UPDATED : டிச 27, 2024 12:28 PM
ADDED : டிச 27, 2024 12:20 AM

சென்னை : தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தனக்குத்தானே 6 முறை சாட்டையால் அடித்து விநோத போராட்டத்தை நடத்தினார். சென்னையில் பல்கலை., மாணவி பாலியல் பலாத்காரத்தில் போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்களுடன் தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கி உள்ளார். மேலும் தன்னை வருத்தி இந்த போராட்டம் நடத்துவது திமுக அரசுக்கு பாடம் புகட்டவும், மேலும் சாட்டையடி என்பது தமிழ் மண்ணின் மரபுதான் இந்த போராட்டம் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
நேற்று அளித்த பேட்டி
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கோவையில் நேற்று அளித்த பேட்டி:
தமிழகத்தில் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கின்றனரா என்றால், நிச்சயமாக இல்லை. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி, சென்னை சைதையில், தி.மு.க., வட்ட பொறுப்பில் இருப்பவர்.
பல குற்றங்களில் ஈடுபட்ட இவர், தி.மு.க.,வில் சேர்ந்து, முக்கிய பொறுப்பில் உள்ளோருடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளார். ரவுடிகள் அணிவகுப்புக்கு போகக்கூடாது என்பதற்காக, அரசியல் அடையாளம் தேவை. அதை வைத்து, தி.மு.க.,வை போர்வையாக பயன்படுத்தி, மறுபடியும் ஒரு குற்றத்தை செய்துள்ளார்.
தி.மு.க.,வில் கட்சி பொறுப்பு உள்ளதால், போலீசில் விசாரிக்க மாட்டார்கள் என்பதை வைத்து தான், குற்றம் செய்கின்றனர். தி.மு.க., என்ற போர்வை இருந்ததால் தான், இந்த கொடுமையை செய்துள்ளார். அதனால், தான் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை இல்லை.
முதல் தகவல் அறிக்கையான எப்.ஐ.ஆர்., எப்படி, 'லீக்' ஆனது? அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களும், 'நெட்ஒர்க்'கில் இணைக்கப்பட்டுள்ளன. அந்த எப்.ஐ.ஆர்., எப்படி வெளியானது? காக்கி சட்டையை போட்டுக் கொண்டு, இப்படி ஒரு எப்.ஐ.ஆர்., எழுதிய உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அந்த குடும்பத்தையே நாசம் பண்ணிட்டீங்களே.
நீதிமன்றத்தில் இந்த எப்.ஐ.ஆர்., நிற்குமா?
தேசிய கட்சிக்கு மாநில தலைவர் என்ற வெங்காய பதவி பொறுப்பில் இருப்பதால், மரியாதையாக பேசிக் கொண்டிருக்கிறேன்; வீதிக்கு வந்தால் வேறு மாதிரியாக இருக்கும். நான் பேசுவது மோடியை பிரதிபலிக்கும் என்பதால், மரியாதையாக பேசுகிறேன். எப்.ஐ.ஆரை படித்தால் ரத்தம் கொதிக்கிறது. அதனால் தான், ஒரு முடிவு கட்ட வேண்டும் என இருக்கிறேன். எத்தனை முறை பா.ஜ., தொண்டர்களை கைது செய்வீர்கள்? இனி ஆர்ப்பாட்டம் இல்லை; வேறு விதமாகத்தான் 'டீல்' பண்ணப் போகிறோம்.
சாட்டையடி
எனக்கு நானே சாட்டையடி கொடுத்துள்ளேன். முருக பெருமானுக்கு சூரசம்ஹாரம் தீயவர்களை அழிப்பது. என் வீட்டு முன் நின்று, சாட்டையால் ஆறு முறை என்னை அடித்துக் கொண்டேன் . தி.மு.க., ஆட்சியிலிருந்து அகற்றப்படும் வரை, நான் செருப்பு அணிய மாட்டேன். இன்று முதல், 48 நாட்கள் வரை விரதம் இருக்கப் போகிறேன். பிப்ரவரி இரண்டாவது வாரம், ஆறுபடை வீட்டுக்கு நான் போகப் போகிறேன்; முருகனிடம் முறையிடப் போகிறேன்.
ஆரோக்கியமான அரசியல், விவாதம், கட்டுப்பாடு, மரியாதை எல்லாம் எதற்கு? பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலத்தில் எதற்கு மரியாதை கொடுக்க வேண்டும்; இனி கிடையாது.
எனவே, எனக்கு நானே என் வீட்டிற்கு முன்னே சவுக்கடி கொடுத்துக் கொண்டேன். பா.ஜ., கட்சியில் எந்த தொண்டனும் இதை செய்ய வேண்டாம். உங்களோடு இருக்கிறோம் என்பதை மக்களிடம் உணர்த்த வேறு வழி இல்லை.
வெட்கமாக இல்லையா!
குற்றவாளிகளை காப்பது தான் அவர்களது வேலை. நான் ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருந்திருந்தால், சுட்டுத் துாக்கி வீசிவிட்டு சென்றிருப்பேன். அந்த மாதிரி ரத்தம் இது. அரசியலுக்கு வந்ததால், அடங்கி உட்கார்ந்திருக்கிறேன். தேசிய கட்சியின் மாநில தலைவர் என்ற பொறுப்பால் வாயை பொத்திக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்.
இவ்வாறு அண்ணாமலை ஆக்ரோஷமாக பேட்டி அளித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த பின், காலில் போட்டிருந்த 'ஷூ'வை கழற்றி காண்பித்து, ''தி.மு.க., ஆட்சி அகற்றப்படும் வரை, காலில் செருப்பு போட மாட்டேன்,'' என, சபதம் செய்தார்.
'நிகழ்ச்சிகள் கடைசி நேர மாறுதலுக்கு உட்படுவதாக தெரிகிறது' என, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அ.தி.மு.க., போராட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முழு விவரங்கள் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்