/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
தமிழ் மரபு கோடைக்கால முகாம் நிறைவு விழா கொண்டாட்டம்
/
தமிழ் மரபு கோடைக்கால முகாம் நிறைவு விழா கொண்டாட்டம்
தமிழ் மரபு கோடைக்கால முகாம் நிறைவு விழா கொண்டாட்டம்
தமிழ் மரபு கோடைக்கால முகாம் நிறைவு விழா கொண்டாட்டம்
ஆக 12, 2024

அமெரிக்காவில், தமிழரின் பாரம்பரிய கலைகளையும் இசைக்கலைகளையும், விளையாட்டுக்களையும் இன்றையத் தலைமுறைக்கு நெகிழ்வடையச் செய்வதற்காக, ஐபாட்டி அமைப்பும் கொம்பு மரபிசை ஆராய்ச்சி மையமும் இணைந்து எட்டு வாரக் கோடைக்கால முகாமை முதன்முதலாக வாசிங்டன் வட்டாரத்தில் நடத்தினர். இந்த முகாம், அமெரிக்காவில் வாழும் தமிழ் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தங்கள் மதிப்புமிக்க கலாச்சாரத்தைப் பற்றி அறியவும், கற்றுக்கொள்ளவும் சிறந்த வாய்ப்பாக அமைந்தது.
முனைவர் ஏ. அழகுசெல்வம் (அழகு அண்ணாவி/அழகுபாரதி) தமிழ் மண் வாசனையுடன் கூடி இதனை இயல்பாக வழி நடத்தினார். அவருக்கு உறுதுணையாக மணிகண்டன், ரேயா குமார், ரோஷினி சுரேஷ், அஸ்வின் பாபு விநாயகம், எழுத்தாளர் விபா விஷா, கவிதா வள்ளியப்பன், ஜோதி ஆகிய ஆசிரியர்களும் போஷிகா நந்தகோபால், அஷ்வினி சுரேஷ் ஒருங்கிணைப்பாளராகவும் நிர்வாகிகளாகவும் சிறப்பாக செயற்பட்டனர்.
தமிழர் மரபுக் கலைகள் குறிப்பாகப் பறை, முரசு, உடுக்கை, மத்தளம், தமுக்கு, உறுமி, தம்பட்டம், சன்னை, அரைச்சட்டி, கொடுகொட்டி, உடல் உடுக்கை, தட்டை, தடாரி, பம்பை, கொம்பு, புல்லாங்குழல், மகுடி, சங்கு, தாரை, நாதசுவரம், ஒத்து, எக்காளம், கொக்கறை, நமரி, திருச்சின்னம், தூம்பு, வில், கோட்டுவாத்தியம், கைமணி, சாலரா, சேகண்டி, கஞ்சம், கைத்தாளம், கொண்டி, கடம் ஆகிய இசைக்கருவிகளும் பயிற்று விக்கப்பட்டன . இன்றைய தலைமுறையினர் இதுபோன்ற கருவிகளைத் தொட்டுக் கற்கும் ஓர் அறிய வாய்ப்பு கிடைத்தது.
மேலும் இசைக்கருவிகள் கொண்டு பொய்க்கால் குதிரை, காவடி, கரகம், மயிலாட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், காளையாட்டம் போன்ற பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. பல்லாங்குழி, சுங்கரக்காய், பம்பரம், பரமபதம், கோலி குண்டு, கில்லியாட்டம், ஓடிப்பிடித்தல், பச்சக்குதிரை, பாண்டி ஆட்டம் போன்ற விளையாட்டுக்களும் கற்றுக் கொடுக்கப்பட்டன.
எட்டு வாரப் பயிற்சியின் நிறைவு விழா, மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆகஸ்ட் 10-ஆம் நாள் சனிக்கிழமை அன்று கொண்டாடப்பட்டது. மாணவர்கள் தாங்கள் கற்றதை மேடையில் மெய்சிலிர்க்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் செய்து பெற்றோர்களையும் பார்வையாளர்களையும் மகிழ்ச்சியடையச் செய்தனர். மாணவர்களின் பெற்றோர்களும், தாத்தா பாட்டியும் மேடையேறி முகாம் ஆசிரியர்களை வெகுவாகப் பாராட்டிப் பேசியது முகாமின் வெற்றியை உறுதிப்படுத்தியது.
விழாவிற்கு வந்திருந்த வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள், கல்வியாளர் முனைவர் சொர்ணம் சங்கர், அமெரிக்காவில் தமிழரின் கலாச்சாரத்தைச் சுமந்து வந்த இவ்வகையான முகாமின் அவசியத்தை உணர்ந்து பாராட்டினர். அவர்கள், இளம் தலைமுறையைப் பாரம்பரியத்துடன் இணைத்து, அவர்களைச் சீறியவர்களாக மாற்றும் முயற்சிகளின் பயனை விவரித்தனர். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களும் நினைவுப் பரிசுகளும் அவர்களின் முயற்சிக்கு ஓர் அங்கீகாரம் ஆகும். புன்னகை நவிர், மூரிய மாறன், கலின் உதயன், செம்மல் நெதி, மதுகை மலர்க்கொடி, நனியிதழ் நறுவை, கோமகள் சாதிரி, பொன்கொடி செவ்வி போன்ற சிறப்புப் பெயர்களும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டன.
நிகழ்ச்சியின் இறுதியில், இந்த எட்டு வாரப் பயிற்சியில் குழந்தைகள் அவர்களாகவே உருவாக்கிய கதைகளை, 'ஐபாட்டி' பதிப்பகத்தின் மூலமாகப் புத்தகமாக வெளியிடும் நிகழ்ச்சியும் அரங்கேறியது. இந்த எழுத்தாளர்களின் நூல்கள் விர்ஜினியாவின் பல நூலகங்களில் இடம் பெறப்போகின்றன.
இம்முகாமின் வெற்றியான நிறைவு விழா, தமிழர் கலைகளின் மேன்மையை அமெரிக்காவில் நிறுவிய ஓர் அங்கமாகவும், தமிழர் மரபினை உலகளாவிய ரீதியில் கொண்டாடும் ஓர் அடையாளமாகவும் அமைந்தது. அமெரிக்காவில் முதன்முதலாக நடைபெற்ற இந்த தமிழ் மரபிசை கலைகள் முகாம், இளம் தலைமுறையினருக்குத் தமிழர் பாரம்பரியத்தின் மீது ஒரு புதிய விழிப்புணர்வை உருவாக்கியது. இது, தமிழர் கலைகளின் உலகளாவிய படிமலர்ச்சியை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான முயற்சி என்ற சிறப்பையும் பெற்றது. இது போன்ற கோடைக்கால முகாம்கள் அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களில் உள்ள ஊர்களிலும் இனி வரும் ஆண்டுகளில் நிகழ்த்த ஐபாட்டி கொம்பு மரபிசை குழுவினர் அதற்கான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும் என்பதே பெற்றோர்களின் விருப்பம்.
தொகுப்பு - நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்
Advertisement