
கஸ்துாரி, மதுரை: தினமும் மூன்று வேளை உணவை எந்த இடைவெளியில் சாப்பிட வேண்டும். ஒருவேளை உணவாக பழங்கள் மட்டும் சாப்பிடுவது நல்லதா.
நமது உடலில் கண்ணுக்கு தெரியாமல் 'பயாலஜிக்கல்' கடிகாரம் இயங்குகிறது. பள்ளி, கல்லுாரி பருவத்திலும் வேலைக்கு செல்லும் போது என ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த நேரத்தில் உணவு சாப்பிட்டு அந்த கடிகாரத்தை பழக்கி வருகிறோம்.
உதாரணமாக தினமும் காலை 8:00 மணிக்கு சாப்பிடுவீர்கள் என்றால் அந்த நேரத்தில் செரிமானத்திற்கான அமிலங்கள், ஹார்மோன்கள், சில திரவங்கள் எல்லாம் சுரந்து உணவுக்காக தயாராக இருக்கும். அப்போது சாப்பிட்டால் அந்த உணவு அமிலத்தின் காரத்தன்மையை சமன்படுத்தும். சாப்பிடவில்லை என்றால் அந்த அமிலம் எல்லாம் நீர்த்து போய் உடலுக்கு தொந்தரவு தரும். ஒருநாள் நேரம் மாறுவது என்றால் பரவாயில்லை. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நேரங்களில் காலை, மதியம், இரவு உணவு சாப்பிட்டால் செரிமான பிரச்னை ஏற்படும். தனிநபரைப் பொறுத்து சாப்பிடும் நேரம் மாறுபடும். இல்லையென்றால் அல்சர், செரிமான கோளாறு உருவாகும்.
உணவை அவசரமாக உண்பதும் வயிற்று பிரச்னைக்கு ஒரு காரணம். உணவை சரியாக மென்று சாப்பிடாமல் அவசரமாக உண்பதால் வாயிலுள்ள சுரப்பிகள் சுரந்து செரிமானத்திற்கு உதவ முடிவதில்லை. 5 முதல் 8 நிமிடங்களில் சாப்பிடுவதற்கு பதிலாக 13 நிமிடங்கள் வரை சாப்பிட்டு பழகுங்கள். உண்மையில் செரிமானம் வாயில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. நொறுங்கத் தின்றால் நுாறு வயது வாழலாம்.
மூன்று நேரமும் நார்ச்சத்துள்ள, நீர்ச்சத்துள்ள உணவு, காய்கறி, பழங்கள் எடுத்துக் கொள்ள பழகுங்கள். தனியாக ஒருவேளையாக சாப்பிட வேண்டியதில்லை.
- டாக்டர் ராஜேஷ்பிரபு, வயிறு, இரப்பை, கல்லீரல் நோய் சிறப்பு நிபுணர், மதுரை
பெ.வேலுச்சாமி, தொப்பம்பட்டி: தொண்டை வறட்சிக்கும், டெங்குவிற்கும் தொடர்பு உண்டா
பருவகால பாதிப்புகளை தவிர்க்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். வெப்பத்தை சமாளிக்க பழங்களை பயன்படுத்துகின்றனர். இவை தொண்டை வறட்சியுடன் டெங்கு பாதிப்பின் அறிகுறியை காட்டுகின்றன. குளிர்ந்த நீர், குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும். இந்த அறிகுறி துவக்க நிலையில் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள், உப்பு கலந்து இரவு, அதிகாலையில் வாய் கொப்பளித்து உமிழ்வது நல்ல பலன் தரும்.
- டாக்டர் மு.சிவநந்தினி, யோகா, இயற்கை மருத்துவர், சின்னாளபட்டி
என்.பிரியம்வதனா, போடி: எனக்கு 45 வயதாகிறது. அதிகாலை துாங்கி எழும் போது கண் இமைகள் அதிக நேரம் துடிக்கின்றது. பகலில் துாங்கி எழும் போதும் இப்பிரச்னை உள்ளது. இதனால் கண்ணுக்கு வேறு பாதிப்பு இருக்குமோ என்ற பயமும் உள்ளது. சிகிச்சை ஆலோசனை கூறவும்.
