ADDED : டிச 06, 2025 05:30 AM

தினமும் காலை உணவாக வீட்டில் இட்லி, தோசை, பொங்கல், பூரி, சப்பாத்தி என்று சாப்பிட்டு அலுத்து போய் விட்டதா. காரசாரமான, 'பிரேக் பாஸ்ட்' சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா?. கொஞ்சம் வித்தியாசமான டேஸ்டில் செய்யலாமே சில்லி ஆம்லெட்.
தேவையான பொருட்கள்
l ஐந்து முட்டை
l மிளகு பவுடர் இரண்டு டீஸ்பூன்
l உப்பு, எண்ணெய் தேவையான அளவு
l சோள மாவு இரண்டு டீஸ்பூன்
l மைதா மாவு ஒரு டீஸ்பூன்
l மிளகாய் பவுடர் ஒரு டீஸ்பூன்
l நறுக்கிய இஞ்சி ஒரு டீஸ்பூன்
l நறுக்கிய பூண்டு ஒரு டீஸ்பூன்
l இரண்டு பச்சை மிளகாய்
l ஒரு பெரிய வெங்காயம்
l ஒரு குடை மிளகாய்
l தக்காளி சாஸ் இரண்டு டீஸ்பூன்
l சில்லி சாஸ் ஒரு டீஸ்பூன்
l சோயா சாஸ் கால் டீஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் மிளகு பவுடர், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அடுப்பை, 'ஆன்' செய்து தோசை கல்லை வைத்து காய்ந்ததும், முட்டை கலவையை ஊற்றி நன்கு வேக வைத்து எடுக்கவும். பின், சதுரமாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, உப்பு, மிளகு பவுடர், மிளகாய் பவுடர் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்து உள்ள முட்டையை, மைதா மாவு கலவையில் நன்கு பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
பின், நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து தக்காளி, சில்லி, சோயா சாஸ்கள், உப்பு, மிளகாய் பவுடர், மிளகு பவுடர் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு வதக்கவும். பின், பொரித்து வைத்து உள்ள முட்டையை சேர்த்து நன்கு வதக்கி, கொத்தமல்லி இல்லை சிறிதளவு துாவி இறக்கினால் சுவையான, காரமான சில்லி ஆம்லெட் தயார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். டீ, காபிக்கு ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம். அலுவலகத்திற்கு அவசரமாக செல்வோருக்கு, இந்த ரெசிபி பயனுள்ளதாக இருக்கும்
- நமது நிருபர் - .

