PUBLISHED ON : செப் 15, 2024

இரண்டு சக்கர வாகனம் பராமரிப்பு தொழில் செய்யும் 31 வயது இளைஞர் தாங்க முடியாத முதுகு வலியுடன் வந்தார்.
தினமும் பல கி.மீ., வண்டி ஓட்ட வேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது. தொடர்ந்து முழங்கால்களை மடக்கியே வைத்திருந்ததால், தொடைகளில் உள்ள தசைகள் இறுக்கமாகி விட்டன. கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும் இன்று இதே நிலை தான் உள்ளது.
உட்கார்ந்து எழுந்திருக்கும் போது, முதுகு, இடுப்பு, தொடை, முழங்கால் என்று நான்கு தசைகள் ஒரே சமயத்தில் விரிவடையும்.
பல மணி நேரம் ஒரே நிலையில் உட்காருவதால், தொடையில் உள்ள தசைகள் இறுகி விடுகின்றன.
தொடை தசைகளுக்கு மேல் இருப்பது இடுப்பு, முதுகு தசைகள். தொடை தசைகளில் ஏற்படும் இறுக்கம், குனியும் போது, அதற்கு மேல்புறம் உள்ள தசைகளில் அதிகப்படியான அழுத்தத்தை தந்து, சிதைவை ஏற்படுத்தலாம்.
இதற்கு எளிய தீர்வு, தசைகளை 'ரிலாக்ஸ்' செய்து, வலிமையாக்கும் 'ஸ்ட்ரெட்சிங்' உடற்பயிற்சிகள். சிக்னலில் நிற்கும் போது, மொபைல் போன் பார்ப்பதைத் தவிர்த்து, கால்களை முன்பக்கமாக 20 வினாடிகள் நீட்டலாம். வயிறை உள்பக்கமாக இழுப்பது, கைகளை மேல் நோக்கி துாக்குவது, நீட்டுவது என்று சில வினாடிகள் செய்தால், முதுகு தசைகள் ரிலாக்ஸ் ஆகும்.
அலுவலகத்தில் இருக்கும் போது, இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது, முன்பக்கமாக 20 வினாடிகள் கால்களை நீட்டலாம். இதை, ஐந்து தடவை செய்யலாம்.
காலையில் எழுந்ததும் தரையில் போர்வையை விரித்து படுத்து, கால்களை மேல் நோக்கி துாக்க வேண்டும்.
இதே நிலையில் 20 வினாடிகள் இருக்கலாம். இது போல ஐந்து முறை செய்யலாம். சாப்பிட்டு மூன்று மணி நேரம் கழித்து, வயிறை உள்பக்கமாக, முதுகு பகுதியில் இறுக்கத்தை உணரும் அளவிற்கு இழுக்கும் போது, நுரையீரலுக்கும் வயிறுக்கும் நடுவில் இருக்கும் மெல்லிய ஜவ்வு பகுதியும், இடுப்பெலும்பில் இருக்கும் ஜவ்வு பகுதியும் தளர்ந்து, 'ஜாக்கி' காரை துாக்குவது போல முதுகு தண்டை லேசாக துாக்கி தசைகளை தளர்த்தும்.
ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் பிரச்னை வராமல் பாதுகாக்கும். இத்துடன், ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்த அடர் நிற காய்கறிகள், திரவ உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும்.
டாக்டர் எஸ்.கருணாகரன், இயக்குனர், முதுகுதண்டு அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர், எம்.ஜி.எம்., ஹெல்த்கேர், சென்னை.
044 - 4524 2424
info@drkarunasspine.com