/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
சத்யசாய்
/
கண் இரண்டும் வாய் ஒன்றும் ஏன்?
/
கண் இரண்டும் வாய் ஒன்றும் ஏன்?
ADDED : டிச 11, 2007 09:39 PM

பலாப்பழம் இருக்க, பலாக்காயை ருசிப்போமா? இனிமையான சொற்கள் இருக்க கடுமையான சொற்களைப் பிரயோகிக்கலாமா?
அடுத்தவரை மகிழ்விப்பது அறம். அதற்காக நாம் பணம் தேடி ஓடவேண்டாம். நல்ல சொற்களே போதுமானது.
கண்டவற்றுள், கேட்டவற்றுள் பாதியையே பகர வேண்டும் என்பதற்காகவே கண் இரண்டும், வாய் ஒன்றுமாக வார்த்தளித்தான்.
தன்னைக் கல்லால் அடித்தவனுக்கும் இனிய கனியைத் தருகிறது மரம். நம்மைச் சொல்லால் அடிப்பவருக்கு கனிவான சொற்களைத் தரவேண்டும்.
உள்ளத்தில் அன்பு இருந்தால் வார்த்தைகளில் இனிமை, பாலில் ஊறிய பழம்போல இருக்கும்.
வாசிக்கத் தெரிந்தவன் வாசித்தால் புல்லாங்குழலில் கீதம் ஒலிக்கும். தெரியாதவன் ஊதினால் காற்றுதான் வரும். அறிஞர்களின் பேச்சில்தான் பொருள் இருக்கும்.
எந்த ஒரு வார்த்தை இறை சிந்தனையில் ஒருவனை ஈடுபடுத்துமோ அதுதான் அவனுக்கு மந்திரம். மற்றவனுக்கு அந்த வார்த்தை பொருளற்றதாக இருந்தாலும் சரி, மனதை ஒருமுகப்படுத்துவதே மந்திரம்.
ஆன்மிகத்தின் ஆரம்பப் பாடமே பேச்சைக் கட்டுப்படுத்துவது என்பதுதான். பேச்சு மனிதனுக்கு இறைவன் அளித்த படைக்கலன்கள். மற்ற மிருகங்களுக்குத் தன்னைக் காத்துக் கொள்ள விரைந்தோட வசதியான பாதங்களும், கூரான நகங்களும் மற்றும் கொம்புகளும், தந்தங்களும், அலகுகளும் அளித்த கடவுள் மனிதனுக்கு அளித்திருப்பது இனிமையான பேச்சு ஒன்றுதான். இதன்மூலம் எதிரியைப் பலமிழக்கச் செய்து எதிர்ப்புகளைக் களைந்து வெறுப்பின் பல்வகைத் தாக்குதல்களிலிருந்து தப்பி அவற்றை முறியடித்து மனிதனால் செயல்பட முடியும்.