/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
கனடாவில் லண்டன் ஒன்டாரியோ தமிழ்ச் சங்க தைப்பொங்கல் விழா
/
கனடாவில் லண்டன் ஒன்டாரியோ தமிழ்ச் சங்க தைப்பொங்கல் விழா
கனடாவில் லண்டன் ஒன்டாரியோ தமிழ்ச் சங்க தைப்பொங்கல் விழா
கனடாவில் லண்டன் ஒன்டாரியோ தமிழ்ச் சங்க தைப்பொங்கல் விழா
மார் 11, 2026

'தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவ வகை செய்தல் வேண்டும்'
அன்று மீசைக்கார புலவன் கண்ட கனவு- அதை வெகு நிறைவாய் தமிழர் பண்டிகையும் தைப்பொங்கலை சிறப்பாய் கொண்டாடி மகிழ்ந்தனர் கனடாவில் உள்ள லண்டன் நகரத்து தமிழர்கள்!
'எங்கு சென்றாலும் தமிழன் தமிழனே' என்பது, தமிழர்கள் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தங்களின் தாய்மொழி, கலாச்சாரம், பண்பாடு மற்றும் அடையாளத்தை எக்காலத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பதைக் குறிக்கிறது. பாரதிதாசன் கூறியது போல, தமிழ் பற்றுடன் இருப்பவன் எங்கு பிறந்தாலும் தமிழனே ஆவான்
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் லண்டன் நகரில், தமிழ்ச் சங்கம் (LOTS of Canada) ஏற்பாடு செய்த தைப்பொங்கல் விழா, டார்செஸ்டர் கம்யூனிட்டி ஹாலில் விமரிசையாக நடைபெற்றது. லண்டன் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏறக்குறைய 500 தமிழர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். முழு நாள் கொண்டாட்டமாக அமைந்த இந்நிகழ்ச்சி காலை 11:00 மணிக்கு வரவேற்பு நிகழ்வுகளுடன் தொடங்கியது.
அதிகமான மக்கள் வருகையை முன்னிட்டு, ஏற்பாட்டாளர்கள் மூன்று அரங்குகளை அமைத்திருந்தனர். அதில் ஒன்று கலை நிகழ்ச்சிகளுக்காகவும், மற்றொன்று விற்பனையாளர்கள் மற்றும் சிறு தொழில்முனைவோருக்காகவும், இன்னொன்று உணவுக்காகவும் ஒதுக்கப்பட்டிருந்தது. விழாவில் பாரம்பரிய பொங்கல் விருந்து பரிமாறப்பட்டது. ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சைவ அசைவ அறுசுவை உணவு வகைகளை பங்கேற்பாளர்கள் உண்டு களித்தனர்.
முற்பகலில் நடைபெற்ற பட்டிமன்ற நிகழ்ச்சி, நகைச்சுவையுடனும் சிந்தனையூட்டும் விவாதங்களுடனும் பார்வையாளர்களைக் கவர்ந்தது. தொடர்ந்து பிற்பகல் முழுவதும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பங்கேற்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலை அமர்வுக்குப் பிறகு நிகழ்ச்சி சுமார் மாலை 7:00 மணியளவில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் லண்டன்—ஃபான்ஷாவே தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் கர்ட் ஹோல்மன் மற்றும் லண்டன் மேற்கு தொகுதியின் மாகாண சட்டமன்ற உறுப்பினர் பெக்கி சாட்லர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து சிறப்பித்தனர்.
அண்மையில் நடைபெற்ற தமிழ் கருத்தரங்கில் சிறப்பாக பங்கேற்ற குழந்தைகளுக்கு பெக்கி சாட்லர் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சி குறித்து லண்டன் ஒண்டாரியோ தமிழ்ச் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் கூறுகையில்: தைப்பொங்கல் விழாவை அறுவடைத் திருநாளாக மட்டுமல்லாது தமிழ் பண்பாட்டையும், ஒற்றுமையும் பிரதிபலிக்கும் தமிழர் திருவிழாவாகவும் கொண்டாடுகிறோம். லண்டன் ஒன்டாரியோவில் சுமார் 500 பேர் இந்த விழாவிற்காக ஒன்றுகூடியது, மொழி எத்தனை வலிமையானது, நமது தமிழ் சமூகத்தின் ஒற்றுமையும், மொழியுணர்வையும் இவை வெளிப்படுத்துகிறது. இங்குள்ள தமிழர்களை ஒருங்கிணைப்பது மட்டுமல்லாமல், உள்ளூர் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதும், இளம் தலைமுறை தங்கள் தமிழ்ப் பண்பாட்டுடன்தொடர்ந்து இணைந்திருக்க வழிவகை செய்வதும் எங்களின் முக்கிய நோக்கமாகும்,” என்று அவர் தெரிவித்தார்
இந்த நிகழ்வு மூன்று செய்திகளை உணர்த்துகிறது!
1 . உலகளாவிய அடையாளம: தமிழ் பற்றுள்ளவர்கள், தமிழ்நாட்டையும், தமிழையும் தங்களோடு கொண்டு செல்கிறார்கள்.
2. பண்பாட்டுப் பெருமை: கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற தத்துவத்தின்படி, தமிழர்கள் உலகளாவிய அன்பையும், தமிழின் தொன்மையையும் பறைசாற்றுகிறார்கள்.
3. மொழிப் பற்று: தமிழ்மொழி பாரதத்தின் சிறந்த கொடை மற்றும் உலகின் தொன்மையான மொழி என எங்கு சென்றாலும் தமிழர்கள் பெருமையுடன் அதை பறைசாற்றுகிறார்கள்.
லண்டன் ஒன்டாரியோ தமிழ் சங்கத்தின் சீரிய பணி பாங்குடன் சிறக்கட்டும், தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வோம்!
தமிழராய் பெருமை கொள்வோம் !
தலைவர், உபதலைவர் மற்றும் இயக்குனர் பெருமக்களுக்கு தினமலரின் வாழ்த்துகள்!
- கனடாவிலிருந்து நமது செய்தியாளர் சுதர்சன்
Advertisement

