ADDED : மே 16, 2026 03:27 AM

- -நமது நிருபர்- -: பொதுவாக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சில உணவுகள் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். தமிழகத்தை எடுத்துக் கொண்டால் செட்டி நாடு உணவு, திண்டுக்கல் பிரியாணி என பல வகைகள் மக்களை கவருகின்றன.
அதுபோல, கர்நாடகாவில் பிசிபிலேபாத் மக்களால் அதிகம் விரும்பப்படும் உணவுகளில் ஒன்றாக உள்ளது. பக்கத்து மாநிலமான கேரளாவில் அப்பம், புட்டு, கடலை கறி மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் உணவாக இருக்கிறது.
கேரளம் மாநிலத்தின் ஸ்பெஷலான காந்தாரி முட்டை எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வேக வைத்த முட்டை - நான்கு
காந்தாரி மிளகாய் எட்டு - பத்து வரை
சின்ன வெங்காயம் - பத்து
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் துாள் - கால் டீஸ்பூன்
மிளகுத்துாள் அரை டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முட்டைகளை நன்றாக வேக வைத்து, ஓடுகளை நீக்கி விட்டு, மசாலா உள்ளே இறங்குவதற்காக ஆங்காங்கே கத்தியால் லேசாகக் கீறி வைத்துக்கொள்ளுங்கள்.
காந்தாரி மிளகாயை மிக்சியில் போட்டு அல்லது அம்மியில் வைத்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.
அடுப்பை 'ஆன்' செய்து, வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, சூடாக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் கறிவேப்பிலை மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அரைத்து வைத்துள்ள காந்தாரி மிளகாய் விழுது, மஞ்சள் துாள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
மசாலாவிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும் போது, கீறி வைத்துள்ள முட்டைகளை சேர்த்து மெதுவாகக் கிளறவும். முட்டையின் எல்லா பக்கங்களிலும் மசாலா படுமாறு இரண்டு மூன்று நிமிடங்கள் நிமிடங்கள் மிதமான தீயில் வைக்கவும்.
கடைசியாக மிளகுத் துாள் மற்றும் ஒரு டீஸ்பூன் பச்சை தேங்காய் எண்ணெயை மேலே ஊற்றி கிளறி இறக்கினால், மணக்க மணக்க, காந்தாரி முட்டை தயார்.
ஆப்பம், இடியாப்பம், சூடான சாதத்திற்கு சூப்பர் காம்பினேஷனாக இருக்கும்!
