ADDED : ஜன 10, 2026 06:43 AM

கத்திரிக்காயை நாம் அன்றாட உணவில் சேர்த்து கொள்வதன் மூலம், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். செரிமான தன்மையை மேம்படுத்துவதுடன், ரத்த அழுத்தத்தையும் குறைத்து, உடலில் தேவையின்றி கொழுப்பு சேருவதையும் தடுக்கிறது. கத்திரிகாயை பயன்படுத்தி குழம்பு, பொரியல் வைத்து இருப்போம். சற்று மாறுதலாக கத்திரிக்காய் காராமணி கறி செய்து பார்க்கலாம்
தேவையான பொருட்கள்
• கால் கப் துருவிய தேங்காய்
• ஒரு டீஸ்பூன் மிளகு
• ஒரு டீஸ்பூன் சோம்பு
• ஒரு டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
• கால் கிலோ கத்திரிக்காய்
• இரண்டு தக்காளி
• ஆறு பல் பூண்டு
• நான்கு பச்சை மிளகாய்
• தேவையான அளவு கறிவேப்பிலை
• இரண்டு பெரிய வெங்காயம்
செய்முறை
மிக்ஸி ஜாரில் கால் கப் துருவிய தேங்காய், மிளகு, சோம்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து பேஸ்ட் போன்று எடுத்து கொள்ளவும். அடுப்பை ஆன் செய்து வாணலி வைத்து எண்ணெய், உளுந்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து நன்கு தாளிக்க வேண்டும். அதனுடன் தோல் உரித்த ஆறு பல் பூண்டு, நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். கறிவேப்பில்லை, தேவையான அளவு மஞ்சள் துாள் சேர்த்து வதக்கி விடவும்.
பின், நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து வதக்கி விட்டு. வாணலியை ஒரு தட்டை வைத்து, ஐந்து நிமிடம் மூடி விடவும். ஐந்து நிமிடத்திற்கு பின் தக்காளி கலவை நன்கு மசிந்த பின், நறுக்கி வைத்திருக்கும் கத்திரிக்காயை அதனுடன் சேர்த்து நன்கு கிளறவும். அப்போது, அடுப்பை குறைந்த சூட்டில் வைத்திருக்க வேண்டும்.
கத்திரிக்காய் நன்கு வெந்தவுடன், அதனுடன் தேவையான அளவு மிளகாய் துாள் சேர்த்து ஒரு முறை கிளற வேண்டும். இஞ்சி பூண்டு விழுதையும் சேர்ந்து மீண்டும், ஐந்து நிமிடம் வாணலியை மூடி வைத்து விடவும். ஐந்து நிமிடம் கழித்து பொடிசாக நறுக்கிய கொத்தமல்லி இலையை துாவி இறக்கினால், சூடான, சுவையான கத்திரிக்காய் காராமணி கறி ரெடி. தயிர் சாதம், சப்பாத்திக்கு சூப்பர் காம்பினேஷனாக இருக்கும்
- நமது நிருபர் - .

