தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/நீங்களும் ஆங்கிலப் பயிற்சியாளர் ஆகலாம்!

நீங்களும் ஆங்கிலப் பயிற்சியாளர் ஆகலாம்!

நீங்களும் ஆங்கிலப் பயிற்சியாளர் ஆகலாம்!


பிப் 24, 2012 12:00 AM

பிப் 24, 2012 12:00 AM

Follow on GoogleFavourite on Google

பிப் 24, 2012 12:00 AM பிப் 24, 2012 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் அனந்தப்பசாமி. குடும்பத்தின் பல சிக்கல்களைக் கடந்து, காரைக்குடியில் எம்.எஸ்சி வரை முடித்துவிட்டான். எதிர்காலத்தைத் தேடி சென்னைப் புறப்பட்டான். ஆனால், அவனால் நினைத்த மாதிரி சிறப்பான வேலையைப் பெற முடியவில்லை. காரணம், அவனது ஆங்கில அறிவு மிகவும் பலவீனமாக இருந்தது. அவனுக்கு உலகமே இருண்டுவிட்டது.

இன்றைய தகவல்தொடர்பு மற்றும் தாராளமய பொருளதார உலகில், ஆங்கிலம் என்றவொரு சக்திவாய்ந்த சாதனத்தின் பயன்பாடு தவிர்க்க முடியாதது. அன்று உலகத்தை ஆண்ட பிரிட்டானியரும் சரி, இன்று ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கரும் சரி, தங்களது வல்லமையால், தமது மொழியை உலகப் பொதுமொழியாக ஆக்கிவிட்டுள்ளார்கள். இன்று எவ்வளவோ திறமைவாய்ந்த பலர், சோபிக்க முடியாமல் போவதற்கு காரணம் அவர்களுக்கு போதுமான ஆங்கில அறிவு இல்லாமையே.

கடந்த பல வருடங்களாகவே, ஆங்கிலத்தை நன்றாக கற்க விரும்பும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, ஆங்கில மொழித்திறன் உடையவர்களுக்கு நல்ல வருமானமுள்ள வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. பலவிதமான வயது நிலைகளை, சமூக பின்னணிகளை, கல்வித் தகுதிகளைக் கொண்ட நபர்கள் ஆங்கிலப் பயிற்சி வகுப்புகளில் சேர்வதால், அவர்களை தகுதிக்கேற்ற விதத்தில் பயிற்சியளிக்க, ஆங்கில பயிற்சியாளர்கள் தயார்படுத்தப்படுகிறார்கள்.

ஆங்கிலப் பயிற்சியாளரின் பணித்தன்மை

ஒரு ஆங்கிலப் பயிற்சியாளரின் பணியானது பரவலான பொறுப்புகளையும், தன்மைகளையும் கொண்டது. ஒரு தனிமனிதரின் திறமைக்கேற்ப செயல்பட்டு அவரை, இலக்கணப் பிழையின்றி ஆங்கிலத்தில் எழுத வைக்கவும், பயமின்றி மற்றவர்களின் முன்னிலையில் பேச வைக்கவும், அவர்களின் உரையாடல் திறனை அதிகப்படுத்துவதுமான ஒரு சவாலான பணியை அவர் மேற்கொள்கிறார்.

சிறந்த தகவல்தொடர்பு

சிறப்பாக ஆங்கிலம் பேசும் திறமையானது, உரையாற்றுதல், ஒரு விஷயத்தை பலரின் முன்னிலையில் விளக்குதல், பேச்சுவார்த்தை, சிக்கல் தீர்த்தல், அறிவைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற பல விஷயங்களுக்கு அவசியம். அதேபோன்று, சிறந்த எழுதும் திறமையானது, அறிக்கை, செயல்திட்டம் தயாரித்தல், விளக்கக் குறிப்பு கையேடுகள் தயாரித்தல், மெமோக்களை எழுதுதல், நோட்டீஸ்கள் தயாரித்தல் மற்றும் அலுவல்ரீதியான தகவல்தொடர்பு போன்ற பல செயல்பாடுகளுக்கு முக்கியம்.

ஆங்கில திறன் வளர்ப்பு பயிற்சியில், தெளிவு, தேவையான நிறுத்தம், குரல் ஏற்ற-இறக்கம் போன்ற பலவிதமான நுணுக்கங்கள் கற்றுத்தரப்படுகின்றன.

ஒரு பெரிய நிறுவனத்தைப் பொறுத்தவரை, சிறப்பான பணி செயல்பாடு என்பது, அத்துறை தொடர்பான அறிவு மற்றும் சிறந்த ஆங்கில புலமை ஆகியவற்றில் அடங்கியுள்ளது.

ஆங்கிலப் பயிற்சி என்பது, ஒரு மனிதரை ஆரம்ப நிலை ஆங்கில அறிவிலிருந்து, சிறந்த மேம்பட்ட நிலையிலான ஆங்கில அறிவுவரை உயர்த்துதல் போன்ற பலவிதமான பரிமாணங்களைக் கொண்டது.

