/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
கனடா க்யூபெக் நகரில் உலகின் மிகப்பெரிய குளிர்கால திருவிழா
/
கனடா க்யூபெக் நகரில் உலகின் மிகப்பெரிய குளிர்கால திருவிழா
கனடா க்யூபெக் நகரில் உலகின் மிகப்பெரிய குளிர்கால திருவிழா
கனடா க்யூபெக் நகரில் உலகின் மிகப்பெரிய குளிர்கால திருவிழா
மார் 14, 2024

போன்ஹோமும் பனி மாளிகையும்..
ஒலிம்பிக் போட்டிகளுக்கு 'மாஸ்கோட்' எனப்படும் சின்னம் இருப்பதுபோல் இந்த க்யூபெக் திருவிழாவிற்கும் ஒரு சின்னம் உள்ளது. குளிர்காலத்தை புன்னகையுடன் வரவேற்கும் விதத்தில் சிரித்த முகத்துடன் இருக்கும் 'ஸ்னோமேன்' பொம்மைதான் போன்ஹோம். இதற்கு ப்ரெஞ்சு மொழியில் 'நல்ல மனிதன்' எனப் பொருள். இந்தப் பனி மனிதன் வசிக்கும் பனி மாளிகையை ஒவ்வொரு வருடமும் பிரமாண்டமாக உருவாக்குகின்றனர். வரவேற்பு நிகழ்வுகள் நடைபெறும் இந்த மாளிகையை இரண்டாயிரம் பனிக்கட்டிகள் கொண்டு வடிவமைக்கின்றனர். ஒவ்வொரு பனிக்கட்டியும் கிட்டத்தட்ட நூறு கிலோ எடை கொண்டது.
நாற்பத்தைந்து அடி உயரமுள்ள கரடி, பனித் தோட்டம், இராணுவ வீரர், திரைப்படங்களில் காணப்படும் கற்பனைக் கதாபாத்திரங்கள் என பனியால் செய்த பெரிய சிற்பங்கள் இந்தத் திருவிழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்று. இதில் சில சிற்பங்கள் மீது ஏறி நடக்கலாம். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்கள் இதில் பங்கு கொள்கின்றனர். அந்த வகையில் கனடாவைச் சேர்ந்த எரிக் என்பவர் இந்த ஆண்டு உருவாக்கிய பனி இக்ளூ கட்டிடம் கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. பத்தொன்பது அடி உயரமும், முப்பது அடி சுற்றளவும் கொண்ட இந்த இக்ளூவை 30,000 கிலோவுக்கும் அதிகமான எடைகொண்ட பனிக்கட்டிகளால் உருவாக்கியுள்ளது இவரின் குழு.
நூற்றுக்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு அம்சங்கள்..
'ஸ்னோ ட்யூப்' எனப்படும் வட்டமான ட்யூப்களில் பனிச்சறுக்கு செய்வது, 'ஸ்கேட்டிங்' எனப்படும் பனிச்சறுக்கு விளையாட்டு, பனியில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள சிறிய துளைகளின் வழியாக தூண்டில் போட்டு மீன் பிடிப்பது, 'ஸ்லெட்' எனப்படும் மரக்கட்டை வண்டிகளை நாய்கள் இழுத்துச் செல்ல அதில் சவாரி செய்வது, பனியில் வேகமாக ஓடும் குதிரை வண்டிகளில் சவாரி, 150 அடி உயரமுள்ள பனிச்சறுக்கு மரங்களில் விளையாடுவது, கனடா நாட்டின் புகழ்பெற்ற புட்டின், மேபிள் சிரப் போன்ற உணவு வகைகளை சுவைப்பது, பல்வேறு வகையான பனி விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வது என நூற்றுக்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு அம்சங்களை இந்தத் திருவிழாவில் காண முடியும்.
இவற்றைத் தவிர திருவிழாவின் ஒவ்வொரு சனிக்கிழமையும் வண்ணமயமான இரவுநேர அணிவகுப்பு நடைபெறும். அரை மணி நேரம் நடைபெறும் இந்த அணிவகுப்பில் முன்னூறுக்கும் மேற்பட்ட இசை, நடனம் மற்றும் உடற்பயிற்சி கலைஞர்கள் தங்கள் திறமைகளால் மக்களை மகிழ்விக்கின்றனர்.
உலக சாதனை படைத்த பனிப்படகு பந்தயம்..
குளிர்காலத்தில் உறைந்து காணப்படும் செயிண்ட் லாரன்ஸ் நதியின் வழியே உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களை நகரத்திற்குள் எடுத்துவர, பழங்காலத்தில் க்யூபெக்வாழ் பழங்குடியின மக்கள் பிர்ச் எனப்படும் மரத்தால் செய்யப்பட்ட படகுகளை உருவாக்கினர். இப்போது இந்த படகுகளை பந்தயத்திற்கு உபயோகப்படுத்துகின்றனர். ஆண்கள், பெண்கள் என இருபாலரும் இப்போட்டியில் கலந்து கொள்கின்றனர். மொத்தம் நாற்பது குழுக்கள் கலந்து கொள்ளும் இப்போட்டியைக் காண ஒவ்வொரு ஆண்டும் மக்கள் திரண்டு வருகின்றனர். இந்தப் போட்டியும் திருவிழாவின் முக்கிய அம்சமாகும். 2011ஆம் ஆண்டு 49 குழுக்கள் கலந்து கொண்ட காரணத்தினால் 'உலகின் மிகப்பெரிய பனிப்படகு பந்தயம்' என்ற கின்னஸ் சாதனையை இப்போட்டி நிகழ்த்தியுள்ளது.
உலகப் புகழ்பெற்ற இந்த க்யூபெக் குளிர்கால திருவிழா அடுத்த ஆண்டு பிப்ரவரி 7 முதல் 16 வரை நடைபெறவுள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை இந்திய மதிப்பில் 600 முதல் 900 ரூபாய்.
- நமது செய்தியாளர் ஸ்வர்ண ரம்யா
Advertisement