இமைகள் துடிப்பது என்பது 40 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். அல்லது அதிக வேலைப்பளுவின் காரணமாக தசைச்சோர்வு ஏற்பட்டு இம்மாதிரியாக கண் இமை அதிகம் துடிப்பது ஏற்படும். கண்களில் சாதாரண பார்வை திறனை தவிர கூடுதலாக பவர் உள்ளதா, அழுத்தம் உள்ளதா என பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ரொம்ப துாரம் ஓடும் நபர்களுக்கு காலில் சதை பாதிப்பு வருவது போல இதுவும் ஒரு பாதிப்புத்தான். அடிக்கடி ஏற்பட்டால் டாக்டரை பார்த்து, பரிசோதனை செய்வது அவசியம்.
- டாக்டர் கணபதிராஜேஷ், கண் மருத்துவத்துறை தலைவர், தேனி அரசு மருத்துவக் கல்லுாரி, தேனி
எஸ்.மீனலோசனி, ராமநாதபுரம்: பிறந்த குழந்தைக்கு எத்தனை நாட்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் பற்றாக்குறை என்றால் என்ன செய்வது.
பிறந்த குழந்தைளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப்பால் பற்றாக்குறை என்பதே இருக்காது. குழந்தைக்கு தேவையான அளவிற்கு தாய்ப்பால் சுரக்கும். தண்ணீர் கூட குழந்தைக்கு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையான அளவு தண்ணீர் சத்து உள்ளது. தாய்ப்பால் பற்றாக்குறை என பாட்டில் பால் கொடுத்து பழக்க கூடாது.
குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் கிடைக்கிறதா என்பதை குழந்தையை எடை போட்டு பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஒரு குழந்தை ஒரு நாளைக்கு 5 முறைக்கு மேல் சிறுநீர் கழித்தால் அதற்கு போதுமான தாய்ப்பால் கிடைக்கிறது என்பதை உறுதி செய்யலாம்.
-டாக்டர் பி.ஜெகதீசன், குழந்தைகள் சிறப்பு நிபுணர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்
க.சரவணன், சிவகங்கை: தற்கொலை எண்ணம் ஏன் ஏற்படுகிறது. எப்படி மீட்பது.
தற்கொலை எண்ணம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஒரு முறையாவது தோன்றும். எப்போதாவது தோன்றினால் அது தானாகவே சரியாகிவிடும். நமது மூளையில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களால் இந்த எண்ணங்கள் வரக்கூடும். மனநல பிரச்னை உள்ளவர்களுக்கு, போதைக்கு அடிமையானவர்களுக்கு, குடும்ப வரலாற்றில் தற்கொலை நிகழ்வு உள்ளவர்கள், குணப்படுத்த முடியாத நோய் உள்ளவர்கள், அதிக அவமானங்களை சந்தித்தவர்கள், உடல் மற்றும் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் அடைந்தவர்கள், காதல் மற்றும் தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்கள் அதிகம் முயற்சிக்கின்றனர்.
அவர்களை மீட்பதற்கு அவர்களிடம் அன்பாக பழக வேண்டும். தனிமையில் இருக்க அனுமதிக்கக்கூடாது. வீட்டில் உள்ள ஆயுதங்கள், மருந்து போன்றவற்றை அவர்கள் கண்ணில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மனநல மருத்துவரின் ஆலோசனைப்படி அவரின் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும்.
- டாக்டர் முகமது ரபி, மனநல மருத்துவர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை
பாலசுப்ரமணியன், ஸ்ரீவில்லிபுத்துார்: எனக்கு 52 வயதாகிறது. எனது 2 கால்களிலும் வீக்கம் ஏற்படுகிறது, தவிர்க்க என்ன செய்ய வேண்டும்.
ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் கால்களில் வீக்கம் ஏற்படுகிறது. இரவில் துாங்கினால் காலையில் இவ்வகையான வீக்கங்கள் குறைந்து விடும். கால்களில் நிலையான வீக்கம் இருந்தால் ரத்தத்தில் உப்பு சத்து, சர்க்கரை அளவு எவ்வளவு உள்ளது என்பதை பார்த்தும், ரத்த அழுத்தம் இருந்தால் மருத்துவம் பார்க்க வேண்டும்.
உணவில் முள்ளங்கி, வாழைத்தண்டு பருப்பு கூட்டு, சுரைக்காய், பூசணிக்காய் முதலிய நீர்ச்சத்துள்ள காய்கறிகளை சேர்த்து கொள்ளலாம். சித்த மருந்துகளை டாக்டர்களின் ஆலோசனைப்படி எடுத்து கொள்ள வேண்டும்.
- சுந்தரராஜ மன்னன், சித்த மருத்துவர், அரசு மருத்துவமனை, ஸ்ரீவில்லிபுத்துார்