/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
எங்கள் வீட்டுக்கு சிவபெருமான் வந்த கதை
/
எங்கள் வீட்டுக்கு சிவபெருமான் வந்த கதை
அக் 22, 2024

நவராத்திரி கொலு என்பது எங்கள் வாழ்வின் மிக மிக முக்கிய அம்சம். வருடா வருடம் எந்த நாட்டில் இருந்தாலும் வீட்டில் இருக்கும் பொம்மைகள், அந்த ஊரில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு சிறப்பாக அமைத்து விடுவேன்.
இது ஓர் உற்சாகத் திருவிழா!
இந்த ஒன்பது நாட்களும் நண்பர்கள், உறவினர்களை அழைத்து தாம்பூலம் கொடுப்பது, நானும் பலர் வீட்டு கொலுக்குச் சென்று வருவது என அமர்க்களப்படும்.
அவ்வாறே 2024, இவ்வருடமும் கொலுவில் என்ன சிறப்பு கொண்டு வரலாம் என எண்ணுகையில் நவராத்திரிக்கு சில நாட்கள் முன்பு 'சிவன், சிவலிங்கம்' என ஏதோ ஒரு உணர்வு வந்து கொண்டே இருந்தது. இதுவரை வைத்ததே மீண்டும் வைக்காமல் புதிதாக ஒன்று முயற்சி செய்வோம் என தோன்ற அதுவே 'சிவபெருமானாக' இருந்தால்! எனும் உத்வேகத்துடன் தொடங்கினோம்.
முதலில் செய்முறை விளக்கங்களுக்கு யூடியூபில் காணொளிகள் ஆராய்ந்தோம். வேண்டிய பொருட்களைக் குறித்துக் கொண்டு இவையெல்லாம் கிடைத்து, நாம் சரியாக செய்தால் மட்டுமே லிங்கம் நமக்குக் கிடைக்கும் எனத் தோன்றியது. உடனே இங்குள்ள 'ஹாபி லாபி' எனும் கடைக்குச் சென்றோம். கைவினைப் பொருட்கள் தயாரிக்கத் தேவையான பொருட்கள் அங்கு கிடைக்கும்.
நாங்கள் செல்லும்போது இரவு எட்டேகால், இன்னும் பத்தே நிமிடங்களில் கடை மூடும் நேரம். கடவுளே ஓரிரு சாமான்கள் கிடைத்தால் கூட ஓர் நம்பிக்கை வரும் எனத் தயங்கிக் கொண்டு சென்ற எங்களுக்கு சிவன் தன் லீலைகளைத் தொடங்கி விட்டார்!
கடையின் மூலைப்பகுதியில் உள்ள தெர்மாக்கோல், அட்டைகள், உப்புத்தாள் இருக்கும் பகுதிக்கு ஓடினோம்; ஏனெனில் கடை மூடப்போகும் அறிவிப்பு வந்தபடியே இருந்தது. அங்கே பார்த்தால் எங்கள் வருகைக்கு காத்திருந்தாற் போலவே லிங்கம் முழுமையாக அமர்ந்திருந்தது!
சொன்னால் நம்ப மாட்டீர்கள், எங்களது பெரும் வேலையை குறைப்பதற்கோ அல்லது எங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கோ மிகச் சரியான உயரத்தில் வட்டவடிவ இரண்டு அடுக்கும், மேல் அரை பந்து வடிவில் லிங்கத்தின் மேல் பகுதி என மிகக் கச்சிதமாக தயார் நிலையில் உட்கார்ந்திருந்தார்!
அசந்து போய் நின்றோம்; பின் கடையின் இறுதி ஒலிபரப்பு வரவே அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டு பில் போட ஓடினோம். அந்த நாள் இன்றும் என்றும் மறக்காது.
இப்படியாக மேல் லிங்கம் கிடைத்துவிட்டது. வெட்டி, ஒட்டி, மேல் தளம் வழுவழுப்பாக்க உப்புத்தாள் கொண்டு தேய்ப்பது என எந்த சிரமமும் சிவன் எங்களுக்கு வைக்கவில்லை!
