UPDATED : அக் 04, 2026 01:55 PM
ADDED : அக் 03, 2026 04:23 AM

படிக்கட்டில் ஏறும்போதோ அல்லது தினசரி நடைப்பயிற்சியின்போதோ திடீரென மூச்சுத்திணறல் ஏற்படுகிறதா?
மூச்சுத்திணறல் என்றால் என்ன?
மருத்துவ ரீதியாக டிசிப்னியா என்று அழைக்கப்படும் மூச்சுத்திணறல், நுரையீரல் நோய்கள், ரத்தசோகை, தொற்றுகள், மனஅழுத்தம் அல்லது உடற்பயிற்சி குறைபாடு போன்ற பல காரணங்களால் ஏற்படலாம். அதேபோல், சில இதய நோய்களும் மூச்சுத்திணறலை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக கரோனரி தமனி நோய் இதய வால்வு பிரச்சனைகள் மற்றும் இதய செயலிழப்பு போன்ற பிரச்சனைகள் சுவாச மண்டலத்தை நேரடியாகப் பாதிக்கக்கூடும்.
எப்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
திடீர் செயல்பாடு குறைவு: முன்பு எந்தவித சிரமமுமின்றி 30 நிமிடங்கள் நடந்துகொண்டிருந்த நீங்கள், தற்போது 10 நிமிடங்களிலேயே அதிகப்படியான சோர்வை அடைவது.
படிக்கட்டு சிரமம்: சாதாரண மாடிகளில் ஏறும்போதே முன்பை விட கடுமையான மூச்சு வாங்குவது. இந்த மாற்றங்கள் புதிதாக தோன்றியிருந்தால் அல்லது நாளுக்கு நாள் அதிகரித்து வந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.
படுத்தவுடன் மூச்சுத்திணறல் ஏற்படுகிறதா?
மூச்சுத்திணறல் எப்போது ஏற்படுகிறது என்பதும் மிக முக்கியமானது. சிலருக்குப் படுத்தவுடன் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். நிம்மதியாகத் தூங்குவதற்காக அவர்கள் பல தலையணைகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் அல்லது இரவில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு விழிப்பார்கள். இதயம் ரத்தத்தை பம்ப் செய்யும் திறன் குறையும்போது, உடலில் திரவம் தேங்கி நுரையீரலின் செயல்பாட்டைப் பாதிக்கிறது. இதனால் படுக்கும்போது இத்தகைய பிரச்சனைகள் உருவாகலாம்.
மூச்சுத்திணறலுடன் கவனிக்க வேண்டிய மற்ற அறிகுறிகள்
* மூச்சுத்திணறல் மட்டுமின்றி, கீழ்க்கண்ட அறிகுறிகளும் உங்களிடம் தென்படுகிறதா என்பதை கவனியுங்கள்:
* காரணமே இல்லாமல் உடலில் ஏற்படும் பலவீனம்.
* பாதங்கள், கணுக்கால் அல்லது கால்களில் வீக்கம் ஏற்படுதல்.
* இதயத் துடிப்பு மிக வேகமாக அல்லது சீரற்ற முறையில் இருப்பது
* மார்பு பகுதியில் இறுக்கம், அழுத்தம் அல்லது அசௌகரியம்.
* திடீர் மயக்கம் அல்லது தலை சுற்றுவது போன்ற உணர்வு.
* தொடர் இருமல் அல்லது மூச்சுவிடும்போது வீசிங் சத்தம் கேட்டல்.
* எதிர்பாராத உடல் எடை மாற்றங்கள்
இந்த அறிகுறிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை இருந்தால் அது கட்டாயம் இதய நோய்தான் என்று அர்த்தமில்லை. இருப்பினும் பல அறிகுறிகள் ஒன்றாக தோன்றினால் மருத்துவ பரிசோதனை அவசியம். ஒருமுறை மூச்சுத்திணறல் ஏற்பட்டாலே ஆபத்தானது என்று அர்த்தமில்லை. ஆனால் காரணம் தெரியாமல் தொடர்ந்து ஏற்படும் மூச்சுத்திணறலை அலட்சியப்படுத்தாமல் கவனிப்பது அவசியம். வயது, மனஅழுத்தம் அல்லது உடல் தகுதி குறைவு என்று முடிவு செய்வதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