குழு விவாதத் திறமை

ஒரு குறிப்பிட்ட பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும்போதோ அல்லது ஒரு கல்வி நிறுவனத்திற்கு மாணவர்களைத் தேர்வுசெய்யும்போதோ, அவர்களது மொழித்திறனை சோதிக்கும் அளவீடாக, குழு விவாதமே பயன்படுத்தப்படுகிறது. எனவே, இந்த குழு விவாத திறனுக்கு, ஆங்கில மொழி பயிற்சியாளர், மாணவர்களைத் தயார்படுத்துகிறார்.

தன்னிடம் பயிற்சி எடுப்பவர்களை, தொடர்புடைய தலைப்புகளில் நல்ல அறிவுடையவர்களாகவும், மொழித்திறன் உடையவர்களாகவும், நம்பிக்கை உடையவர்களாகவும், முன்முயற்சி எடுப்பவர்களாகவும் மற்றும் தலைமைத்துவப் பண்பு உள்ளவர்களாகவும் உருவாக்கும் பொறுப்பை உடையவர் என்பதை ஆங்கில பயிற்சியாளர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

நேர்முகத்தேர்வு திறன்கள்

ஒருவரின் முழு ஆளுமையை சோதிப்பதற்கான இறுதி செயல்பாடே நேர்முகத் தேர்வாகும். எனவே, பயிற்சிபெறும் ஒருவர் நேர்முகத் தேர்வில் வெற்றிபெறும் வகையில் பல அம்சங்களை ஒரு ஆங்கிலப் பயிற்சியாளர் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. நம்பிக்கை, குணாதிசயம், திறனாய்வு, நடத்தை, குழு உணர்வு, சிந்தனை மற்றும் வெளிப்பாட்டுத் தெளிவு, விரைவான மற்றும் தெளிவான முடிவெடுக்கும் திறன், எண்ணங்கள் மற்றும் அணுகுமுறைக்கான சுய தன்மை, புத்தாக்க சிந்தனை மற்றும் உற்சாகமான மனோநிலை போன்ற பலவித அம்சங்கள் உள்ளடங்கிய ஒருமித்த மனோநிலையை கட்டமைக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு சவாலை சமாளிக்க, மாதிரி நேர்முகத் தேர்வுகளை நடத்தி, மாணவர்களை தயார்படுத்தலாம்.

வாய்மொழி உரையாற்றுதல் பயிற்சி

ஒரு சிறிய அல்லது பெரிய கூட்டத்தின் முன்பாக உரையாற்ற நடுங்குவது, சிறியவர் முதல் பெரியவர் வரை, பலருக்கும் இருக்கும் ஒரு மனநலப் பிரச்சினை. எனவே, அதற்கான நம்பிக்கை, அமைதி மற்றும் தனக்கான உரையின் மீது கவனம் செலுத்துதல் ஆகிய பயிற்சிகளைத் தருவது ஆங்கிலப் பயிற்சியாளரின் முக்கியப் பணி.

பல கார்பொரேட் நிறுவனங்கள், தங்களது பணியாளர்களுக்கு, பொது மேடைகளில் உரையாற்றுத் திறன் மற்றும் Presentation செய்யும் பயிற்சிகளை அவ்வப்போது வழங்குகின்றன. கார்பரேட் வாடிக்கையாளர்களின் தேவையறிந்து, அதற்கேற்ப பணியாளர்களுக்கு பயிற்சியளிப்பது முக்கியம். எனவே, அந்தப் பணிகளுக்கு, குறிப்பிட்ட அனுபவமுடைய ஆங்கிலப் பயிற்சியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

IELTS மற்றும் TOEFL பயிற்சி

உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படும் ஆங்கிலத் தகுதித் தேர்வுகளில் முக்கியமானவை IELTS மற்றும் TOEFL. இத்தேர்வுகளுக்காக, ஆங்கில பயிற்சி மையங்களில் சேருவோர் எண்ணிக்கை மிக அதிகம். இத்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்துதல் என்பது ஆங்கிலப் பயிற்சியாளருக்கு சவாலான பணியாக உள்ளது.

குரல் மற்றும் உச்சரிப்பு பயிற்சி

கால் சென்டர் தொழிலானது உலகளவில் வளர்ந்து நிற்கும் ஒரு தொழில்துறை. இத்துறையில், Voice process அடிப்படையிலான பணி வாய்ப்புகள் பிரதானமானவை மற்றும் ஒரு நிறுவனத்திற்கு அதிக லாபம் தரக்கூடியவை. எனவே, இதற்கேற்ற வகையில் ஒருவருக்கு குரல் மற்றும் உச்சரிப்பு பயிற்சிகளை வழங்க வேண்டியுள்ளது. பிரிட்டன் மற்றும் அமெரிக்க ஆங்கிலத்தின் உச்சரிப்பு வித்தியாசங்களைப் புரிந்துகொள்ளும் பயிற்சிகளும் முக்கியமானவை. இது, ஒருவருக்கு நேரடியான உரையாடல் அனுபவத்தை கொடுக்கும் ஒரு செயல்பாடு. மேலும், கால்சென்டர் வணிகத்தில் முக்கியமான அம்சம்.

