங்காய் நீக்கப்பட்டு வைக்கப்பட்டன.


முருகன், வள்ளி, தெய்வானை மூலத் திருமேனிகளுக்கு அரிசிமாவு, மஞ்சள், காவடிப் பஞ்சாமிருதம், பால், தயிர், பழச்சாறு, காவடித் திருநீறு, பன்னீர், சந்தனப் புனித நீராட்டல் நடைபெற்றது. வேதியரும், சமய ஆர்வலரும், மந்திரம் ஓதினர். ஐயனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிருதமும், திருநீறும் பாத்திரங்களில் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டன.


அலங்காரம் நடக்கும் சமயம், அடியவர் கந்த சஷ்டிக் கவசம் ஓதினர். ஸ்ரீபாஸ்கர், சங்கர் மணிகண்டன் முருகனை ஏத்திப் பாடிய பஜனையில் அடியவர் அனைவரும் கலந்துகொண்டனர்.. இத் திருநாள் நன்கு நடந்தேற அயராது உழைத்த அன்னதான, சமய, செயற்குழு, நிதிக் குழு ஆர்வலர்களுக்கு நன்றி நவிலப்பட்டது. காசி அருணாசலம், திவ்யா, சுப்பு, பாஸ்கர் மண்ணுசாமி, மகாதேவன், ஸ்ரீநிவாஸ் அய்யாலசோமயாஜுல, ஆகியோருக்கு ரமேஷ் நடராஜனும், கரு தேனப்பனும்சால்வை போர்த்திப் பாராட்டினர்.


முருகனுக்குத் தேவியருடன் அலங்கார தீபம், அருச்சனை, தீப ஆராதனைக்குப் பிறகு, நான்மறைகள், தேவாரம், திருப்புகழ் ஓதப்பட்டன.


இத்திருநாளுக்கு வந்த ஆயிரத்து ஐநூறுக்கும் மேலான அன்பர்களுக்கு அன்னலட்சுமி அரங்கத்தில் பஞ்சாமிருதத்துடன் அமுது வழங்கப்பட்டது. திருநீறு, பழங்கள் பிரசாதமாகக் கொடுக்கப்பட்டன.


அசுரர் குலம் கெடுத்து நல்லறத்தை ஓங்கச் செய்த ஐயன் அறுமுகக் குமரன் அனைவருக்கும் அருளளித்து உலகெங்கும் தர்மம் தழைக்கச் செய்வானாக!


- அரிசோனாவிலிருந்து நமது செய்தியாளர் ஒரு அரிசோனன்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us