தூக்கம் உங்கள் கண்களை தழுவட்டுமே: தவறினால் மனநலம் பாதிக்கப்படுமே!
தூக்கம் உங்கள் கண்களை தழுவட்டுமே: தவறினால் மனநலம் பாதிக்கப்படுமே!
PUBLISHED ON : ஜன 25, 2026

கைக்குள் அடங்கும் மொபைல் போன்கள் இன்று நம் பலரின் உறக்கத்தை சிதைத்து வருகிறது. அதிகாலை வரை உறங்காமல் இரவை தொலைத்து விடுகிறோம். இதுபோன்று தொடரும் பழ க்கம் உறக்கமின்மை பிரச்னையாக மாறி, அதுவே மனப்பிரச்னையாக மாறுகிறது என எச்சரிக்கின்றனர் டாக்டர்கள். இதுகுறித்து மனநல மருத்துவர் ஸ்ரீனிவாசன் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது...
இன்றைய சமூகத்தில் அதிகமாக காணப்படும் மனநல பிரச்னைகள் என்னென்ன?
மனச்சோர்வு, மனஅழுத்தம், போதை, டிஜிட்டல் அடிமைத்தனங்கள், துாக்கமின்மை இது அத்தனையும் பரவலாக காணப்படும் மனநல பிரச்னைகள்தான்.
பொறுமையின்மை, வளர்ப்பு முறை மாற்றங்கள், கூட்டுக்குடும்பங்கள் சிதைவு, பெற்றோர் கண்காணிப்பு இன்மை, நகர மற்றும் நவீனமயமாக்கல், ஒப்பீடு, வேலைப்பளு, பொருளாதார நெருக்கடி என இதற்கு பல அடிப்படை காரணிகள் பல உள்ளன.
மனஅழுத்தம் (Stress) மற்றும் மனச்சோர்வு (Depression) இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
மனஅழுத்தம் என்பது தற்காலிகமானது. சூழல்கள், நாட்கள் கடந்தால் குறையும். மனச்சோர்வு நீண்டநாட்கள் தொடரும். வாழ்க்கையின் மீது ஆர்வம் குறைதல், சோகமாக இருப்பது, தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கை இழப்பு போன்றவை அறிகுறிகள். மனச்சோர்வு பாதிப்பில் உள்ளவர்களே தற்கொலைக்கு அதிகம் முயற்சி செய்கின்றனர். இவ்விரண்டில் இருந்தும் சரியான மருத்துவ உதவிகளுடன் கட்டாயம் விடுபட முடியும்.
மனநல பிரச்னை இருக்கிறதா என்பதன் ஆரம்ப அறிகுறிகள் என்ன?
குறிப்பிட்டு இதுதான் என்று கூறமுடியாது. உறக்கமின்மை என்பது பொதுவான அறிகுறி. அதிக வருத்தம், சந்தோஷம், திடீர் தனிமையை விரும்புவது, பழகியவர்களை தவிர்ப்பது, தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கை இழப்பு, சந்தேகம், பயம் போன்றவை இதன் ஆரம்ப அறிகுறிகள். எளிதாக சொல்லவேண்டும் என்றால், இயல்பு நிலையில் இருந்து மாற்றம் ஏற்படுவது. அவர்களை காட்டிலும் உடன் இருப்பவர்களுக்கு முதலில் இம்மாற்றம் தெரியும்.
மொபைல் போன், சமூக ஊடகங்கள் மனநலத்துக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகின்றன?
கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் இதன் தாக்கம், மனநலனில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கவனச்சிதறல் பிரச்னை அதிகம் காணப்படுகிறது, வீடியோ பார்ப்பதில் கூட பொறுமை, சகிப்புத்தன்மை இல்லாமல் போனது. டிஜிட்டல் அடிமைத்தனம், போனோகிராபி அடிமைத்தனம் அதிகரித்துள்ளது.
மனநல சிகிச்சை என்றால் மருந்து மட்டுமா? கவுன்சிலிங், தெரபி ஆகியவற்றின் பங்கு என்ன?
மனநல சிகிச்சை என்பது மிதமானது, நடுத்தரம், தீவிரத்தன்மை என மூன்று நிலைகளில் பார்க்கின்றோம். ஆரம்ப நிலையில், கவுன்சிலிங் போதும். மிதமான நிலையில் கவுன்சிலிங், சைக்கோ தெரபி பல்வேறு நிலையில் தேவைப்படும். தீவிரத்தன்மையில் இவற்றுடன் மருந்துகளின் உதவியும் அவசியம்.
ஒருவர் மனநல மருத்துவரை அணுக தயங்குவதற்கு முக்கிய காரணங்கள் என்ன? அதை எப்படி உடைக்கலாம்?
கடந்த காலங்களை காட்டிலும் தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. புற்றுநோயிலிருந்து மீண்டோம் என்று சொல்வதற்கு உள்ள தைரியம், மனநோயிலிருந்து மீண்டேன் என சொல்ல யாருக்கும் இல்லை. வெளிநாடுகளில் இவை எளிதாக பேசப்படும்; இங்கு, மனநோய் குறித்து பேச பலர் தயங்குகின்றனர். மனநோய் என்பது பலவீனம் அல்ல; அந்த நபர் காரணமல்ல. சூழல்கள், மரபணு, வளர்ப்புமுறை என பல காரணிகள் உள்ளன. இதை பற்றிய புரிதல் அதிகம் தேவை.
தேர்வு நேரம் நெருங்கும் சூழலில், மாணவர்களுக்கு உங்கள் அறிவுரை?
தேர்வு நேரங்களில் பலர் ஞாபகமறதியால் பாதிக்கப்படுவதை காண்கிறோம். இதற்கு முக்கிய காரணம் பயம். பெற்றோர் மதிப்பெண்களை வைத்து அச்சுறுத்தாமல் ஊக்குவிக்க வேண்டும். இறுதி நேர படிப்பு மிக முக்கிய காரணம். பயத்தை விட்டு விட்டு இப்போதிருந்து புரிந்து, திட்டமிட்டு படிக்க துவங்கினாலே நல்ல மதிப்பெண்களை பெறலாம்.
மனநலத்தை பாதுகாக்க பொதுமக்கள் தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகள் என்ன?
''முதலில் சரியான உறக்கம் அவசியம். 8:00 மணி நேரம் சரியான நேரத்தில், ஆழமான உறக்கம் இல்லை என் றாலே மூளை பாதிக்கப்பட்டு படிப்படியாக மனநல சிக்கல்களை ஏற்படுத்தி விடும். தவிர, உடற்பயிற்சி, நடை பயிற்சி, ஆரோக்கிய உணவு முறை வேண்டும். அனைவரும் தனக்கான பொழுதுபோக்கு பழக்கங்களை வைத்துக்கொள்ள வேண்டும். சோசியல் கனெக்ட் எப்போதும் இருப்பதும், தன்னம்பிக்கையுடன் வாழ்வில் இலக்குடன் பயணித்தால் மனநலத்தை பாதுகாக்கலாம்,''
-டாக்டர் ஸ்ரீனிவாசன்
மனநல நிபுணர்
0422-4323201

