PUBLISHED ON : நவ 13, 2011

சிறு வயதிலேயே தோன்றும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பார்வைகுறைபாடு,தோல் நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தியின்மை, ரத்தசோகை, பெண்களுக்கு மாத விலக்கு கோளாறுகள், மகப் பேறின்மை போன்ற பல நோய் களும் எதிர்கால குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிடுகின்றன. குழந்தைப்பருவத்திலேயே
ஊட்டச்சத்து குறைபாடு நோய்கள் தோன்றிவிடுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பல்வேறுவகையான பழங்களையும், காய்கறிகளையும் உண்டுவந்த நமது பாரம்பரியமானது துரித உணவினாலும், சமைத்த உணவினாலும் நிலை தடுமாறி, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள இயலாமல், சத்து மாத்திரைகளையும் சத்து டானிக்குகளையும் சிறுவயது முதலே எடுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். பிறந்த குழந்தைகள் கூட தாய்ப்பாலை குடிக்கும் முன்பே சொட்டு மருந்துகளை உட்கொள்ளத் தொடங்கிவிடுகின்றன. புராணங்களிலும், வேதங்களிலும் பல்வேறு வகையானபழங்களையும் அவற்றின் பயன்களையும் நாம் புரிந்துகொள்ளும் வண்ணம் கதைகளாக சொல்லியுள்ளனர். மாம்பழம், நெல்லி, ஆப்பிள், நாவல் போன்ற பல பழங்களும், பல்வேறு வகையான சத்துக்களை உள்ளடக்கியுள்ளன.
நாம் உட்கொள்ளும் பழங்கள் அனைத்து நாட்களிலும் கிடைக்கக்கூடியதாகவும், மிகவும் குளிர்ச்சியினால் சளித்தொல்லை மற்றும் மலச்சிக்கலை தவிர்க்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அத்துடன் அனைத்து தரப்பினரும் உட்கொள்ளும் வண்ணம் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் அன்றாட உணவில் ஏதேனும் ஒரு வகையில் பழங்கள் சேர்க்கப்படுகின்றன. அதேபோல் நாகரீகத்தில் பாரம்பரியமிக்க நாமும் பழங்களை அடிக்கடி உட்கொள்வது அவசியம். பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கி, தோலுக்கு நல்ல நிறத்தையும், மினுமினுப்பையும் தருவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கண் பார்வையை தெளிவாக்கி, உடலில் கொழுப்புகள் சேராமல் தடுத்து, இதயத்தை காக்கும் அற்புத பழம் ஆப்ரிகாட் என்ற துருக்கி ஆரஞ்சு.
புருனஸ் ஆர்மெனியேகா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரோசேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறிய மரங்களின் நன்கு பழுத்த ஆரஞ்சு நிற பழங்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன. பழங்களிலுள்ள வானிலிக் அமிலங்கள் மற்றும் ரூப்பின் என்ற நறுமண எண்ணெய் கை, கால் வலியை நீக்குகிறது. வைட்டமின் ஏ பார்வை திறனை அதிகப்
படுத்துகிறது. இரும்புச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின்கள் ரத்த உற்பத்தியை அதிகரிக்கின்றன. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது. இதில் அடங்கியுள்ள நார்ச்சத்தானது மலச்சிக்கலை நீக்குகிறது. கரோட்டினாய்டுகள் எல்.டி.எல். என்னும் கெட்ட கொழுப்பை நீக்கி, இதய நோயை தடுக்கின்றது. இதிலுள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீர்செய்கிறது. லைகோபின் என்னும் சத்தானது செல் முதிர்வை தடுக்கிறது. இதிலுள்ள டிரிப்டோபேன்கள் நரம்புகளை வலுப்படுத்துகின்றது. தினமும் 1 அல்லது 2 ஆப்ரிகாட் என்ற துருக்கி ஆரஞ்சுப் பழங்களை இரவில் சாப்பிட்டு வர பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேருவதுடன் செல் அழிவும் கட்டுப்படுத்தப்படும். மலைவாழைப்பழம்-1, ஆப்ரிகாட்-4 ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, தயிர்-அரை கோப்பை கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து, இரவில் படுக்கும்பொழுது சாப்பிட்டுவர பார்வைதிறன் அதிகரிப்பதுடன் தோல் மினுமினுப்பு உண்டாகும்.
-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை, 98421 67567.