அடுத்து பீடம் செய்ய பத்து அடி நீளம் கொண்ட ஸ்டைரோ ஃபோம் ஷீட் வாங்கி அதனை பீடத்திற்கு தேவைப்பட்ட எட்டு வித வடிவில் வெட்டி, அபிஷேக தீர்த்தம் செல்லும்படியான மேல் தளம் செய்து, ஓரங்களை சீர்செய்து பின் ஒன்றன்மேல் ஒன்றாக ஒட்டினோம்.
'பனிலிங்கமாக' வெள்ளை கலரில் காட்சி அளித்த சிவபெருமானை மறுநாள் கருப்பு நிற ஸ்ப்ரே பெயிண்ட் வாங்கி அடித்தோம். அங்குதான் அடுத்த லீலை துவங்கியது.
வீட்டின் பேக்யார்டு எனப்படும் வீட்டின் பின்புறத்தில் என் கணவர், லிங்கத்திற்கு ஸ்பிரே பண்ண பண்ண லிங்கத்தில் சில மாற்றங்கள் ஆரம்பித்தன. அதாவது அங்கும் இங்குமாக சுருங்குவது போல. பயந்து போய் மேலும் ஸ்ப்ரே செய்யாமல் நிறுத்தி விட்டு சரி நாளை பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டோம். என்னடா இவ்வளவு ஆசையா ஆரம்பித்து இது நாலாபக்கமும் ஏதோ மாற்றங்கள் ஆகிறதே. நமக்கு கொடுப்பினை இல்லையா என மனவருத்தத்துடன் உறங்கச் சென்றோம்.
காலையில் முதல் வேலையாக லிங்கத்தை ஓடிச் சென்று பார்த்தால், முற்றிலும் வேறுபட்டு, நாங்கள் செய்தது போல இல்லாமல் வித்தியாசமாக மாறியிருந்தது. ஒன்றுமே புரியவில்லை,
அதாவது முன்பு செயற்கையாக கடையில் வாங்கியது போல் இருந்த லிங்கம், தற்போது நூறு, இருநூறு வருடங்களுக்கு மேலான 'சிவலிங்கமாக' ஓர் உளி கொண்டு செதுக்கியது போல எல்லாப் பக்கங்களிலும் அதற்குத் தேவையான வடிவை தனக்குத்தானே உருவெடுத்துக் கொண்டு அச்சு அசல் கோவில் கர்ப்பகிரகத்தில் உள்ள லிங்கம் போல மாறியிருந்தது புல்லரிக்க வைத்தது!
எங்கள் முயற்சியைக் கேட்டு பார்க்க வந்த எங்கள் பக்கத்து வீட்டு அமெரிக்க நண்பர் 'சொல்லப்போனால் ஸ்ப்ரே பெயிண்டிங்கில் உள்ள கெமிக்கலை, தெர்மாகோல், ஃபோம் போன்றவை தாங்காமல் முழுவதும் சிதைந்தே போகும்' என்றார். ஆனால் எங்களுக்காக சிவபெருமானே தனக்கு தேவையான வடிவில் அழகாய் உருமாறி சரியான வடிவெடுத்து நின்று விட்டார்!
அமெரிக்கர்கள், இந்தியர்கள் என நண்பர்கள் குடும்பமாக நவராத்திரிக்கு வரத் தொடங்கினர். அத்தனை கண்களும் மனதாரப் பார்த்தது இந்த சிவனைத் தான்! உருவான விதத்தையும் ஒன்பது நாட்களும் வந்தோர் போனோர் அனைவரிடமும் கூறினேன், நெகிழ்ந்தும், மகிழ்ந்தும் போயினர்.
அனைவரும் ஏதோ உணர்வும் பிணைப்பும் ஏற்படுகிறது என்றனர். தோழிகள் 'ஏதோ செய்கிறது ஷீலா, எழுந்து போகவே மனமில்லை' என்றனர். இரு தம்பதியினர் கோவிலில் காணிக்கை வைப்பது போல் லிங்கம் அருகே சில டாலர்களை வைத்துச் சென்றனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிவனின் மேல் பாடல்கள் பாடி மகிழ்ந்தனர். எங்களுக்கோ வார்த்தைகளில் விவரிக்க முடியாத சந்தோஷம், மனநிறைவு!
எங்களுக்கு மட்டுமல்ல வந்து பார்த்தவர்களுக்கும், படிக்கும் உங்களுக்கும் சிவனின் அருள் நிச்சயம் உண்டு என நம்புகின்றேன், ஓம் நமச்சிவாய!
- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்
Advertisement