/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் அமைப்பு உருவாக்கம்!
/
வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் அமைப்பு உருவாக்கம்!
வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் அமைப்பு உருவாக்கம்!
வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் அமைப்பு உருவாக்கம்!
மார் 13, 2025

வட அமெரிக்காவில் தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், வாசகர்கள், பதிப்பாளர்கள் என இலக்கிய ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் புதிய “வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் அமைப்பு” (North America Tamil Writers Organization) 2025 ஆம் ஆண்டு சனவரி மாதம் இலாப நோக்கமற்ற ஓர் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுச் சிறப்பாக உருவாக்கப்பட்டது. இதனைத் தமிழில் “நடவு” என்ற பெயரில் அழைக்கின்றனர்.
தமிழ் இலக்கியத்தின் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் இணைக்கும் பாலமாகவும், தமிழர் அடையாளத்தின் பண்பாடு வெளிப்பாடாகவும், படைப்பாற்றலின் குரலாகவும் நடவு விளங்குகிறது. வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் அமைப்பு (NATAWO) வட அமெரிக்காவில் தமிழ் எழுத்தை ஊக்குவித்து, எழுத்தாளர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த இணையத்தளத்தை வழங்கி, அவர்களின் படைப்புகளை உலக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை உருவாக்கும் உறுதியுடன் செயல்படுகிறது.
தமிழ் இலக்கியத்தையும், பண்பாட்டையும் வட அமெரிக்காவில் வளர்த்தல், உலகளாவிய தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்துப் படைப்பாற்றலை உற்சாகப்படுத்துதல், தமிழ் மொழியின் பாரம்பரிய செழுமையைப் பேணுதல், தமிழ் மக்களின் பண்பாட்டு அடையாளத்தையும், தமிழ் மரபுவழியிலுள்ள குழந்தைகளுக்கான இலக்கிய மேம்பாட்டையும் உறுதி செய்ய உதவும் குறிக்கோள்களைக் கொண்டுள்ளது.
அமைப்பின் இணையத்தளத் தொடக்கம் ஒரு சில கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளிலிருந்து பல தமிழ் எழுத்தாளர்கள் சேர்ந்து கொண்டனர். முக்கிய எழுத்தாளர்கள், உலக இலக்கிய ஆய்வாளர்கள் கலந்து கொண்டு தமிழ் எழுத்தின் வளர்ச்சி, எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கின்றனர்.
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உலகளாவிய தூதர்கள் - புதிய முயற்சி:
வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் அமைப்பு (NATAWO) தமிழ் இலக்கிய வளர்ச்சியை உலகளாவிய அளவில் விரிவுபடுத்த சர்வதேச தூதர்கள் (Global Ambassadors) பணியாற்றவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துப் பல நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள் நடவுடன் இணைந்துள்ளனர்.
நடவு உலகத் தூதர்கள் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தை உலகெங்கும் பிரபலப்படுத்தும் முக்கியப் பொறுப்பை வகிக்கிறார்கள். அவர்கள் புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்தலும், தமிழ் இலக்கிய நிகழ்வுகளை ஒழுங்கமைத்தலிலும், சர்வதேச இலக்கிய அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தமிழ்ச்சங்கங்களுடன் இணைந்து பணியாற்றுதலும் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுவார்கள்.
சர்வதேச தூதர்களின் முக்கிய பொறுப்புகள்:
● தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தை உலகளவில் விரிவுபடுத்துதல்
● தமிழ் எழுத்தாளர்களுக்கான உலகளாவிய ஒத்துழைப்புகளை உருவாக்கல்
● தமிழ் பேசும் சமூகங்களை இணைத்து, இலக்கிய நிகழ்வுகளை நடத்துதல்
● எண்முறை (டிஜிட்டல்) தளங்களைப் பயன்படுத்தி தமிழ் இலக்கியத்தை உலகளவில் பிரபலப்படுத்துதல்
● புதிய எழுத்தாளர்களுக்கு வழிகாட்டி, அவர்களை வளர்த்தல்
● நடவு-வின் பதிப்புகள், ஆய்வுத் திட்டங்களில் பங்களிப்பு செய்தல்
தமிழ் இலக்கியத்தின் புதிய முகம்:
நடவு-வின் சர்வதேச தூதர்கள், தமிழ் இலக்கியத்தைப் புதிய உச்சிக்குக் கொண்டு செல்ல முனைந்துள்ளனர். அவர்கள், உலக அளவில் தமிழ் எழுத்தாளர்கள் ஒற்றுமையாக இணைந்து, தமிழ் மொழியின் செழுமையைப் பாதுகாக்கவும், பரப்பவும் உறுதியாகச் செயல்படவுள்ளனர்.
சர்வதேச தூதர்கள்: அமெரிக்கா- வைதேகி ஹெர்பர்ட், முருகவேலு வைத்தியநாதன்; கனடா- முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் , பாவலர் மணி புட்பா கிறிட்டி, சொல்லாக்கியன் சு. தீனதயாளன்; மெக்சிகோ- புருஷோத்தமன் அழகிய மணவாளன்; மற்ற நாடுகள்- முனைவர் ச. மோகன், கலைமாமணி முனைவர் சேயோன், பேரா. முனைவர் க. திலகவதி, முனைவர் மு. இளங்கோவன், முனைவர் க. செல்வராஜூ, கவிஞர் விஜயகிருஷ்ணன், முனைவர் ஆ. அழகுசெல்வம், கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, மருத்துவர் குருசாமி அசோகன், முனைவர் மொகமத் மொகிதின், பேராசிரியர் மருத்துவர் ஜெயபாலன் வள்ளியப்பன், பைந்தமிழ்ச் செம்மல் நிர்மலா சிவராசசிங்கம், மற்றும் முனைவர் மு. இராசேந்திரன்.
தமிழ் இலக்கியத்தை உலகளவில் கொண்டு செல்லும் இந்த முன்னோடித்துவ முயற்சிக்குத் தமிழ் ஆர்வலர்கள் உற்சாகத்துடன் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழ் மொழி, அதன் இலக்கிய மரபு, தமிழ் எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கு இது ஒரு முக்கியமான கட்டமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
அமைப்பின் நிர்வாகக் குழுவில் கவிஞர் முனைவர் பாலமுருகன் குப்புசாமி, மணிமேகலை ராமமூர்த்தி, மணிகண்டன் மீனாட்சி சுந்தரம், மணிகண்ட பிரபு, ரவிக்குமார் ஆகியோர் உள்ளனர். நடவு-வின் நிறுவனர்களாக முருகவேலு வைத்தியநாதன், முனைவர் பாலமுருகன் குப்புசாமி, மணிகண்ட பிரபு, ராம்பிரசாத் ரங்கசாமி, சித்தார்த் ஆகியோர் அடித்தளமாக உள்ளனர்.
இதன் இணையத்தள முகவரி https://natawo.org/
YouTube
https://www.youtube.com/@NorthAmericaTamilWriters
https://www.facebook.com/profile.php?id=61573118737447
X-Social
https://x.com/NATAWOrg
https://www.instagram.com/natawo_tamil/
எழுத்தாளர்களால், எழுத்தாளர்களுக்காக, எழுத்தாளர்களின் தமிழ்த்தளம்! “நடவு” என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தமிழ் எழுத்தாளர்களின் புதிய வளர்ச்சிப் பயணத்திற்கு வாழ்த்துகள்!
- நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்
https://drive.google.com/file/d/15wn0mlaonc0Ro8BTy7JRiywq5_pHuH0T/view?usp=drive_web
Advertisement