PUBLISHED ON : டிச 30, 2015

எனக்கு, 2016, ஜன., 1ம் தேதி வந்தால் இரண்டு வயது. நேரில் வந்து இனிப்பு தருகிறேன் என்றபோது, சம்பந்தத்தின் குழந்தைத்தனம் தெரிந்தது. காரணம், உண்மையில் அவரது வயது, 87.
கடந்த 2014, ஜனவரி, 1ம் தேதி, மதுரையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையிலிருந்து விலகி, புதுக்கோட்டையிலிருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் இணைந்தேன். அன்று தான், திடீர் மூச்சுத்திணறலால் கிட்டத்தட்ட வாழ்வா சாவா என்ற நிலையில் சம்பந்தத்தை சந்தித்தேன்.
நாள்பட்ட ஆஸ்துமாவால் அவதிப்பட்டதோடு, உயர் ரத்த அழுத்தமும் அவருக்கு இருந்தது. திடீர் மூச்சுத் திணறலுக்கான காரணம், நுரையீரலின் இருபக்கமும் மூச்சுக்குழாயில் சுருக்கம் இருந்தது தான். ரத்தத்தில் பிராணவாயு குறைவாக இருந்ததால், நச்சுக்காற்று அதிகளவில் இருந்தது. இதனால், மூளைக்கு செல்லும் பிராண வாயு குறைந்து, கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதுபோன்ற நிலையில் சில நிமிடங்களை, 'பிளாட்டினம் நிமிடம்' என்போம். மேலும் முதல் ஒரு மணி நேரத்தை, 'கோல்டன் நேரம்' என்போம். அதற்குள் உயிரை காக்க, முழு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மூச்சுத் திணறலை சரி செய்ய, புகை மருந்து கொடுத்தோம். முன்னேற்றம் இல்லாததால், ஐ.சி.யூ.,வில் வைத்து, செயற்கை சுவாச குழாய் பொருத்தினோம். உடனடியாக, ரத்தத்தில் பிராணவாயு அதிகரித்து, நச்சுக்காற்று குறைந்தது. மூளைக்கு செல்லும் பிராணவாயு அதிகமானதால், சுயநினைவு வந்தது.
மூக்கில் குழாய் செலுத்தி, திரவ உணவுகள் கொடுக்கப் பட்டது. இருப்பினும், செயற்கை சுவாசத்தை அகற்ற முடியவில்லை. காரணம், சம்பந்தத்தின் வயது. மேலும், சாதாரணமாக சுவாசிப்பவர்கள், 15 முதல், 18 முறை சுவாசிப்பர். திடீர் மூச்சுத்திணறல் ஏற்படுபவர்கள், குறைந்தது 40 முதல், 45 முறை சுவாசிப்பர். இவர்களுக்கு, உடலிலுள்ள 70 சதவீத சக்தி, மூச்சு விடவே செலவாகுவதால், சுவாசிப்பது சவாலாகிவிடும்.
இந்தச் சவாலான வேலையை, செயற்கை சுவாசக் குழாய் ஏற்றுக் கொள்வதால், நோயாளி நிம்மதியாக உணர்வார். அவ்வப்போது ரத்தத்தில், ஏ.பி.ஜி., எனும், சுவாசத்திற்கான பரிசோதனை செய்வோம். நிமிடத்திற்கு, 15 முறை சுவாசிப்பது சாதாரண நிலை என்றால், நோயாளி 17 முறை சுவாசித்தால், அவரே தனிச்சையாக இரண்டு முறை சுவாசிக்கிறார் என்பது, மானிட்டரில் தெரிந்துவிடும்.
அதைக் கணக்கிட்டு தான், செயற்கை சுவாசக் குழாயை அகற்றுவோம். சம்பந்தம் தீவிர கண்காணிப்பில், படுக்கையிலேயே இருந்ததால், முதுகில் புண், காலில் ரத்தக்கட்டு ஏற்படாமல் இருக்க, கூடுதல் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
நான்கு நாட்கள் கழித்து, செயற்கை சுவாசக் குழாயை நீக்கப்பட்டு, சம்பந்தத்தின் நிலை சற்று சீரானதும், மூக்கையும், வாயையும் சேர்த்து வைத்து, 'நான்இன்வேசிவ் வென்டிலேஷன்' போட்டோம். ஆறாவது நாள், வீட்டிற்கு சென்று விட்டார்.
சமீபத்தில், அவசர மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு சிறப்பாக பணிபுரிந்ததற்காக, நான் பணிபுரியும் மருத்துவமனைக்கு, 'சொசைட்டி பார் எமர்ஜென்சி மெடிசன் இந்தியா' சார்பில், விருது வழங்கப்பட்டது. அதை நான் பெற்ற பிறகு, சம்பந்தம் அந்த விருதை தழுவி சந்தோஷப் பட்டார். கட்டாயம், அவரின் இரண்டாவது பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும்.
- என்.கணேஷ்,
அவசர மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர்,
பிவெல் மருத்துவமனை,
புதுக்கோட்டை.
74027 23400

