PUBLISHED ON : மே 18, 2025

பல குழந்தைகள் அடிக்கடி காய்ச்சல், சளி, தொண்டை வலி போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுவர். பெரும்பாலான சமயங்களில் சாதாரண தொற்று தானே என்று நினைப்போம். ஆனால், இது பல நேரங்களில், Primary Immunodeficiency Disorders - PIDs எனப்படும் மரபணு சம்பந்தப்பட்ட நோயாக இருக்கலாம்.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சாதாரண தொற்றும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை தர வேண்டிய அளவிற்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக, உடல் நல குறைபாடுகள், வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படலாம். நம் நாட்டில், உறவினர்களுக்குள் திருமணம் அதிகம் நடப்பதால், இந்த நோய் பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
அத்துடன், 1 வயதிற்குள் மரணிக்கும் குழந்தைகளில், PIDs ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். எனவே, மரபணு பரிசோதனை செய்வது மிகவும் அவசியம்.
இது, குழந்தைகளை மட்டுமல்லாது பெரியவர்களையும் பாதிக்கும். பலருக்கு 25 வயதிற்கு மேல் தான் நோய் இருப்பதே தெரிய வரும். நோய் எதிர்ப்பு அணுக்கள் நம் அணுக்களையே அழிக்கும் ஆட்டோ இம்மியூன் கோளாறு, அலர்ஜிகள், நீண்ட கால நோய்கள் என்று தவறாக புரிந்து கொள்வதால், பிரச்னைகளுடனேயே வாழ வேண்டியுள்ளது.
அடிக்கடி சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூச்சு பிரச்னைகள், தோல் புண்கள், குணமடையாத காயங்கள், நெஞ்சு வலி, நீண்ட கால நுரையீரல் தொற்றுகள், வளர்ச்சி குறைபாடு, உடல் எடை குறைவு உள்ளிட்டவை ஏற்படலாம்.
இந்த அறிகுறிகள் நீண்ட காலமாக இருந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
மரபணு பரிசோதனைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சோதனைகள் மூலம் PIDsகளை முன்கூட்டியே கண்டறியலாம்.
குழந்தைக்கு PIDs உறுதியானால், குழந்தையின் உடன் பிறந்தவர்கள் உட்பட வீட்டில் அனைவரும் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
முறையான மருத்துவ சிகிச்சையால் குழந்தைகள் ஆரோக்கியமாக வாழலாம். மரபணு ஆலோசனை மூலம் PIDs இருப்பதற்கான வாய்ப்பை மதிப்பீடு செய்யலாம்-. முன்கூட்டியே சிகிச்சை துவங்கினால், குழந்தைகள் இயல்பான வாழ்க்கை நடத்தலாம்.
டாக்டர் ரேவதி ராஜ்,
குழந்தைகள் நலம் மற்றும் புற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவ ஆலோசகர்,
அப்பல்லோ கேன்சர் மையம், சென்னை
044 - 61151111apollocancercentres@apollohospitals.com