கால்சென்டர் ஊழியர்களுக்கான பயிற்சியில் ஈடுபடுவதை பல ஆங்கிலப் பயிற்சியாளர்கள் விரும்புகிறார்கள் மற்றும் வெகு சிலரே, அது அலுப்பு தரும் ஒரு விஷயம் என்று கருதுகின்றனர் என தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆங்கிலப் பயிற்சியாளர் ஆவது எப்படி?

ஆங்கிலப் பயிற்சியாளர் பணியில் சேர்வதற்கு, குறிப்பிட்ட தகுதிகள் என்று எதுவும் கிடையாது. சராசரியைவிட, சிறந்த ஆங்கில பேச்சு மற்றும் எழுத்துத்திறனும், நல்ல இலக்கண(grammar) அறிவும் போதுமானது. ஆங்கில இலக்கியப் பட்டப்படிப்பு தகுதி இருந்தால் நல்லது, அதேசமயம், அது மிகவும் அவசியம் கிடையாது.

உலகளவில் அங்கீகரிக்கப்படும் CELTA(Certificate in English Language Teaching to Adults) சான்றிதழ் இருந்தால், எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் சென்று ஆங்கில பயிற்சியாளராகப் பணியாற்றலாம். இச்சான்றிதழை கேம்ப்ரிட்ஜ் பல்கலை வழங்குகிறது. கற்பித்தல் துறையில் சிறிது அனுபவம் அல்லது முற்றிலும் இல்லாதவர்களுக்கானது இந்த CELTA. அதேசமயம், அனுபவம் இருந்தால், CELTA மூலம் கிடைக்கும் பயன் மிக அதிகம்.

பல வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து, ஆங்கிலம் கற்பிக்க விரும்புபவர்களுக்கு TEFL(Teach English as foreign language) மற்றும் TESOL(Teaching English to speakers of other languages) போன்ற சான்றிதழ் படிப்புகளும் உள்ளன.

சம்பள விபரங்கள்

ஒரு ஆங்கிலப் பயிற்சியாளர் என்பவர் மாதம் ரூ.15,000 முதல் ரூ.1,50,000 வரை பெறுகிறார். பிரிட்டிஷ் கவுன்சிலைப் பொறுத்தவரை, அங்கிருக்கும் பயிற்சியாளர்கள் பெறும் ஊதியம் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையிலானது. ஒருவர், CELTA முடித்தப்பிறகு, DELTA(Diploma in English language teaching to Adults) தேர்வையும் எழுதலாம்.

அனுபவமுள்ள ஆங்கிலப் பயிற்சியாளர்கள், கன்டென்ட் ஜெனரேஷன் மற்றும் மேலாண்மை ஆகிய நிலைகளுக்கு செல்ல முடியும். ஒட்டுமொத்தமாக பார்த்தால், ஆங்கிலப் பயிற்சியாளர் என்ற தொழிலில், கைநிறைய மற்றும் அதற்கும் மேலாகவே சம்பளம் கிடைக்கும்.

பணி வாய்ப்புகள்

ஆங்கிலம் என்பது உலகப் பொதுமொழியாக இருப்பதால், அதை தெரிந்துகொள்வது, முன்னேற நினைக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியம். அது இல்லையேல், நமது திறமையை பலரும் அறியும் வண்ணம் வெளிப்படுத்த முடியாது. எனவே, சிறந்த ஆங்கிலப் பயிற்சியாளருக்கான தேவை மிக அதிகளவில் உள்ளது. இது ஒரு ஆசிரியப் பணி என்பதால், அதற்கான திருப்தியும் கிடைக்கிறது.

நல்ல மொழிப் புலமை உள்ளவர், நல்ல சம்பளத்தில் சிறப்பான பணியைப் பெறுகிறார். இன்றைய நிலையில் பொறியியல் மற்றும் எம்.பி.ஏ போன்ற துறைகளில் உள்ளவர்களும், தங்களது பணியில் அலுத்துப்போய், ஆங்கில பயிற்சியாளர் பணிக்கு வருகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே, ஆங்கிலத் திறன் இருந்து, பயிற்சியாளர் ஆகும் எண்ணமிருந்தால், தனியார் ஆங்கிலப் பயிற்சி மையங்களை அணுகலாம் அல்லது CELTA சான்றிதழ் பெற்று பிரிட்டிஷ் கவுன்சில் சேரலாம் அல்லது சர்வதேச பயணத்தை தொடங்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us